திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து, கடந்த, 12ல், இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம், 88 ஏரிகளுக்கு நீர் திறந்து விடப்பட்டு, அதன் மூலம் நீர் தேக்கி வைக்கப்பட்டு, கிணற்றின் நீர் மட்டம் உயர செய்து, அதன் மூலம் விவசாய பசனத்திற்கும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நீர் செல்லும் கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த, 15ல் கொளமஞ்சனூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் சவுந்தர், 35, என்பவர் ஆய்வு செய்தபோது, தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், 34, வேலு, 49, ஆனந்தன், 36, மற்றொரு ஆனந்தன், 32, ஆகிய, நான்கு பேரும் கால்வாயை சேதப்படுத்தி, நீரை வேறு பக்கம் திருப்பினர். இதை பொதுப்பணித்துறை ஊழியர் சவுந்தர் தட்டி கேட்டபோது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் படி, தானிப்பாடி போலீசார் கார்த்திக், வேலு, ஆனந்தன், ஆகிய, மூவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு ஆனந்தனை தேடி வருகின்றனர்.