பாரத தாயின் தலைமகன்கள்| Dinamalar

பாரத தாயின் தலைமகன்கள்

Added : மார் 23, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பாரத தாயின் தலைமகன்கள்

1947க்கு முன்பு நம் தேசம்எங்கும் பரவிக் கிடந்த அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் ஏந்திய காந்தியவாத சகோதரர்களுக்கும், உயிராயுதம் ஏந்திய இளைஞர் படையினர் ஒவ்வொருவர் வாழ்வும் சகாப்தமே! அந்த வகையில் பாசம், கண்ணீர், ரத்தம் கலந்து என்றும் அழியாத மை கொண்டு எழுதப்பட வேண்டியது இந்த தேசத்தின் இளம் தலைமகன்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் வாழ்க்கைத் தொகுப்பு.
இளம் கீற்று பகத்சிங் 1907-ல் பஞ்சாபின் பங்காகிராமத்தில் அக்டோபர் 7ல் பிறந்தார். இவரின் குடும்பமே விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட குடும்பம். இளம் வயதில் நன்கு கல்வி கற்று ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். இந்திய அரசியலில் சோசியலிசத்தை பரப்பியவர் பகத்சிங். விவசாய தொழிலாளர் நலன்காக்கும் அரசை அமைப்பது தான் பகத்சிங்கின் குறிக்கோள். அரசியல் சுதந்திரத்தோடு பொருளாதார சுதந்திரமும் வேண்டும் என்று அறைகூவல் விடுத்த இளம் கீற்று பகத்சிங். தேச விடுதலைக்காக இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ஜனநாயக சங்கத்தை தோற்றுவித்து, தேச விடுதலை வேள்விக்கு தன்னையே காவு கொடுக்க துணிந்த மாவீரன் பகத்சிங்.
நெஞ்சுரம் கொண்ட ராஜ்குரு : 1908 ஆகஸ்ட் 24-ல் மராட்டிய மாநிலம் கேத் எனும்கிராமத்தில் பிறந்தார். சிறுவனாக இருந்த போது பள்ளியில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால் கோபமடைந்த ராஜ்குருவின் அண்ணன் ராஜ்குருவைத் தண்டித்தார். பின் தனது மனைவியிடம் ஆங்கிலப் பாடத்தை கற்பிக்கும்படி கூற, ஆங்கில வார்த்தைகளைக்கூட உச்சரிக்க மறுத்து எரிமலையாய் வெடித்த ராஜ்குரு, வெறும் 11 காசுடன் வீட்டை விட்டு வெளியேறி, தாயகப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த ராஜ்குரு குறிபார்த்து சுடுவதில் தேர்ச்சி பெற்று அந்த ராணுவத்தின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார். பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ஜனநாயக சங்கத்தில் தன்னை இணைத்து கொண்ட ராஜ்குரு, ஒருநாள் நெருப்பில் நன்கு சிவக்க வைத்த இரும்புக் கம்பியை தன் கையில் பிடித்திருப்பதைப் பார்த்து துடித்து போன சந்திரசேகர ஆசாத், ராஜ்குருவிடம் காரணம் கேட்க அமைதியாக சிரித்த படி, “தாய் நாட்டின் விடுதலைப் போராட்ட களத்தில் இருக்கும் என்னை வெள்ளையர் ராணுவம் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம், எனவே வெள்ளையர்களின் சித்திரவதையை என்னால் எந்த அளவு தாங்க முடியும் என்று பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறேன்,” என்றார். “கொடூரமான மனிதத் தன்மையற்றவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டுமெனில் இத்தகைய பயிற்சிகளே தேவை,'' என்று சந்திரசேகர ஆசாத்திற்கு போதித்தார். நெஞ்சுரத்தின் இலக்கணம் ராஜ்குரு.
இள ரத்தம் பாய்ச்சிய இளைஞன் சுகதேவ் : மே 15, 1907-ல் பஞ்சாபின் லுாதியானா நகரில் பிறந்தார். சுகதேவ். முழுப்பெயர் சுகதேவ் தாபர். இளம் வயதிலேயேவிடுதலைப் போராட்ட கனல் நெஞ்சம் கொண்டவர். லாகூர் தேசியக் கல்லுாரியில் இளைஞர்களிடையே எழுச்சிமிகு உரை நிகழ்த்தி, இந்திய விடுதலைக்கு இளம் ரத்தம் பாய்ச்சிய இளைஞர் இவர். பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ஜனநாயக சங்கத்தின் உறுப்பினராக இருந்ததோடு பகத்சிங்குடன் இணைந்து லாகூரில் நவ ஜவான் பாரத சபையை தொடங்கினார்.
வழக்குகள் 2; தீர்ப்புகள் 2 : விடுதலைப் போராட்டக்காரர்களை எவ்வித அனுமதியும் இன்றி கைது செய்யலாம் என்ற உத்தரவை எதிர்த்து, பகத்சிங் மற்றும் நண்பர்கள் ஆங்கிலேய அரசின்கவனத்தை ஈர்க்க மைய பாராளுமன்றத்தில் குறைந்த திறன் கொண்ட குண்டை வெடிக்கச் செய்தனர். இறப்பு எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர் பகத்சிங்கின் பரிவாரம். குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே பகத்சிங் தன் நண்பர்களுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சுகதேவ்உள்ளிட்ட அனைவருக்கும் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அறிவிப்பு வெளியானது. லஜபதிராயின் சாவுக்கு காரணமான ஆங்கிலேய போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை கொன்று பழிதீர்க்க முடிவு செய்தனர் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். லஜபதிராய் உயிர் துறந்த 30-ம் நாள் 1928 டிசம்பர் 17ல் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்த சாண்டர்ஸின் தலையை தகர்த்தது, ராஜ்குருவின் துப்பாக்கியிலிருந்து சென்ற தோட்டா. முற்றிலுமாக முடித்துவிட எண்ணியஇளைஞன் பகத்சிங் தொடர்ந்து நான்கைந்து முறை சுட்டான். சாவின் வாசலுக்குள் நுழைந்தான் சாண்டர்ஸ். இந்நிகழ்வை குறிப்பிடும் போது, தேசத்தின் மானம் காத்த மாவீரன் பகத்சிங் என்றார் நேரு. அக்டோபர் 7, 1930-ல் சாண்டர்ஸ் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 300பக்க தீர்ப்பு வாசிக்கப் பட்டது. அதில் வீரப்புதல்வர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் மூவருக்கும் துாக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பதட்டம் நிலவினாலும், மூன்று இளைஞர்களின் முகத்திலும் சாதித்து விட்டதன் பூரிப்பு இருந்தது.
காந்திக்கு ஒரு கடிதம் : மூவரின் துாக்கு தண்டனை விவகாரத்தில் காந்தி தலையிட வேண்டும் என நாடு முழுவதும் இருந்து கடிதங்கள் காந்திக்கு வந்தன. அதில் ஒரு கடிதத்தில் “லாகூர் சதி வழக்கு, சாண்டர்ஸ் கொலை வழக்கு கைதிகள் மூவருக்கு துாக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது; எங்கள் மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனையை நிறுத்துவதாலோ அல்லது மாற்றுவதாலோ இந்த தேசத்தில் எதுவும் நிகழப் போவதில்லை. அவர்கள் தீர்மானித்தபடி எங்களை துாக்கிலிடட்டும்” என்ற வார்த்தைகள் காந்தியின் கண்களை கலங்க வைத்தது. அந்த கடிதத்தை எழுதியது சுகதேவ்.
தியாக தாய்கள் : மூன்று வீரர்களின் குடும்பத்தினர், இறுதியாக ஒரு தடவையாவது தங்களின் இளம் தியாக செல்வங்களின் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற துடிதுடிப்போடு லாகூர் சிறை வாசல் வந்தனர். இறுதிச் சந்திப்பிற்காக வந்த பகத்சிங் தாத்தாவையும், சித்திகளையும் சிறை அதிகாரிகள் நேரடிச் சொந்தங்கள் அல்ல என்று கூறி அனுமதி மறுக்க, பகத்சிங்கின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை சந்திக்க செல்ல மாட்டோம் என்று மறுத்தனர்.வெள்ளையர்களின் மனிதாபி மானமற்ற இச்செயலை கேள்விப் பட்டு துடித்துப்போன ராஜ்குருவின் தாயார் பார்வதி பாயும், சுகதேவின் தாயார் ரால்லி தேவியும், நாங்களும் எங்களின் புதல்வர்களை சந்திக்க மாட்டோம் என்று வெள்ளைய அதிகாரிகளை எதிர்த்து நின்றனர். மாலையில் சூரியன் மறையும் வேளையில் பாலுாட்டி வளர்த்த தங்கள் மகன் இவ்வுலகிலிருந்து மறைந்து விடுவான் என்று தெரிந்தும் இறுதியாக தங்கள் மகன்களின் முகம் பார்க்க மறுத்து, இத்தாய் நாட்டுக்காக தியாகத்தைசெய்ததற்கு பாராட்டுவதற்கு வர லாற்றில் வார்த்தைகள் இல்லை!
இறுதி ஆசை : 1931 மார்ச் 23ம் நாள் காலை, சிறை மரபின் படி அதிகாரிகள் பகத்சிங்கிடம், 'உங்களது கடைசி ஆசை என்ன?' எனக் கேட்க 'பிபி' தயாரித்த உணவுகளை உண்ண விரும்புகிறேன் என்றார். பகத்சிங்கின் சிறைக்கு 'பிபி' அழைத்து வரப்பட்டதை பார்த்து அதிர்ந்தான் அந்த வெள்ளைய அதிகாரி. அவள் பகத்சிங்கின் சிறைக் கழிவறையை சுத்தம் செய்யும் பெண் போகா. அவரை பகத்சிங், 'பிபி' (வளர்ப்புத்தாய்) என்று தான் அழைப்பார். 'ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்ப்பதே எனக்கு பெருமை, ஏழையான என்னிடம் உங்களுக்கு கொடுக்க எதுவுமில்லை' என பிபி கூற, 'நீங்களே சமைத்த உணவை நான் கடைசியாக உண்ணவேண்டும்' என்று பகத்சிங் உதிர்த்த கடைசி ஆசை பிபி யின் கண்களை குளமாக்கியது. பின்பு தன்னுடைய வாளியையும், விளக்குமாறையும் எடுத்துக் கொண்டு நடந்து சென்ற அந்தத் தாய், கதவருகே சென்று பகத்சிங்கை திரும்பிப் பார்த்து மாலை வருகிறேன் என்று கண்ணீருடன் அங்கிருந்து விடை பெற்றார். நன்றாக சமைத்த உணவுடன் மாலை போகா திரும்பி வந்த போது, பகத்சிங் அங்கு இல்லை. ஏனெனில் அது 23-ம் தேதி மாலை பகத்சிங் அவரின் தோழர்கள் ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரின் மூச்சு இந்த தேசக்காற்றில் கலந்த நேரம்.
மார்ச் 23 இரவு 7.30 மணி...: வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே சிறை அதிகாரிகள் மற்ற கைதிகளை அவர்களின் சிறை அறைகளில் அடைத்தனர். நடக்கப் போவது தெரிந்தவுடன் மரண தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து புறப்பட்டது இன்குலாப், ஜிந்தாபாத்! என்ற முழக்கம்.சிறை அதிர்ந்தது, சிறைக்கம்பி கள் வளைந்தன, இன்குலாப் ஜிந்தாபாத்! என்ற சப்தம் சிறைச் சுவர்களைத் தாண்டி இந்ததேசத்தின் காற்றில் கலந்து நாடு முழுவதும் சோகம் தழுவிய உள்ளங்களையும் உதடுகளையும் உரக்க அசைத்தது. சரியாக இரவு 7:30 மணியளவில் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் மூவரையும் துாக்கிலிட்ட போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தற்கொலை செய்து கொண்டது.
முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர், தேவாங்கர் கலைக் கல்லுாரிஅருப்புக்கோட்டை

78108 41550

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
valentin m - chennai,இந்தியா
31-மார்-201709:50:59 IST Report Abuse
valentin m இதை போன்ற கட்டுரைகளை தினமலரிடம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் , நன்றி, இந்த உரையை எழுதிய பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றி
Rate this:
Share this comment
Cancel
Pandiyanadu Pandian - Madurai,இந்தியா
24-மார்-201713:54:51 IST Report Abuse
Pandiyanadu Pandian அருமையான கட்டுரையை பதிப்பித்தற்கு நன்றி ....
Rate this:
Share this comment
Cancel
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
24-மார்-201713:22:22 IST Report Abuse
Dr. D.Muneeswaran இது போன்ற கட்டுரைகளே தினமலரை உயர்த்துகிறது.......தொடரட்டும் மலரின் தேசப்பணி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை