பனாஜி,:எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத கோவாவில், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முதல்வராக, மனோகர் பரீக்கர், இன்று மாலை பதவியேற்கிறார். இதற்காக, ராணுவ அமைச்சர் பதவியை, அவர் நேற்று
ராஜினாமா செய்தார்.
முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவா உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.
இதில், 40 தொகுதிகள் உடைய கோவாவில், 17 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்., தனிப் பெரும் கட்சியாக இருந்தது. அதே நேரத்தில், 13 தொகுதிகளில் வென்ற, பா.ஜ., மற்ற சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கிறது.
நேற்று முன்தினம், கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து, ஆட்சி அமைக்க, பா.ஜ., கோரிக்கை வைத்தது. அதை ஏற்ற கவர்னர், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 'பதவியேற்ற பின், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என்றும், கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.
மீண்டும் முதல்வர்
முன்னதாக நடந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வராக இருந்த பர்சேகர் தோல்வி அடைந்ததால், புதிய முதல்வர் குறித்து விவாதிக்கப்பட்டது.
கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆதரவு தரும் மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா
பார்வர்டு கட்சி மற்றும் இரண்டு சுயேச்சைகள், கோவா முன்னாள் முதல்வரும்,
ராணுவ அமைச்சருமான, மனோகர் பரீக்கரே மீண்டும் முதல்வராக வேண்டும் என,
வலியுறுத்தினர்.
அதன்படி, மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., அரசு,
இன்று மாலை, 5:00 மணிக்கு பதவியேற்க உள்ளது. இதற்காக, ராணுவ அமைச்சர்
பதவியை, பரீக்கர், நேற்று ராஜினாமா செய்தார்.இதை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றார்.
பரீக்கர்: ஒரு பார்வை
கோவாவைச் சேர்ந்த, மனோகர் பரீக்கர், 61, மும்பை ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படித்தவர். 2000 - 2002 மற்றும் 2002 - 2005 வரை, கோவா முதல்வராக பணியாற்றி உள்ளார். அதன்பின், 2012ல், மீண்டும் கோவா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, மத்தியில், பா.ஜ., அரசு அமைந்ததும், 2014ல், மத்திய ராணுவ அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், 13 இடங்களில் வென்ற, பா.ஜ.,வுக்கு, மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சியின், தலா மூன்று, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவளித்து உள்ளனர்.
இது தவிர, பா.ஜ., ஆதரவு பெற்ற சுயேச்சை, எம்.எல்.ஏ., கோவிந்த கவுடா, மற்றொரு சுயேச்சை, எம்.எல்.ஏ.,வான ரோஹன் காந்தே ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி, 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு, பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது.
ஜெட்லியிடம் மீண்டும் ராணுவ அமைச்சகம்
கோவா முதல்வராக பதவியேற்கஉள்ளதால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து மனோகர் பரீக்கர் ராஜினாமா
செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் கவனித்து வந்த ராணுவத் துறையை, நிதி
அமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது:ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கரின் ராஜினாமாவை, பிரதமர் மோடியின் பரிந்துரைப்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
பிரதமரின் பரிந்துரைப்படி, ராணுவ அமைச்சர் பொறுப்பை, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூடுதலாக கவனிப்பார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், 2014, மே, 26 முதல், நவ., 9 வரை, நிதி மற்றும் ராணுவ அமைச்சராக அருண் ஜெட்லி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் காங்., வழக்கு
கோவாவில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக, காங்., தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட், அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.
கோவா மாநில காங்., தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்துள்ளது. அப்படி இருக்கையில், பா.ஜ., ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்; இது, சட்டவிரோதம்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்காக, சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு, இன்று, விசாரணை நடத்தப்பட உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply