ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கும் "டாலர் சிட்டி'...திருப்பூர் திரளட்டும்! இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு!| Dinamalar

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கும் "டாலர் சிட்டி'...திருப்பூர் திரளட்டும்! இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

Added : ஜன 11, 2017
Advertisement
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கும் "டாலர் சிட்டி'...திருப்பூர் திரளட்டும்! இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு!


திருப்பூர்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் சார்பில், திருப்பூரில், இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாட்டு மாடுகளை காக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க, இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியமான, ஜல்லிக்கட்டு உட்பட, பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உழவுத் தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு மகிழும் உழவர்கள், அவற்றுடன் உறவாடும் நிகழ்வாக, ஜல்லிக்கட்டை நடத்துகின்றனர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவற்றுக்கு, காளைகள் வளர்க்கப்படும் போது, நாட்டு மாடு இனங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதன் மூலம், அவை பாதுகாக்கப்படும்.
தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், 80 லட்சம் நாட்டு மாடுகள் இருந்த நிலையில், விவசாயத்துறையில் ஏற்பட்ட புரட்சி போன்ற காரணங்களால், நாட்டு மாடுகளின் இனங்கள், அபரிமிதமாக குறைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கென்று உள்ள சிறப்பு வாய்ந்த நாட்டு மாடுகள், இன்று பெருமளவு அழிந்துவிட்டன.
மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக்கூறி, ஒரு சில அமைப்புகள் முறையிட்டதால், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் இணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்தவும், நாட்டு மாடு இனங்களை காக்கும், பாரம்பரிய விளையாட்டுக்களான, ரேக்ளா, மஞ்சு விரட்டு ஆகியவற்றுக்கு தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், திருப்பூரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்கள் அதிரத் துவங்கியுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, திருப்பூரில் உள்ள, அரசியல் சார்பு இல்லாமல் அனைத்து அமைப்புகளும் இணைந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
மாநகரில் உள்ள தொழில் அமைப்புகள், விவசாய சங்கங்கள், ஜல்லிக்கட்டு மீட்பு இயக்கம், காங்கயம் காளைகள் பாதுகாப்பு இயக்கம், பள்ளி மாணவ, மாணவியர்கள் என, 80க்கும் மேற்பட்ட அமைப்புகள், இதில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்ற பின்னணியை மறக்காமல், விவசாயம் மற்றும் நாட்டு மாடுகளை காக்கும் வகையில், "வேண்டும் ஜல்லிக்கட்டு' என்ற ஒரே கோஷத்தோடு, இவர்கள் அணி திரளவுள்ளனர்.
பசுமைப்பணி உட்பட, நல்ல செயல்களுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி வரும் திருப்பூர் மக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இன்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திலும் அணியணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை