வான் மழையே வாராயோ | Dinamalar

வான் மழையே வாராயோ

Added : ஜன 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வான் மழையே வாராயோ

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்”என்றார் திருவள்ளுவர். மண்ணை உழுது பொன் ஆக்காதவனைப் பார்த்து, “இல்லை” என்று கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பவனைப் பார்த்து, நிலம் என்னும் நல்லாள் சிரிக்கின்றாள். ஆனால், இன்று உழுபவன் வாழ்க்கை தான் அலங்கோலமாய்க் கிடக்கிறது. இன்று விவசாய வாழ்க்கைத் தோல்விக்கு எது காரணம்? யார் காரணம்? வானம் ஏன் பொய்த்துப் போனது? மழை ஏன் பெய்யவில்லை; வறட்சி ஏன் தலை விரித்து ஆடுகிறது? பூமிப் பந்து ஏன் கொதித்துக் கொண்டிருக்கிறது? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகை நிலங்களும் திரிந்து பாலை நிலம் ஆகியது ஏன்? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிய கதையைப் போல, காடுகளை அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கினோம்.பசுமையை அழித்தோம். வனங்கள் நமது இயற்கை வளங்களாய் இருந்தன. எல்லா ஊர்களும் காடுகள்தான்; வனங்கள் தான்; வளம் நிறைந்த சோலைகள் தான்! சாலைகளை அமைக்கச் சோலைகளை இழந்தோம். வயல்களை, மரங்களை அழித்து நாற்கர, ஆறு வழிச்சாலைகளை அமைத்தோம். வயல்களை அழித்து நகரங்களை உருவாக்கி பூமியை நரகமாக்கி விட்டோம்.
மரங்களுக்காக மாண்ட மகளிர்
நெஞ்சைப் பிளக்கும் ஓர் உண்மை நிகழ்வு. வட இந்தியாவில் ஜோத்பூர் மாவட்டத்தில் கேஜர்லி என்ற இடத்தில் கி.பி. 1730 ஆம் ஆண்டில் 363 பெண்கள் அம்ரிதாதேவி என்ற பெண்ணின் தலைமையில், பச்சைக் குத்தி இருந்த கேஜ்ரி மரங்களைக் காப்பாற்ற ஒன்று கூடினர். அந்த நாட்டு அரசனின் உத்தரவின்படி, கேஜ்ரி மரங்களை வெட்ட வந்தவர்களை 363 பெண்களும் தடுத்தனர். அவர்களை எல்லாம் மீறி வெட்ட முற்படும்போது, மரங்களைக் கட்டிப்பிடித்து 363 பெண்களும் தங்களின் உயிரை விட்டனர். மனிதக் கோடாலிகள் இரக்கம் இல்லாமல் 363 உயிர்களையும் பறித்து மரங்களை வெட்டினர். அந்த நிகழ்வுதான் சிப்கோ இயக்கம் உருவாக அடித்தளம் ஆனது. பூமித் தாய்க்கு பச்சை ஆடை பூண தவறி விட்டோம்.
மரங்களின் பயன்
கவிஞர் வைரமுத்து கூறுவார். “பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்! நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்! எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்! மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்! எரிந்தோம் எரிந்தோம் இடுகாட்டில் எரிந்தோம் எரியும் விறகுகள் மரத்தின் உபயம்! மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!''தொட்டில் முதல் இடுகாடு வரை மரங்கள் மனித வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன்படுகின்றன என்பதைத்தான் இக்கவிதைச் சுட்டிக் காட்டுகின்றது. மரங்கள், மனித குலத்தின் வரங்கள் என்பதே மகத்தான உண்மையாகும். ஓசோன் ஓட்டை ஆபத்திலிருந்து பூமிப்பந்து காப்பாற்றப்படவும், புவி வெப்பத்தைக் குறைக்கவும் மரங்களை நடுவதின் மூலம் சாத்தியம் ஆகின்றது. மரங்கள் தான் மழை பெய்வதற்கான நீர் ஆதாரங்கள். ஏரி, குளம், கண்மாய் முதலிய நீர் ஆதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
பொறியியல் சாதனை கல்லணை
மானுடத்தின் மிகப் பெரிய பொறியியல் சாதனையாகக் கருதப்பட்ட கரிகாலன் கட்டிய கல்லணை, அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில், நம் நீர் சேமிப்பு ஆதாரங்களின் மீது கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் அடையாளம் ஆகும். தம் சொந்தச் சொத்தை விற்று பென்னிகுவிக் கட்டிய முல்லை பெரியாறு அணை, நம் கண்ணீராலும், செந்நீராலும் எழுப்பப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். ரசாயன உரம் இல்லாத, பூச்சி மருந்து தெளிக்காத இயற்கை விவசாய முறைக்கு மாற வேண்டியது இன்றைய காலத்தின் தேவை ஆகும்.“தொடிப்புழுதி கசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்”ஒரு பலம் எடையுள்ள புழுதி, கால்பலம் ஆகும்வரை உழுது காயப்போட்டால், ஒரு கைப்பிடி கூட எருப்போட வேண்டிய அவசியம் இல்லாமல் விளையும். உழுத நிலம் கட்டிகள் இல்லாமல் நன்கு புழுதியாகும் வண்ணம், உழுதல் நல்ல விளைச்சலுக்கு அவசியம். இயந்திரங்களை உழுவதற்குப் பயன்படுத்தாத காலத்தில் உழவின் நுட்பத்தை வலியுறுத்தினார் திருவள்ளுவர்.
பயிர் பாதுகாப்பு
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.”
உழுதலே நன்று!அதனினும் நன்று எருவிடுதல்!அதனினும் நன்று களை எடுத்தல்!அதனினும் நன்று நீர் விடுதல்!அதனினும் நன்று பயிர்ப் பாதுகாப்பு!என வரிசை முறைப்படுத்துகின்றார். இன்றைய சொட்டு நீர் பாசனம் நீர் விரையம் ஆகாமல் சிக்கனமாக்க கிடைத்த நவீன வரப்பிரசாதம் ஆகும். பாடுபட்டு விவசாயம் செய்த விவசாயியின் வாழ்வு எப்படி உள்ளது?“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதுாஉம்விட்டேமென் பார்க்கும் நிலை”உழவன் கைமடங்கி உழைக்க வில்லை என்றால், வாழ்க்கையை விட்ட துறவிகளுக்கும் வாழ்க்கை இல்லை என்று உழவின் அவசியத்தை திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
உயிர் விடும் உழவன்
இன்று என்ன நிலை? உழவன் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. தன் உழைப்பால் உழுது உணவு உற்பத்தி செய்து பிறர் உயிர்களைக் காத்தவன் இன்று உயிர்விட்டுக் கொண்டிருக்கிறான். பயிர்களைக் காக்கும் களைக்கொல்லி மருந்துகள் இன்று உழவர்களின் உயிர்க்கொல்லி மருந்துகளாக மாறிவிட்டன. காடு விளைந்த பொழுது கூட கையும், காலும் மிச்சமாய் இருந்தது. இன்றோ உழவனின் உயிர்கூட மிச்சம் இல்லை. உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை கிடைக்கவில்லை! விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயவிலை கிடைக்க வேண்டும். நச்சுக் கலப்பில்லாத இயற்கை விவசாயம் எங்கும் செழிக்க வேண்டும். வான் மழையே! நீ அபயம் தரும் ஆண்டவனைப் போல், உன்னை எதிர்பார்த்து மண்டியிட்டு வரவேற்கின்றோம். மழை பெய்ய வேண்டும். கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நிரம்பட்டும்! எங்கள் விவசாயிகளின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் சொட்டட்டும்!
பொன்னம்பல அடிகளார்குன்றக்குடி.adigalar-kundrakudi@yagoo.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜன-201721:34:02 IST Report Abuse
A.George Alphonse Very beautiful narration by the author very.Rev. ponnambala Adigalar KundraKudi. I liked very much the words he used to construct this article and they are very much useful to the present generation. Let us hope ,trust ,expect and welcome the rain as per the end of this article and the agriculture may regain it's past glory and our state may look greenish throughout the year with high Mahasool forever.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X