குழந்தைகளின் தசைகளுக்கு வலிமை இருக்கிறதா| Dinamalar

குழந்தைகளின் தசைகளுக்கு வலிமை இருக்கிறதா

Added : பிப் 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
குழந்தைகளின் தசைகளுக்கு வலிமை இருக்கிறதா

உடல் பலம் இருந்து விட்டால் மன பலம் தானாக ஒட்டிக் கொள்ளும். உடல்பலம் என்பது பெரும்பாலும் தசைகளை சார்ந்து உள்ளது. உடலில் மொத்தம் 640 தசைகள் உள்ளன. தசைகள் பெரும்பாலும் ஒரு எலும்பில் தொடங்கி மற்றொரு எலும்பில் முடிகிறது. தொடங்கும் இடம் அசையாத நிலையான இடமாகவும், முடியும் இடம் அசைக்கத்தக்க இயங்ககூடிய, இடமாகவும் இருக்கும். தசைகளை எலும்புடன் வலுவாக இணைப்பதற்கு தசைநார்கள் பயன்படுகின்றன. தசைகள் இருதய தசைகள், குடல், ரத்த நாளங்களை சுற்றி இருப்பது மற்றும் 'ஸ்கெலட்டல்' தசைகள் என மூன்று வகைகளாக அடையாளம் காணப்படுகிறது. முதலில் சொன்ன இரண்டு வகைகளும் தன்னிச்சையாக இயங்கி கொண் டிருப்பவை. மூன்றாவதான 'ஸ்கெலட்டல்' தசைகள் அதாவது உடல் முழுவதும் எலும்புகளுடன் பின்னி பிணைந்துள்ள தசைகள், செயல்களை மூளையின் உதவியுடன் உருவாக்குபவை. இவை 'வாலன்டரி' தசைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
இதில் குறிப்பிட்ட தசைகள் புவி ஈர்ப்பு விசைக்கு எதிர்வினை ஆற்றி நம்மை கீழே விழாமல் நிற்க, நடக்க, ஓட உதவி புரிகின்றன. அத்தகைய தசைகள் 'ஆன்டி கிராவிட்டி' தசைகள் எனப்படுகின்றன. வயது முதிர்ந்த காலத்தில் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதற்கு இத்தசைகள் பலவீனமாவதும் ஒரு காரணம்.
வல்லமை பெற்ற தசைகள்
நாம் விரும்பும் செயல்களை, இயக்கமாக மாற்ற தசைகள் உதவுகின்றன. ஒரு இலக்கை நோக்கி ஓட வேண்டுமென நாம் விரும்பினால் அல்லது ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதற்கு பொறுப்பான தசைகள் துாண்டப்பட்டு, ஒருங்கிணைக்கப் பட்டு நம்மை ஓட வைக்கின்ற வேலையை மூளை செய்கிறது.ஒவ்வொரு மனிதனும் விரும்புவது தனது இறுதிகாலம் வரை தனது தேவைகளை தானே நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்பதே. நாம் விரும்பும் செயல்களை நிறைவேற்ற கூடிய வல்லமை பெற்ற 'வாலன்டரி' தசைகளின் வலிமை சிறுவயதிலிருந்தே ஒழுங்காக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
உடல் இயக்கம்
இன்றைய குழந்தைகள் வளரும் சூழல், தசைகளின் வலிமையை மேம்படுத்தி உடல்திறன் பாதுகாக்கப்படுவதற்கு பக்கபலமாக உள் ளதா என்றால் அது கேள்விகுறியே. குழந்தைகள் உடல் உழைப்பிற்கு வழியே இல்லாமல் வளர்க்கப் படுகிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, இணைய தளங்களை பார்ப்பது என எந்த ஒரு உடல் இயக்கமும் இல்லாமல் வளர்கிறார்கள்.ஆறு மாத குழந்தைகள் அழுதால் கூட, அதை சகித்து பொறுமையுடன் கையாளாமல் கையில் உள்ள அலைபேசி வீடியோக்களை காட்டுவது போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில குழந்தைகளிடம் மன ரீதியான சிக்கல்களை இது உருவாக்குகிறது. சிலகுழந்தைகள் இத்தகைய செயல்களுக்கு அடிமையாகிபோகிறார்கள்.குழந்தைகளை பாதுகாக்கிறோம் என, வீட்டைவிட்டு வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. பள்ளிகளுக்கு நடந்து செல்லும் பழக்கம் காணாமல் போய்விட்டது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட வகுப்பு படிக்கும் வரை, தரையில் பலகை போட்டு அதில் உட்கார வைக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுந்து நின்று பதில் சொல்வார்கள்; மீண்டும் உட்கார்வார்கள். இப்படி பல்வேறு உடல் இயக்கங்களை, பள்ளிகளிலே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இப்போது குழந்தைகள் அணியும் இறுக்கமான ஆடைகள், கை, கால்களை அனைத்து கோணங்களிலும் முழு அளவில் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.
இயக்க குறைபாடு
அந்தந்த குறிப்பிட்ட வயதில் கிடைக்க வேண்டிய உடல்இயக்கங்கள் கிடைத்தால் தான் தசைகள் முறைப்படுத்தப்படும்; பக்குவப்படுத்தப்படும். இல்லையென்றால் சிறு சிறு இயக்க குறைபாடுகளோடு குழந்தைகள் வளர்வார்கள். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் தசைகளில் இயக்க குறைபாடுகள் இருந்தால் சோபிக்க முடியாமல் போய் விடுவார்கள். தசைகள், எலும்பு மூட்டு இணைப்புகளை உறுதியாக வைத்து கொள்ளுதல், உடலின் தோற்றத்தை பேணுதல் மற்றும் உடல் இயக்கத்தின் போது உடலுக்கு தேவையான வெப்பத்தை உருவாக்குவது போன்ற முக்கிய பணிகளை தசைகள் செய்கின்றன. இலகுத் தன்மை, வலிமை, சுருங்கி விரியும் தன்மை, ஒரு செயலை தொடர்ந்து செய்யக்கூடிய வலிமை போன்ற தசைகளின் பண்புகள் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தசைகள் தங்களது பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்ய அவற்றை குழந்தை பருவம் முதலே பராமரிக்க வேண்டும். அதற்கு திறந்த வெளி விளையாட்டுகள் சரியான தீர்வாக அமையும். விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்று விளையாட உற்சாகப்படுத்துங்கள். பாதுகாப்பாக விளையாடுவது பற்றி குழந்தைகளிடம் விழிப்புணர்வை உண்டாக்குங்கள். ஏறுதல், ஓடுதல், இறங்குதல், குதித்தல், தாவுதல் என அனைத்து செயல்பாடுகளும் அடங்கிய திறந்த வெளி விளையாட்டுகளில் உங்களது குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மலை ஏறுதல் மிக சிறந்தது.
கபடி விளையாட்டு
நிகழ்காலத்தில் ஒருகுழந்தையை ஓடி வந்து தடையை தாண்டி குதி என்று சொன்னால், அக்குழந்தை அதை செய்ய முடியாமல் தடுமாறும் நிலையே உள்ளது. இதுவெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் குழந்தை களால், இயல்பாக செய்யமுடிந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உதாரணத்திற்கு கபடி விளையாட்டை உங்கள் கண்முன் நிறுத்திப் பாருங்கள். அதில் விளையாடும் வீரர்கள் விளையாட்டின் தேவைக்கேற்ப பல்வேறு விதமான உடல் இயக்கங்களை உருவாக்குகிறார்கள். விளையாட தேவையான துாண்டுகோள் மூளைக்கு செல்லும்போது பலவிதமான உடல் இயக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் தசைகளின் பண்புகள் பாதுகாக்கப்படுகிறது. தசையில் காயங்கள், வலி போன்றவை உருவாகாமல் தவிர்க்கப்படுகின்றன.
தசை வலிமை
கலவையான செயல்களை குழந்தைகள் தொடர்ந்து செய்யும் போது, மூளையின் ஒருங்கிணைப்பும், தசையின் வலிமையும் மேம்படும். பலவிதமான வெளி துாண்டுதல் மூளைக்கு கிடைத்து, அது தன் கட்டுப்பாட்டில் உள்ள தசைகளை இயக்கும் போது மூளை முதிர்ச்சி பெறும். உடல் இயக்க சவால்களை எளிதாக கையாள முடியும். உடல் இயக்க செயல்பாடுகளை அதிகமாக சிறு வயதிலிருந்து செய்து வரும் குழந்தை வளர்ந்த பருவத்தை எட்டும்போது அதன் மூளையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். திடீரென ஏற்படும் அவசர தேவைகளுக்கு ஏற்ப உடல் இயக்கங்களை உருவாக்கும் பழக்கம் மூளைக்கு கிடைக்கும்.குழந்தைகள் வளர்ந்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில்களும் உடல் உழைப்பு குறைந்த வேலைகளை கொண்டதாகவே இருக்கின்றன. சிறு வயதிலே தசைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அவர்கள் மனதில்வேரூன்றிவிட்டால், நோய் இல்லாத வாழ்வு சாத்தியப்படும்.
ஆரம்பநிலையில்...
சிறுவயதிலேயே உடல் பருமன், முதுகு, கை, கால் வலி, கூன் போடுதல், உடல் அமைப்பு மற்றம் போன்ற காரணங்களால் குழந்தைகள் சிரமப்படுவதை, சர்வ சாதாரணமாக காணமுடிகிறது. இவற்றை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து தகுந்த 'பிசியோதெரபி' சிகிச்சைகளை கொடுக்க வேண்டும்.பள்ளிகள் மற்றும் கல்லுாரி களில் 'பிசியோதெரபிஸ்ட்கள்' நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களின் உடல் திறனை கண்காணித்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவர். உடற்கல்வி துறையோடு 'பிசியோதெரபி' மருத்துவர்களது சேவையையும் இணைத்து வழங்கினால் விளையாட்டுகளில் சர்வதேச சாதனைகள் படைக்கலாம்.நாட்டின் எதிர்கால நம்பிக்கைகளான குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வோம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எதிர்காலத்தில் அவர்களது பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும். தனிப்பட்ட ஒருவரின் பொருளாதார வளர்ச்சியே ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.
- கிருஷ்ணகுமார்பிசியோதெரபிஸ்ட்

மதுரை. krishnafpt@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை