ஒரு பழைய கதையும், அது இப்போது ஏற்படுத்திய சந்தோஷக்கதையும்...| Dinamalar

ஒரு பழைய கதையும், அது இப்போது ஏற்படுத்திய சந்தோஷக்கதையும்...

Updated : நவ 12, 2016 | Added : நவ 12, 2016 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஒரு பழைய கதையும், அது இப்போது ஏற்படுத்திய சந்தோஷக்கதையும்...

கடந்த டிசம்பர் மாதம் நமது நிஜக்கதை பகுதியில்' அது ஒரு மறக்கமுடியாத செவ்வாய்' என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த நிஜக்கதையை தயவு செய்து படித்துவிட்டு பின் புதுக்கதையை தொடரவும்...
01/12/2015 ந்தேதி செவ்வாய் கிழமை அதிகாலை முதலே சென்னையில் மழை பெய்யத்துவங்கியது.

வழக்கமாக பெய்யும் கனமழைதான், விட்டதும் வேலைக்கு கிளம்புவோம் என காத்திருந்தேன்,ஆனால் குழாயை திறந்துவிட்டது போல மழை கடுமையாக பெய்தது.எந்த மழைக்கும் துளிநீர் கூட தேங்காத நான் வசிக்கும் சைதாப்பேட்டை தெருவில் முதலில் மழைநீர் தேங்கியது, பின் ஆறு போல ஒடியது.


கணுக்கால் அளவு ஒடிய நீரில் வேடிக்கையாக போய்வந்து கொண்டிருந்தவர்கள் மழைநீர் திடீரென முழங்காலளவு இடுப்பளவு என்று ஏறிக்கொண்டே போக அனைவரது முகத்திலும் கலவர ரேகை, ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்ற பயமும்,பீதியும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஏற்பட்டது.

சொல்லிவைத்தாற் போல மின்சாரம் நின்று போய்விட ஒரு பொட்டு வௌிச்சம் இல்லாமல் கும்மிருட்டு, வௌியே மழை பெய்யும் சத்தமும் வீட்டை சுற்றிலும் பெருக்கெடுத்து ஒடும் தண்ணீரின் சத்தமும்தான் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் போன் நெட்வொர்க்கும் கட்டாகிவிட வௌிஉலக தொடர்பு இல்லாமல் போனது .அந்த நேரம் ஐயோ காப்பாற்றுங்கள் என்ற அலறலுடன் தெருவில் ஆண்களும் பெண்களும் ஒடிக்கொண்டிருந்தனர்.
கீழ்தளத்தில் உள்ளவர்களின் வீடுகளில் எல்லாம் வெள்ளம் புகுந்து துவம்சம் செய்துவிட்டது. எனது வீடும் கீழ்தளமே என்றாலும் தண்ணீர் உள்ளே வரவா? வேண்டாமா? என தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டிருந்தது பின் வைத்திருந்த தடுப்புகளை எல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டு வந்தது.

தெருவில் ஒடும் மக்களுக்கு அடைக்கலம் தருவோம் என வீடு கொள்ளுமளவு மக்களை உள்வாங்கிக்கொண்டோம்,வீட்டில் இருந்த சமையல் பொருட்கள் அனைத்தையும் செலவழித்து வந்தவர்கள் பசியாற்றினோம்.
தண்ணீரின் அளவு மேலும் கூடியது கூடவே செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிட்டது, ஜாபர்கான் பேட்டை மூழ்கிவிட்டது, இன்னும் நிறைய தண்ணீர் வருகிறது அனைவரும் உயிர்தப்ப மொட்டைமாடிக்கு ஒடுங்கள் என்று அபாய அறிவிப்பு வர நாங்களுமே அகதிகளாகிப்போனோம்.

விடிய விடிய தண்ணீரின் அளவு கூடுவதும் குறைவதுமாக யாருக்குமே துாக்கம் இல்லை, கைக்குழந்தைகள் பால் உணவு கிடைக்காமல் பசிக்கு வீறீட்டு அழுதது, பெற்ற தாய்மார்களோ கையறு நிலையில் கண்ணீர் உகுத்தனர்.
விடிந்ததும் அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று விடிந்து பார்த்தால் வீட்டு வாசலில் தண்ணீர் அதன் கோபம் குறையாமல் ஒடிக்கொண்டிருந்தது.

பீரோ,டி.வி.,மெத்தை,நாற்காலி,சிலிண்டர் என்று என்னன்னவோ பொருட்கள் மிதந்து சென்றன.எங்கு இருந்தோ கயிறுகட்டிக்கொண்டு உயிரை பணயம்வைத்து வந்த இளைஞர்கள் ரொட்டியும் தண்ணீரும் தந்து உதவினர்.வௌியே சொல்லமுடியாத பல அவதிகள் அன்று, கழிவுகள் எல்லாம் வீட்டிற்குள் வலம் வந்தது அதில் ஒன்று.
தொடர்புகொள்ளமுடியாத அபாயத்தில் இருப்பதாக அலுவலகம் போட்ட பட்டியலில் முதலில் என் பெயர் இருக்கவே என் குடும்பத்தை மீட்டுவரச்சொல்லி நிர்வாகம் போட்ட உத்திரவில் ஊழியர்கள் எப்படியோ தேடிவந்தனர்.

மாற்றுத்துணி எடுக்கக்கூட நேரமில்லாமல் வீட்டை அப்படியேவிட்டுவிட்டு வெளியேறினோம்.நான் எடுத்துக்கொண்ட ஒரே பொருள் எனது கேமிராதான்.எண்பது வயதைத்தாண்டிய தாயார் தண்ணீரின் இழுவைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் தடுமாறினார்கள்.
சரி தோளில் துாக்குவோம் என்று முயற்சி செய்த போது தோளில் சுளீர் என ஒரு வலி, வலது கை தோள்பட்டைக்கு கீழ் செயலிழந்தது போன்ற நிலை, இப்போது நானும் என் தாயின் நிலையில் தண்ணீரின் நடுவே செயலிழந்து நின்று கொண்டிருந்தேன்.

ஏரி உடைந்துவிட்டது ஒடுங்கள் ஓடுங்கள் என்றார்களே தவிர எந்தப்பக்கம் ஒடுவது என்பது என்றே தெரியாத அவல நிலை.வருவது வரட்டும் என்று ஏதோ ஒரு திசையில் மார்பளவு தண்ணீரில் நடந்து கொண்டிருந்த போது சக ஊழியர் சுரேஷ் கண்ணா என் தாயாரை ஒரு குழந்தையைப் போல தோளில் துாக்கிக்கொள்ள,என்னை மகனும் மனைவியும் கைத்தாங்கலாக வழிநடத்திச் சென்றனர்.
என்ன நடந்தாலும் சரி என்ற மனநிலையில் அரை கிலோமீட்டர் துாரத்தை ஒடும் வெள்ள நீரில் ஒரு மணி நேரம் ஊர்ந்து நடந்து கடந்தது மறக்கமுடியாத மறுவாழ்விற்கான அனுபவம்.

மறுகரையில் நின்று கொண்டிருந்த மீட்பு வாகனத்தில் ஏறி பத்திரமான இடத்தை அடைந்த பிறகுதான் தெரிந்தது சென்னையில் பெரும்பாலோனாரின் வாழ்க்கை அன்று உத்திரவாதமில்லாமலே இருந்தது என்பது.


நன்றாக ஒய்வு எடுங்கள் என்று ஒரு அறையை ஒதுக்கிக்கொடுத்தனர்.எங்கே ஒய்வு எடுப்பது வழியெங்கும் பார்த்த மக்களின் மரண பயமும் அவலமுமே கண்முன் ஒடியது.
இருக்க இடமில்லாமல் உடுக்க உடை இல்லாமல் ஒரு வாய் சோற்றுக்கு வழி இல்லாமல் அப்படியே யாராவது சோறு போட்டால் கூட ஏந்தி வாங்க ஒரு தட்டு கூட இல்லாமல் தவிக்கும் மக்களின் வேதனையை வெளிப்படுத்தி அவர்கள் நிவாரணம் பெற வகை செய்யும் வகையில் தோளில் கேமிராவுடன் உடனே கிளம்பியவன் தொடர்ந்து ஒரு வாரகாலம் இரவு பகல் பாராமல் சென்னை மழை வெள்ள படங்களை எடுத்து பதிவு செய்தேன்.

இது நடந்து முடிந்த நீண்ட நாட்களாகிவிட்டது


இந்த நிலையில் பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் சர்வதே செஞ்சிலுவை அமைப்பினர் இணைந்து இயற்கை பேரிடரினை வென்று நின்ற மனிதநேயம் என்ற தலைப்பில் அகில இந்திய அளவிலான பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை அறிவித்திருந்தது.அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்று அலுவலகத்தின் தரப்பில் சொல்லப்பட்டது.
அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கான பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்,நானும் கலந்து கொண்டேன்.

உத்திரகண்ட் வெள்ளம்,காஷ்மீர் நிலநடுக்கம்,சத்திஷ்கர் பேரழிவு,சென்னை மழை வெள்ளம் என்று மாநில வாரியாக வந்த படங்கள் தேர்வுக்குழுவிற்கு கடுமையான போட்டியினை ஏற்படுத்தியது.
முன்னாள் வெளியுறவுதுறை செயலர் முகுந்த் துபே தலைமையில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரதாப் ராம்சந்த்,தன்சீம் மீனாய்,பமீலா பிலிப்போஸ் உள்ளிட்டோர் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களை டில்லிக்கு வரவழைத்து யாருக்கு முதல் பரிசு என்பதை விழாவில் அறிவிப்பதாக சொல்லிவிட்டனர்.செஞ்சிலுவை சங்க ஆலோசகர் சுரீந்தர் ஒபராய் எனக்கான விமான பயண டிக்கெட் முதலானவற்றை ஏற்பாடு செய்திருந்தார்.
கடைசிக்கட்ட தேர்வுக்கு தயரானதே பெருமைதான் , வாழ்க்கையில் இது போன்ற தருணத்தில் உங்கள் துணைவியார் உடன் இருக்கட்டும் என்று என்னை இயக்கும் தினமலர் இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீஎல்.ஆதிமூலம் அவர்கள் என் மனைவிக்கான விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார்.

கடந்த 10/11/2016 ந்தேதி இரவு எட்டு மணிக்கு டில்லியல் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் அரங்கத்தில் டில்லி வாழ் முக்கிய பிரமுகர்கள்,அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.முதல் பரிசுக்குரியவரை அறிவிக்கும் நேரமும் வந்தது.சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் ஜெர்மி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்ட காத்திருந்தார்.
நாங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது என்று தேர்வுக்குழு சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட படத்தை எடுத்த தினமலர் புகைப்படக்கலைஞர் எல்.முருகராஜ்க்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது,மொத்த அரங்கமும் கைதட்டி பாராட்ட பரிசு வாங்கிய அந்தக் கணம் மறக்கமுடியாத தருணமாகும்.

இதுவரை 276 நிஜக்கதைகளை எழுதியிருக்கிறேன் அந்த கதையின் மாந்தர்களின் வாழ்த்துக்களாலும்.விடாமல் வாசித்து என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆசீர்வாதத்த்தாலும் இது நிகழ்ந்ததாக எண்ணி மகிழ்கிறேன்.
நன்றி,வணக்கம்.

எல்.முருகராஜ் murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
21-நவ-201601:06:52 IST Report Abuse
மஸ்தான் கனி எந்த சம்பவத்தை தொடர்படுத்தி தாங்கள் எழுதினாலும் ஆரம்பம் முதல் கடைசிவரி வரை எழுத்தின் ஆழம் அபாரம்., வாசிக்க ஆரம்பித்தால் அதனை முடிக்காமல் நகரமுடியாது அப்படி அருமையான வரிகளை வாசகர்களுக்கு அள்ளி தருகிறீர்கள்., மென்மேலும் பல விருதுகள் வாங்க வாத்துக்கள் அண்ணா.
Rate this:
Share this comment
Cancel
A.sivagurunathan - coimbatore,இந்தியா
19-நவ-201619:14:20 IST Report Abuse
A.sivagurunathan உங்கள் பயணத்தின் முக்கிய மைல்கல் சார் இது. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18-நவ-201609:32:57 IST Report Abuse
Rangiem N Annamalai வாழ்த்துக்கள். உங்கள் தாயார் நலமா? அன்று அவர் இவனை பெற்றதிற்கு என்ன தவம் செய்தேன் என்று பெருமை கொண்டு இருப்பார்.நீங்களும் கொடுக்க முடியாத கடனை தீர்த்து விட்டீர்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X