வைராக்கியத்திற்கு இன்னொரு பெயர் இளவரசி! - | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வைராக்கியத்திற்கு இன்னொரு பெயர் இளவரசி! -

Added : மார் 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வைராக்கியத்திற்கு இன்னொரு பெயர் இளவரசி! -

ஒரு பெண் சிறப்பிக்கப்படுவதற்கு விமானம் ஓட்ட வேண்டாம்; விண்வெளியில் சாகசம் செய்ய வேண்டாம்; அவ்வளவு ஏன், எழுத, படிக்கக் கூட தெரிந்திருக்க வேண்டாம். ஒரு விஷயத்தை வைராக்கியத்தோடு அணுகி, ஜெயிக்க தெரிந்திருந்தால் போதும். அந்த வகையில், இன்னும் தன் காலுக்கு, இரு நுாறு ரூபாய் செருப்பு வாங்கிப் போடக் கூட முடியாத, இயலாமை கொண்ட, இளவரசி என்ற பாட்டி, 25 லட்ச ரூபாயை சேகரித்து, தன் பேரனை காப்பாற்றிஉள்ளார்.

மகன்கள் அடுத்தடுத்த விபத்தில் இறந்து விட்டனர்; மருமகள் பிரிந்து விட்டாள். மிஞ்சியிருந்த ஒரே வாரிசான பேரனுக்கு, 'தலசீமியா' என்ற விபரீதமான நோய். 25 லட்ச ரூபாய் இருந்தால் பேரன் பிழைப்பான் என்ற நிலையில், வீட்டு வேலை செய்யும் பாட்டி, வைராக்கியத்துடன் பணத்தை புரட்டி, பேரனைக் காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் கதை இது.
மகன்கள் சாவு : பிழைப்புத் தேடி, பல வருடத்திற்கு முன் சென்னையில் தஞ்சம் புகுந்தவர் தான், இளவரசி. பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர். நான்கு வீடுகளில் வேலை செய்தும், எலக்ட்ரீஷியனான கணவர் கொடுக்கும் பணத்தை வைத்தும், குடும்பம் நடத்தி வந்தார். இரண்டு மகன்களும் அடுத்தடுத்த விபத்துகளில் இறந்து போயினர். மூத்தவர், திருமணமாகாமல் இறந்தார். இளையவர், திருமணமாகி, இரண்டரை மாத குழந்தை இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். மகனின் காரியத்தை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் மருமகளைக் காணோம்; இன்னமும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், தொட்டிலில் கிடந்த, குடும்பத்தின் ஒரே வாரிசான பேரன், கோபிநாத்திற்கு உடம்புக்கு முடியவில்லை. துாக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் பாட்டி இளவரசி. என்னென்னவோ பரிசோதனைகள் செய்தனர், டாக்டர்கள். இறுதியில், உன் பேரனுக்கு, 'தலசீமியா' நோய் வந்திருக்குது. இந்த நோய் மரபணுச் சார்ந்த பிரச்னையால் வரக்கூடியது. இந்த நோய் வந்தவங்களுக்கு, ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாது. அதனால மாதத்திற்கு, ஒரு முறையோ அல்லது, இரண்டு முறையோ புது ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்கணும். சத்தான சாப்பாடு தரணும். கால், கை வீங்காம, காய்ச்சல், தலைவலி வராமல் பார்த்துக்கணும்' என்றனர்.மேலும், 'ஸ்டெம் செல் தானமா கிடைச்சா, இந்த நோயில் இருந்து குழந்தையை காப்பாற்றலாம். உலகில் ஏதோ ஒரு மூலையில், இவனது ரத்தத்தோடு, 'மேட்ச்' ஆகக் கூடிய குருத்தணுவை ஒருவர் சுமந்து இருப்பார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரது குருத்தணுவை தானமாக பெறும் வரை, பேரனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் கூறினர். இந்த இடத்தில், மருத்துவரும், மனிதநேயம் மிக்கவரும், தலசீமியா நோய் சிகிச்சையில் நிபுணருமான, டாக்டர் ரேவதி ராஜை பாராட்டியாக வேண்டும்.
பேரனுக்கு உதவி : இளவரசியின் ஏழ்மை நிலையை தெரிந்த அவர், எங்கெல்லாம் இலவசமாக ரத்தம், மருந்து, சிகிச்சையும் கிடைக்குமோ, அங்கெல்லாம் சிபாரிசு செய்து, சிறுவன் கோபிநாத்திற்கு உதவினார்.சிறுவன் கோபிநாத், சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள, குட்ஷெப்பர்டு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியின் முதல்வர் முதல், உடன் படிக்கும் பிள்ளைகள் வரை, அனைவருக்கும், கோபிநாத்தின் பிரச்னை தெரிந்து, புரிந்து, அவன் மீது அளவற்ற பற்றும், பாசமும் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரியையும் கோபிநாத்திற்கு அம்மா தான். லேசாக சோர்ந்தால் கூட, உடனே பாட்டிக்கு போன் அடித்து விடுவர். எங்கு இருந்தாலும், இளவரசி ஓடி வந்து, பேரனை அள்ளி, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவம் பார்த்து, பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடுவார். இவ்வாறு, மாதத்திற்கு, இரு முறையாவது நடந்துவிடும்.இந்நிலையில், டாக்டர் ரேவதி ராஜின் தீவிர முயற்சி காரணமாக, ஏழு வருட தேடலுக்கு பின், ஜெர்மனியில் வசிக்கும் ஒரு கொடையாளரின், 'ஸ்டெம் செல்' கோபிநாத்திற்கு பொருந்தியது. அது, அதிர்ஷ்டம் என்றால், இந்த சிகிச்சைக்காகும் செலவு, துரதிருஷ்டமானது. குருத்தணு மாற்றுச் சிகிச்சை செய்ய, எப்படி பார்த்தாலும், 25 லட்ச ரூபாய் செலவாகும் என்ற நிலை.மொத்தமாக, 200 ரூபாய் கொடுத்து, இன்னும் நல்ல செருப்பு கூட வாங்கி அணிந்திராத இளவரசியம்மாவிற்கு, 25 லட்ச ரூபாய்க்கு, எத்தனை சைபர் வரும் என்று கூடத் தெரியாத நிலை. ஆனாலும், பேரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, தெருத் தெருவாக, வீடு வீடாக, பணம் கேட்டு, இரவு பகலாக அலைந்தார். கோபிநாத் உடன் படிக்கும், இரண்டாம் வகுப்பு சிறுவர்கள் தங்கள் தீபாவளி, பிறந்த நாள் கொண்டாட்ட உடை மற்றும் பட்டாசு செலவுகளை தியாகம் செய்து, அந்த பணத்தை கோபிநாத்தின் சிகிச்சை செலவிற்காக கொடுத்தனர்.
நன்கொடை பழக்கம் : கோபிநாத்தின் உடன் படிக்கும் சிறுவர்களிடம் ஆரம்பித்த இந்த நன்கொடை பழக்கம், அவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள் என பரவி, ஒரு கட்டத்தில், மருத்துவமனை நிர்வாகமே நம்ப முடியாத நிலையில், சிகிச்சைக்கு தேவையான பணம் சேர்ந்து விட்டது.ஒரு நல்ல நாளில், ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நான்கு மாதம், தீவிர கண்காணிப்பு காலம். முடிவில், கோபிநாத், தலசீமியா நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டு விட்டான். இம்மாதம், 2ம் தேதி மருத்துவச் சான்றிதழ் பெற்ற கையோடு, வீட்டிற்கு வந்து, நான்கு மாத ஓய்வில் இருக்கிறான்.மருந்தின் வீரியம் காரணமாக கோபிநாத்தின் தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தாலும், முகமெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி. அரை இட்லி சாப்பிடவே முடியாமல் இருந்தது போய், இப்போது நன்றாக சாப்பிடுகிறான். ஆயா...ஆயா... என, பாட்டியை சுற்றிச் சுற்றி வந்து, கட்டிக்கொண்டு, முத்த மழை பொழிகிறான். பக்கத்தில் இருக்கும், தாத்தா கண்ணையா, இதை, ஆனந்த கண்ணீரோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

இளவரசியுடன் பேசுவதற்கான எண்: 99402 87312.
- எல்.முருகராஜ் - பத்திரிகையாளர்murugaraj@dinamalar.in


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-மார்-201708:42:09 IST Report Abuse
Lion Drsekar தினமலர் மற்றும் நிருபர் திரு முருகுராஜ் அவர்களுக்கு நன்றி, இந்த அறிய செய்தியை எங்கள் அரிமா சங்கத்தில் மாநிலம் முழுவதும் செய்தியாக இன்று வெளியிட்டிருக்கிறேன். சேவை செய்வதற்காகவே இருக்கும் எங்கள் சகோதர மற்றும் சகோதரிகள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழியில் உதவுவார்கள் என்று நம்புகிறோம். வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை