ஒரு பக்கம் அளவிடற்கரிய பயிற்சி, பட்டம் அல்லது தகுதி பெற்ற பணியாளர்கள் நம் நாட்டிற்குள்ளேயே வாய்ப்புகளை நோக்கி தவமிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எங்கு நோக்கினாலும் ஆட்கள் பற்றாக்குறை!
இந்த வேலை செய்ய தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என தொழில் நிறுவனங்கள் விரக்தியுடன் கூறுவதை மெய்ப்பிக்கும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் புள்ளி விபரங்கள்... இதில் எது உண்மை? அதிகப்படியாக கிடைக்கும் பணியாளர்களா? பணியாளர் கிடைக்காமல் துவண்டு கிடக்கும் தொழில் நிறுவனங்களா? ஒரு புறம் விவசாயப் பணிகளுக்கு ஏற்ற கூலிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காததால் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு மூலம் ஆண்டில் பாதி நாட்களுக்கு உத்தரவாதப்பணி. மற்றொரு புறம், விவசாயம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒரு தொழிலாக மாறிப்போய் விவசாயிகள் நலிந்து, நிலங்களை பிளாட்டுகள் போட்டு விற்கும் பரிதாப நிலை உள்ளது.ஆட்கள் பற்றாக்குறையினால் பல மடங்கு ஏறிப்போன சம்பளம், அதனால் தொழில்கள் லாபகரமற்று நசிந்து போய், இழுத்து மூடப்படும் தொழில் நிறுவனங்கள். மறுபக்கம் மிகக்குறைந்த கூலிக்கு/சொற்ப சம்பளத்துக்கு ஏறக் குறைய கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள். இந்நிலைமைக்கு என்ன காரணம்? என்ன நடக்கிறது அவ்வப்போது இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, பொருளாதார மந்தநிலை போன்றவை வந்து போனாலும், பணியாளர்கள் தேவைக்கும், இருப்புக்கும் இடையே உள்ள இடைெவளி மிகச்சாதாரணமானதல்ல என்பதை மத்திய மாநில அரசுகள், பலதுறை வல்லுனர்கள் அறியாமல் இல்லை.இந்தியா, உலகின் பொருளாதார வல்லரசுகளுள் ஒன்று. நம் இளைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக நாடுகள் அனைத்திலும் வேண்டு கோள் விடுத்து வருகிறோம். ஆயினும் பல கோடி உள்நாட்டு வேலை வாய்ப்புகள் தற்போதும் நிரப்பப்படாமல் உள்ளன. அதே நேரம் நாட்டில் பல கோடி மக்கள் வேலையின்றியும் உள்ளனர்.
பாதிக்கும் காரணிகள் : நாடு முழுவதும் புதிய திறனாளிகளை உருவாக்கும் முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் தீவிரம் அடைந்திருக்கின்றன. இவை எதிர்காலத்திற்கு பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. திறன்களை உருவாக்குவது மட்டுமின்றி, ஏற்கனவே இருக்கும் திறனாளிகளை கண்டறிவதும் இன்றைய சூழலில் கடினமாக இருக்கிறது. திறன் வாய்ந்த, பயிற்சி பெற்ற, உடல் உழைப்பு சார்ந்த பணியாளர்கள் நாடெங்கிலும் உள்ளனர். இருப்பினும் அவர்களை கண்டறிவது எளிதல்ல. எவ்வளவு பேர், எந்தப்பகுதியில், எந்தெந்த திறன்கள் பெற்றிருக்கின்றனர் என்பதற்கான பதிவேடுகள் முறையாக இல்லை. இருக்கும் மேம்போக்கான விபரங்களை சரிபார்க்கவும் எந்த வழிகளும் இல்லை. அதேபோல் திறனாளிகள் வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது என அறிவதும் சிரமமாக இருக்கிறது. இதனால் அபரிமிதமான சம்பளம் வழங்கும் நிலையும், கடும் பணியாளர் பற்றாக்குறையும் நிலவுகின்றன. இது தொழில்கள் தொடர்ந்து நடப்பதற்கான சூழலை சீர்குலைக்கிறது.
திறன் இடைவெளி : திறன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் சில ஆண்டுகளாக பல திட்டங்களை அறிவித்து வருகின்றன. எனினும் காலப்போக்கில் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே விரைவான தீர்வு அவசியமாகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த இணையதளங்கள் உயர்கல்வி கற்றோர்க்கும், நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் உதவியாக அமைந்தாலும், எண்ணிக்கையில் பெருமளவில் இருக்கும், ஆரம்பநிலையில் உள்ள உடல்உழைப்பு சார்ந்த தொழிலாளிகள், பயிற்சி பெற்றோர் மற்றும் திறனாளிகளுக்கு பயன் அளிப்பதாக இல்லை. அரசு சார்ந்த வேலைவாய்ப்பகங்கள் வேறு தளத்தில், வேறுபட்ட நோக்கங்களுக்காக இயங்குகின்றன. எனவே ஆரம்பநிலைப் பணியாளர்கள் மற்றும் அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் இடைவெளியை நிரப்புதல் இன்றியமையாத பணியாகவுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில், வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்கு பொருத்தமற்ற நடைமுறைகளையோ குறைபாடுள்ள தொழில் நுட்பத்தையோ பயன்படுத்தினால் அது பிரச்னையை ஏற்படுத்தும். பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசுகள் ஒரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருப்பதும் உண்மை. அது திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது.
திறன்களின் சமநிலை : திறன்களின் சமநிலையே வேலைவாய்ப்பு சந்தையையும், தொழில்களுக்கு உகந்த சூழலையும் தீர்மானிக்கிறது; திறன்தேவை மற்றும் திறன்இருப்பு ஆகிய இரு காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. திறன் தேவை என்பது ஒவ்வொரு திறனிலும் எவ்வளவு பேர் ஊருக்கு தேவை என்பதை குறிக்கும். உதாரணத்துக்கு, மதுரையில் தேவைப்படும் தச்சர் திறன்கள் எத்தனைபேர்? அதே போல, திறன் இருப்பு என்றால், எவ்வளவு தச்சர்கள் மதுரையில் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பதாகும். திறன்களின் சமநிலை என்பது தேவைக்கேற்ற இருப்பு மற்றும் இருப்புக்கேற்ற தேவையை வலியுறுத்துகிறது. நகரமயமாக்கல் மற்றும் தொழிற் பேட்டைகளில் எற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை களைவதில் திறன் மேம்பாடு வாயிலாக நம் அரசுகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதே நேரத்தில் பின் தங்கிய பகுதிகளுக்கு, உணவளிப்பதற்காக ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு என்ற பெயரில் மனித வளங்களை திறனற்ற பயனற்ற முறையில் கையாண்டும் வருகிறது.
எங்கே பிரச்னை : அதிக மனிதவளம் மிக்க இந்நாட்டில் திறன்களில் அடிப்படையில் பதிவேடுகளை அரசு இதுவரை உருவாகியதாகவோ, முழுமையாக கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு புள்ளி விபரங்கள் இன்றி மேம்போக்காக இந்த விஷயங்களை அணுகுவது என்ற கேள்வி எழுகிறது? நகர்ப்புறங்களில் உள்ள ஒரு மிகச்சிறிய சதவீதத்தினர், வாய்ப்புகளை குறிவைத்து அதற்கான முனைப்புடன் உழைத்து வெற்றி பெறுகின்றனர். ஊரகப்பகுதியில், சிறுநகர்களில் நிலைமை வேறுவிதமாக உள்ளது.
திறன் மேலாண்மை : திறன் பதிவேடுகளை கட்டாயமாக்குதல், புவி சார்ந்த குறியீடுகளால் வேலை தேடுவோர் இருப்பிடத்தை துல்லியமாக அறிதல், வேலை தரும் நிறுவனங்களுக்கு பணியாளர் இருப்பையும் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை தெரிவிக்க ஒருங்கிணைந்த அமைப்புகளையும் உருவாக்கி இரு தரப்பையும் இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்/ பணிகள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகள் இரு தரப்புக்கும் துரிதமான சேவைகளை பெற உதவும். பணியாளர் பிறந்த / இருப்பிடம் பற்றி நிறுவனங்கள் அறிவதால், பயங்கரவாதிகள், சமூக விரோதிகளின் ஊடுருவல் தவிர்க்கப்பட்டு சமூக பாதுகாப்பு மேம்படும். திறன் இருப்பு மற்றும் தேவைகளை சீராக்கி முடிவுகள் மேற்கொள்வதால், அப்பகுதி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருளாதார சூழ்நிலை மேம்படும் வாய்ப்பும் உருவாகும். ஏனெனில் நாளைய உலகம் நம் கைகளில்.
-ஆர்.கே.ஜெயபாலன் தலைவர்மென்பொருள் தொழில்துறை மேம்பாட்டு சங்கம் (சிடா)மதுரை.
jey@outlook.in