மருத்துவத்துறையின் போலிகள்; பொதுமக்களே கவனம்!| Dinamalar

மருத்துவத்துறையின் போலிகள்; பொதுமக்களே கவனம்!

Added : ஜன 10, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மருத்துவத்துறையின் போலிகள்; பொதுமக்களே கவனம்!

தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. தமிழக அரசும்,சுகாதாரத்துறையும் போலிகளை வேட்டையாடி வந்தாலும் போலி மருத்துவர்கள் முளைத்து கொண்டே தான் இருக்கின்றனர்.
உயிர்காக்கும் மருத்துவ துறையில் போலிகள் எவ்வாறு துணிச்சலுடன் இறங்குகின்றனர்? போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டுமானால் சுகாதாரத்துறையுடன், மக்களும் இணைந்தால் மட்டுமே முடியும்.பிடிபடும் போலிகள் பெரும்பாலானோர் பள்ளி படிப்பைதாண்டாதவர்களாக இருக்கிறார்கள். தகுதியே இல்லாதவர்களுக்கு மருத்துவ துறையில் உயிரோடு விளையாட எவ்வாறு துணிச்சல் வந்தது. கைது செய்யப்பட்ட போலிகளில் பலர், ஏதாவது ஒரு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளதாக கூறியுள்ளனர்.தகுதியில்லாத நபர் ஒருவர் மருத்துவ துறையில் பணியாளராக எவ்வாறு நுழைய முடியும்.இல்லையென்றால் தகுதியில்லாத நபருக்கு பணியை வழங்கியது யார்?
'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பாற் நாற்கூற்றே மருந்து'
என்றார் வள்ளுவர்.
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என பாகுபாடுகளை கொண்டது என கூறியதன் மூலம் மருத்துவம் என்பது, தனிப்பட்ட மருத்துவரை மட்டும் சார்ந்தது இல்லை என்பது தெளிவாகிறது. இன்று முன்னேறிய மருத்துவதுறையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீசியன், எக்ஸ்-ரே டெக்னீசியன், பிசியோ தெரபி நிபுணர் இவர்கள் அனைவரும் அதன் துாண்களாக விளங்குகின்றனர்.இதில் போலி மருத்துவரை பற்றி மட்டுமே சிந்திக்கும் நாம் மீதமுள்ளவர்களை பற்றி யோசித்து பார்ப்பது கூட இல்லை. மற்ற அனைவரும் போலியாக இருந்தால் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கு சில உதாரணங்கள்.
போலி செவிலியர் : என்னிடம் எட்டு ஆண்டுக்கு முன்பு 4 வயது சிறுமியை ஒரு கால் சரியாக இயக்க முடியாமல் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்தபோது போலி செவிலியரால் தவறான இடத்தில் ஊசி போட்டதன் விளைவால் கால்கள் சரியாக இயக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு 'இன்ஜக்ஸன் பால்சி' என்று பெயர். அந்த குழந்தையை சரி செய்ய 2 மாதங்களுக்கு மேலாகியது. நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்புகள் முறையே 4 ஆண்டு, 3 ஆண்டு, ஓராண்டு நர்சிங் அசிஸ்டெண்ட் படிப்பு மட்டுமே. இதில் நர்சிங் அசிஸ்டெண்ட் படிப்புக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆனால் இன்று புற்றீசல்போல பல நர்சிங் கல்லுாரி சென்டர்கள் தொடங்கப்பட்டு, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 3 மாதம், 6 மாதம் பயிற்சி அளித்து செவிலியர்கள் என நம்ப வைத்து பலர் கிராமத்து பெண்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை, அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில் பயின்றால் மட்டுமே நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற உண்மையே பல கிராமத்து பெண்களுக்கு தெரியவில்லை. 6 மாதம் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் செவிலியர்களாக முடியாது. ஆனால் பல மருத்துவமனைகளில் இவர்கள் தான் செவிலியர்களாக உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
போலி மருந்தாளுனர் : டாக்டர் ஆலோசனை இல்லா மல் ஒருவர் தானாகவே வயிற்று வலியை 'அல்சர்' என கருதி, அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இது 2 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் அந்த மருந்துகளுக்கும் வலி கட்டுப்படாமல் போகவே டாக்டரிடம் பரிசோதனை செய்த பின் தான், அவருக்கு வயிற்றில் வந்திருப்பது புற்று நோய் என்பது தெரியவந்தது.காலம் கடந்த நிலையில் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆதலால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு வியாதிக்கும் மருந்து, மாத்திரைகளை நீங்களாகவே எடுத்து கொள்ளாதீர்கள். அதே போல் பழைய பரிந்துரைகளையும், மருத்துவரை கேட்காமல் நீங்களாக தொடராதீர்கள். ஏனெனில் நாம் உட்கொள்ளும் அனைத்து மாத்திரைகளும் ஒவ்வொரு விளைவுகளை கொண்டது என்பதை மறக்காதீர்கள்.மருத்துவர் ஐந்து நாட்களுக்கு மட்டும் என குறிப்பிடும் மருந்தை நாம் 20 நாட்கள் உட்கொண்டால் அது கண்டிப்பாக பக்க விளைவுகளை உண்டாக்கும்.முழங்கால் வலிக்காக பிசியோதெரபி சிகிச்சைக்காக என்னிடம் ஒருவர் வந்திருந்தார்.வலியின் கடுமை காரணமாக தொடர்ந்து 10 நாட்கள் வரவேண்டிய அவர் 2 நாட்களுக்கு பின் வரவில்லை. அடுத்த நான்கு நாட்கள் கழித்து வந்த அவரிடம் கேட்டபொழுது கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்து திரும்பியிருக்கிறார். அவரது மலச்சிக்கலுக்கு காரணம் அவர் எடுத்து கொண்ட வலி நீக்கி மாத்திரைகளின் பக்க விளைவே ஆகும். மருந்தாளுனர் என்பவர் நாம் சாப்பிடும், மாத்திரை, மருந்தின் அளவு, எடுத்து கொள்ள வேண்டிய நேரம், சாப்பிட வேண்டிய முறை சில வகையான மாத்திரைகள் சாப்பிடும்பொழுது எடுத்து கொள்ள கூடாத உணவுகள், மருந்தின் பக்க விளைவுகள் என்ன? என அனைத்து விபரங்களையும் நமக்கு விளக்க கூடியவர். இவர் போலியாக இருந்தால் நாம் பல இன்னல்கள் அனுபவிக்க வேண்டும்.
லேப்-டெக்னீசியன் ஆய்வகங்களில் பல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படை யில் தான் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆய்வின் முடிவு தவறாக இருப்பின், அதற்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையும் தவறானதாகவே முடியும்.போதிய பயிற்சி பெறாத, ஒரு சிலரின் தவறான ஆய்வு முடிவுகளால், பலர், இல்லாத நோய்க்கு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.எக்ஸ்-ரே கதிர் வீச்சு நம் உடலில் தங்க கூடியது. எக்ஸ்ரே படிப்பை முடித்தவர்கள் முறையாக கதிர்வீச்சை தேவையான இடத்தில் மட்டும் செலுத்தி எக்ஸ்ரே எடுப்பார்கள். போலியாக இருந்தால் பிரச்னையே.
பிசியோதெரபி : பிசியோதெரபி சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே. ஆனாலும் நான்கரை ஆண்டு படித்த பிசியோ தெரபி மருத்துவரிடம் தான் சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிறீர்களா? என்றால் பலரின் பதில் தெரியவில்லை என்பதாகத்தான் இருக்கும். முதுகு தண்டுவட பிரச்னைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர், ஏற்கனவே இதற்காக உள்ள சிறப்பு மருத்துவரை அணுகி, அவரது மருத்துவமனையிலேயே பிசியோதெரபி சிகிச்சையும் எடுத்து கொண்டார். மருத்துவமனைக்கு நடந்து சென்ற இவரால், சிகிச்சை எடுத்து கொண்டபின், அந்த மேஜையை விட்டே இறங்க முடியவில்லை.மருத்துவரிடம் கேட்டபோது ''ஐந்து நாட்கள் எடுத்தால் சரியாகி விடும்'' எனக் கூற வலியை பொறுத்து கொண்டு, 2-வது நாள் சென்ற அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரது உறவினர், டாக்டராக உள்ள வேறு ஊருக்கு சென்று சிகிச்சை பெற்று, அதை தொடர என்னிடம் வந்திருந்தார். இரண்டு இடத்திலுமே ஒரே வித பிஸியோதெரபி சிகிச்சை தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிகிச்சை அளித்தவர்கள் தான் வேறு. முதல் மருத்துவமனையில் போலி பிசியோதெரபிஸ்ட். இரண்டாவது மருத்துவமனையில் நான்கரை ஆண்டு பிசியோ தெரபி படிப்பை முடித்த இயன்முறை மருத்துவர்.இப்படி பல மருத்துவமனைகளில் 3 மாதம், 6 மாதம்பயிற்சியை முடித்தவர்களே மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீசியன், பிசியோ தெரபி நிபுணர் என பல வேடங்களில் போலிகளாக உள்ளனர்.
தடுப்பது எவ்வாறு : சாதாரணமாக கடையில்ஏதாவது ஒரு பொருள் வாங்க சென்றாலே அது பற்றிய விபரங்கள், தரம் என ஆயிரம் கேள்விகள் கேட்கும் நாம் அதே முறையை மருத்துவமனையிலும் கேட்க பழகுங்கள். நீங்கள் சிகிச்சை எடுத்து கொள்ளும் மருத்துவர் தகுதியானவர் தானா? என்பதோடு மட்டும் அல்லாமல், அவர் தரக்கூடிய சிகிச்சை குறித்தும் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பெயரும் அவரின் கல்வி தகுதியோடு வரவேற்பு பலகையில் பொறிக்கப்பட வேண்டும். அதே போல் செவிலியர், மருந்தாளுனர், பிசியோ தெரபி நிபுணர், லேப் மற்றும் எக்ஸ்-ரே டெக்னீசியன் என அனைவரும் அவர்களது புகைப்படத்தோடு கூடிய பெயரும் கல்வி தகுதி யும், உள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், என சட்டத்தை கொண்டு வர வேண்டும்.தனியார் மருத்துவமனைகளில் தகுதியில்லாத நபர்களை பணியில் அமர்த்தினால், அதை போலி மருத்துவமனையாக அறிவித்து மூட வேண்டும். தமிழக அரசும், சுகாதார துறையும் சட்டத்தை கடுமையாக்கினால் மட்டுமே, மருத்துவதுறையை மக்களின் நண்பனாகவும், மக்களின் நம்பிக்கையாகவும் பார்க்க முடியும்.
டாக்டர் ரா.கோகிலா இயன்முறை மருத்துவர்

காரைக்குடி. 94421 55456

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikumar - Bangalore,இந்தியா
12-ஜன-201714:47:05 IST Report Abuse
Ravikumar ஆய்வு அறிக்கை 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக சொல்கிறவர்கள். ஏன் அவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை