வத்தலக்குண்டு, ஜி. தும்மலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் 5 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
ஜி. தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம், 47. இவருக்கு சொந்தமாக 20 ஆடுகள் உள்ளன. சில நாட்களுக்கு முன் சில ஆடுகள் 7 குட்டி போட்டது. இவற்றை கொட்டகையில் கட்டி வைத்து விட்டு, மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டார்.
மேய்ந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்த தோட்டத்து ஆட்கள் சென்ற போது 3 ஆடுகள் இறந்தும், 2 ஆடுகள்
உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்தன. சிறிது நேரத்தில் அவையும் இறந்தன. விஷயம் அறிந்து கொட்டகைக்கு வந்து பார்த்த செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.
கால்நடைத் துறையினரிடம் விசாரித்த போது, 'நாய் கடித்து இறக்க வாய்ப்பு உள்ளது' என்றனர். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,“வறட்சியால் பூலத்துார், கொடைக்கானல் மலையிலிருந்து வனவிலங்குகள் இறங்கி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது” என்றனர். வனத்துறையினரிடம் கேட்டபோது,“ தகவல் தாமதமாகத்தான் கிடைத்தது. பரிசோதனைக்கு பிறகு ஆடுகள் பலியானதற்கு காரணம் தெரியவரும்” என்றனர்.