கவிதை அரங்கேறும் நேரம்...| Dinamalar

கவிதை அரங்கேறும் நேரம்...

Added : மார் 23, 2017
Advertisement
கவிதை அரங்கேறும் நேரம்...

கவிதைகளை நேசித்து வாசிக்கத் துவங்கி, எழுதி நுால்களாக வெளியிடுமளவிற்கு வளர்ந்துள்ளார், மதுரை கவிஞர் பொன்.விக்ரம்.எட்டாம் வகுப்பு முடித்த கையுடன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியமாம். பிரசித்தி பெற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளை தேடி வாங்கி வாசிக்க துவங்கினார். நாளாக நாளாக அவற்றின் மீது ஒரு பிடிப்பு. பருவத்திற்கு ஏற்ப காதல் கவிதைகளை எழுத துவங்கியவர், தற்போது சமூக பிரச்னைகளை மையப்படுத்தி கவிதைகளாக்கி வருகிறார். சமீபத்தில் 'சேணம் கட்டிய குதிரைகள்' என்ற தன் முதல் சமூக நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.அடுத்து 'துாரிகை' என்ற தலைப்பில் நாவலை எழுதுவதில் தீவிரமாக உள்ளவர், கூறியதாவது: மதுரையில் கவிதை, எழுத்துக்களை நேசிப்பவர்கள் அதிகம். அந்த சுற்றுச்சுழலில் எனக்கு சிறு வயதிலேயே நாடகங்கள், இலக்கியங்கள் வாசிக்க பிடிக்கும். இதற்காக பிரபல கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசித்து, வாசித்து அவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டது. வானத்தில் இருந்து, தொடு வானத்தை, துளி துளியாய்... சொட்டு சொட்டாய்..., இடைவெளி என்ற தலைப்புகளில் என் கவிதைகளை தொகுத்து நுால்களாக வெளியிட்டுள்ளேன். நண்பர்கள் சுகந்தகுமார், அழகுசுந்தரம், ரவி, நிலா சேகர் போன்றோருடன் இணைந்து சமூக நாடகங்களை நடத்தியுள்ளேன். திருநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி கோயில் மற்றும் தனியார் விசேஷங்களில் காத்திருந்து... காத்திருந்து..., புயலுக்கு தென்றல் போன்ற சமூக நாடகங்களையும் நடத்தியுள்ளேன். பிறகு நண்பர்கள் சினிமா, அரசியல் என பல துறைகளுக்கு சென்றதால், கவிதை எழுதுவதை மட்டுமே தொடர்ந்து கொண்டுள்ளேன்.பின் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால் ஜாதி பிரச்னைகளை மையமாக வைத்து 'சேணம் கட்டிய குதிரைகள்' என்ற சமூக நாவலை எழுதியுள்ளேன். சமீபத்தில் இந்த நுாலை வெளியிட்ட நடிகர் ஜோமல்லுாரி, இயக்குனர் பாரதிராஜாவிடம் காட்ட, அவரும் படித்து விட்டு பாராட்டியுள்ளார். தற்போது 'துாரிகை' என்ற நாவலை எழுதி வருகிறேன். 'நெகிழும் தருணங்கள்' என்ற தலைப்பில் நுாலாக வெளியிட கவிதைகளையும் எழுதி வருகிறேன்.என் ஐந்து கவிதை நுால்களை பேராசிரியர் புதியவன் ஆராய்ந்து ஆய்வு நுால் எழுதியுள்ளார். அந்த நுால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பாட நுாலாக வைக்கப்பட்டுள்ளதை பெருமையாக கருதுகிறேன். சினிமா வாய்ப்பும் வீட்டுக் கதவை தட்டியுள்ளது. உயிர் உள்ள வரை கவிதை, இலக்கியங்கள் எழுதி தொடர்ந்து நுால்களாக வெளியிட வேண்டும் என்பதே ஆசை, என்றார்.கவிதை கேட்க: 98432 68210

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை