நியூட்ரினோ கடலில் வாழ்க்கை | Dinamalar

நியூட்ரினோ கடலில் வாழ்க்கை

Added : அக் 18, 2016 | கருத்துகள் (9)
Advertisement
நியூட்ரினோ கடலில் வாழ்க்கை

தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் 2014ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு, 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 'இந்திய நியூட்ரினோ மையத்திற்கு' ஒப்புதல் அளித்தது.இந்த ஆய்வகத்தால் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என, ஒரு சிலரால் எந்த அடிப்படை ஆதாரமின்றி எழுப்பப்பட்ட செய்திகளால், இத்திட்டம் செயல்படுத்த முடியாமல் முடங்கியுள்ளது.இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியாமல் போனது, நமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பான, உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்த மிகப்பெரிய திட்டத்தை, கடந்த 20 மாதங்களாக கிடப்பில் போட்டது வருந்தத்தக்கது.
கண்ணுக்கு தெரியாத நியூட்ரினோ : நியூட்ரினோ என்றால் என்ன? இந்த ஆய்வகத்தில் நடத்தப்பட உள்ள ஆராய்ச்சியின் தன்மை என்ன? இந்த ஆய்வினால் ஏதாவது ஆபத்து உள்ளதா மற்றும் பயன் என்ன? என்ற வினாக்களுக்கு விடையை ஆராய்ந்து கூறுவது அறிவு சார்ந்த ஒன்று.இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அண்டம், விண்மீன்கள், பறவைகள், மரங்கள், கல், மண், தாவரங்கள் ஆகிய அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆனது என தத்துவவாதிகள் கருதினர்.பின்னர் வேதியியல் புரட்சி ஏற்பட்ட போது நெருப்பு என்பது ஒரு வினையே. அது அடிப்படை பொருள் அல்ல என்ற கருத்தினை நிருபித்தனர். இம்மாதிரியான படிப்படியான புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில், அணுக்கள் தான் அடிப்படை துகள் என கருத ஆரம்பித்தனர். அணுவை பிரிக்க முடியாது, அணு தான் இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை பொருள் அல்லது அலகு என்று சில காலம் கருதப்பட்டது. பின்னர் ரூதர்போர்டு போன்ற விஞ்ஞானிகள் அணுவை பிளந்து, ஆராய்ச்சி செய்த போது அணுவுக்குள் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் முதலிய அடிப்படை துகள்கள் உள்ளது என 1920ம் ஆண்டுகளில் உறுதி செய்தனர். இந்த ஆராய்ச்சியினை தொடர்ந்து இன்னும் சில அடிப்படை அணுத்துகள்கள் கண்டறியப்பட்டன. இவற்றுள் ஒன்று தான் நியூட்ரினோ.இது 8 வகையாக உள்ளது என விஞ்ஞானிகள் நிரூபித்தனர். இந்த நியூட்ரினோ நவீன இயற்பியல் அறிவுப்படி, 60 அடிப்படை துகள்களில் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு கன சென்டிமீட்டர் அளவில், சுமார் 300 நியூட்ரினோ உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
அறிவியல் அறிவு குறைவு : இப்பிரபஞ்சத்தில் நியூட்ரினோ அங்கும் எங்கும் பரவி பாய்ந்தபடி உள்ளன. இவை நம் பிரபஞ்சம் உருவான நேரத்தில், பிக் பேங் (பெரு வெடிப்பு) போது உற்பத்தியானவை. இவ்வாறு உருவான நியூட்ரினோக்களை பற்றிய நமது அறிவு மிகமிகக் குறைவு.இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே, நம் உடலின் வழியாக பல கோடிக்கணக்கான நியூட்ரினோ பாய்ந்து கொண்டிருக்கின்றன, என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.ஒவ்வொரு வினாடியும் நமது பெருவிரல் நகத்தின் அளவு 650 லட்சம் நியூட்ரினோ ஊடுருவி செல்கின்றன. இந்த பிரபஞ்சம் உருவான போது தோன்றிய நியூட்ரினோக்களை தவிர, இன்னும் பல நிகழ்வுகள் நியூட்ரினோ மூலமாக உற்பத்தி செய்கின்றன.
நியூட்ரினோவில் வாழ்க்கை : விண்வெளியில் இருக்கும் எல்லா விண்மீன்களும் நியூட்ரினோவை உற்பத்தி செய்கின்றன. நமது சூரியனும் ஒரு விண்மீன். சுமார் 1.7 ஐ அடுத்து 38 பூஜ்ஜியங்களையிட்டால் வரும் எண்ணிக்கை அளவு நியூட்ரினோ ஒவ்வொரு நொடியும் உற்பத்தியாகின்றது. மற்றும் கோளக்கதிர்கள் காற்று மண்டலத்தில் வினை புரியும் போது உருவாகின்றன. இது மட்டுமல்ல, நமது உடலில் உள்ள பொட்டாசியம் என்னும் தாதுப்பொருள் நியூட்ரினோக்களை வெளியிடுகின்றன. நம்மை சுற்றியே சுமார் 39,000 நியூட்ரினோவை, நாம் ஒவ்வொரு வினாடியும் நம் உணவில் உமிழ்கிறோம். ஆகவே நாம் நியூட்ரினோ கடலில் தான் வாழ்கிறோம்.
ஆய்விற்கு சிறந்த இடம் : நியூட்ரினோக்கள் பிரிக்க கூடிய தன்மை உள்ளவை. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான மலை, சிறந்த தேர்வாக உள்ளது. இதன் கடினப்பாறைக் கவச அளவு எல்லா திசைகளிலும் சுமார் 1 கி.மீ., ஆகவே தான் இம்மலையை தெரிவு செய்துள்ளனர். மற்றும் மலைப்பகுதி நில நடுக்கம் ஏற்படும் பகுதியில் இருக்க கூடாது. இந்த ஆய்விற்கு ஏற்றாற் போன்று இருப்பதனால் தான், இப்பகுதியை தேர்வு செய்துள்ளனர். இதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில், பல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நீர் முலம் மின்சாரம் எடுக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உலக அளவிலான ஆய்வுகள் : இந்திய நியூட்ரினோ அமைப்பின் (ஐ.என்.ஓ.,) ஆய்வு, காஸ்மிக் கதிர்களால் உருவாக்கப்படும் நியூட்ரினோக்களை ஆராய உள்ளது. 3 வகையான நியூட்ரினோக்களின் எடை பற்றிய ஆய்வினால் இந்நோக்கம் உலக அளவில் சிறந்து விளங்க மிகவும் வாய்ப்புள்ளது.இந்த பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற பரிமாண மாற்றங்களை ஆராய்ந்து, அதற்கான காரணங்களை கண்டறிவதற்கான இத்திட்டம் செயல்படுத்த தாமதமானால், மற்றநாடுகள் நியூட்ரினோ ஆராய்ச்சியில் நம்மை பின் தள்ளிவிடும்.
எதிர்பார்ப்பில் விஞ்ஞான உலகம் : ஒரு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நல்ல எண்ணம் கொண்டவர்கள் போன்று, தவறான பல கருத்துக்களை பரப்பிவிடுகின்றனர். இது எந்த ஒரு கதிரியக்க தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 17 மாதமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தற்போது இந்த தாமதம் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஊக்கத்தையும், நம் எதிர்பார்ப்பையும் படிப்படியாக குறைத்துள்ளது. சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி செய்வது மட்டும் போதுமானது அல்ல; அதை குறிப்பிட்ட காலத்தில் செய்தல் வேண்டும்.இம்மாதிரியான ஆராய்ச்சிகளை சீனாவில் உள்ள சியாங் என்ற இடத்தில், 2020 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நியூட்ரினோ திட்டத்தை, விரைவில் நம் அரசு செயல்படுத்த வேண்டும் என விஞ்ஞான உலகம் எதிர்பார்ப்பில் உள்ளது.
- பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன்நியூட்ரினோ திட்ட ஆராய்ச்சி ஒத்துழைப்பாளர், 94428 00572

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X