அழிவின் விளிம்பில் ஒய்சாள அரண்மனை மண்டபம்: சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் ஒய்சாள அரண்மனை மண்டபம்: சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை

Added : ஜன 12, 2017

ஓசூர்: கிருஷ்ணகிரி அடுத்த சின்னகொத்தூர் கிராமத்தில் உள்ள ஒய்சாள மன்னன் வீர ராமநாதனின் அரண்மனை மற்றும் ஆடற்கலை மண்டபம் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று தேடல் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த சின்னகொத்தூர் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஒய்சாள மன்னன் வீர ராமநாதன் காலத்தை சேர்ந்த அரண்மணை மற்றும் ஆடற்கலை மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒய்சாள மன்னன் வீர ராமநாதனின் கல்வெட்டுகள், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில், அத்திமுகம், நடசாலை, பெண்ணேஸ்வர மடம், ஓசூர் கோதண்டராமர் கோவில், தர்மபுரி கோட்டை கோவில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பெண்ணேஸ்வர மடத்தில் இருக்கும் கல்வெட்டில், 'யாராவது சோறு பிச்சை கேட்டால், அவர்களின் கழுத்தை அறுத்து விடவும்' என்ற அரசாணை பொறிக்கப்பட்டுள்ளது. சின்னகொத்தூர் கிராமத்தில் உள்ள வீர ராமநாதனின் அரண்மனை மண்டபம், மண்ணோடு, மண்ணாக மாறி, இடிந்து விழும் நிலையில் உள்ளது. முக்கியமாக, வேறு எங்கும் கிடைக்காத, சிலம்பு கலையை மையப்படுத்தும் நடுகல் சிற்பம் இங்கு உள்ளது. அதேபோல், சோழர்கள், ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசு ஆகிய அரசர்களின், ஆறு கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள ஒரு சிற்பம், வலது கையில் வாளும், இடது கையில் செங்கோலுடனும் இருப்பதை பார்க்கும் போது, இச்சிற்பம் வீர ராமநாதனின் சிற்பமாக இருக்கலாம் என தோன்றுகிறது. வீர வரலாற்றை கொண்டுள்ள சின்ன கொத்தூர் கிராமத்தில் உள்ள அரண்மனை மற்றும் ஆடற்கலை மண்டபம், அதை சார்ந்தவற்றை சீரமைத்து பாதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X