புதுடில்லி: அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு புறம்பாக சசிகலா நியமிக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அளித்த புகாருக்கு விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பெங்களூரு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீசில் பிப்.,28 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள் 11 பேர் மைத்ரேயன் தலைமையில் நேற்று (பிப்.,16) டில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர்.
சசி நியமனம் செல்லாது
அந்த மனுவில், "அ.தி.மு.க., பொதுச்செயலாளராக சசிகலா கட்சி விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய நியமனம் செல்லாது. இதன்படி, சசிகலாவுக்கு அ.தி.மு.க.,விலிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நீக்கவோ, புதிதாக நியமிக்கவோ எவ்வித அதிகாரம் கிடையாது. இதை மீறி அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் செல்லாது. மேலும், இரட்டை இலைக்கு அவர் உரிமை கோர முடியாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறை முகவரிக்கு நோட்டீஸ்
இந்நிலையில், புகாரை ஏற்றுகொண்ட இந்திய தேர்தல் ஆணையம், ‛புகார் குறித்து பிப்.,28 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சசிகலா சிறையில் இருப்பதால், அந்த நோட்டீஸ் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.