Chennai: Rs 4.5 cr cash,Rs 85 cr worth gold and documents seized from TN Minister Vijaya Bhaskar's residence in an IT raid | சேகர் ரெட்டி 'போட்டு' கொடுத்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டிக்கிட்டார் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சேகர் ரெட்டி,  அமைச்சர், விஜயபாஸ்கர், மாட்டிக்கிட்டார்,

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.

சேகர் ரெட்டி,  அமைச்சர், விஜயபாஸ்கர், மாட்டிக்கிட்டார்,

அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் விடாப்பிடி சோதனை நடந்து வருகிறது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா அணியினர், கூவத்துாரில் அடைத்து வைத்திருந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். அப்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது சொத்து குவிப்பு பட்டியலை, பன்னீர் அணியினர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர்.

காலை 6 மணி

தற்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடும், தினகரனின் வலது கரமாக, விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அங்கு நடந்த தாராள பணம் பட்டுவாடாவை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ந்து போய், சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளது.அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு பக்கபலமாக செயல்படும் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர்.
வழக்கத்துக்கு மாறாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் உதவிக்கு, தமிழக போலீசாரும் வந்திருந்தனர்.சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, கெங்கு ரெட்டி தெருவில் உள்ள, விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, திருவொற்றியூரில் உள்ள மற்றொரு சகோதரி வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள, ஐந்து அறைகளிலும் சோதனை நடந்தது. இதில், விஜயபாஸ்கர் அறையில் இருந்து, 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 85 கோடி

அமைச்சரின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் சீனிவாசன் என்பவரின், வளசரவாக்கம் வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் சிக்கின.இதற்கிடையில், அமைச்சர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை, ஒரு கும்பல், புதுக்கோட்டை நிர்வாகிகள் தங்கியிருந்த, எழும்பூர், கென்னட் லேன், லட்சுமி லாட்ஜிக்கு கடத்தியது. அந்த தகவல் தெரிந்ததும், அந்த லாட்ஜிலும், அதிகாரிகள் புகுந்தனர். அங்கு, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள்

பட்டியலும், அவர்களுக்கு பணம் தந்ததற்கான ஆவணங்களும் சிக்கின. இது தவிர, திருவல்லிக்கேணியில் வசிக்கும், அமைச்சருக்கு நெருக்கமான நயினார் முகமது வீட்டில், மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், அமைச்சருக்கு நெருக்கமான தரகர்,கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்பேஷ் ஷா என்பவரின் வீட்டில், 1.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள, தமிழக மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ராஜேந்திரன் வீடு உட்பட,சென்னையில், 26 இடங்களில் சோதனை நடந்தது.

ஸ்ரீரங்கம், தேவகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, இரண்டு வீடுகள்; திருவேங்கைவாசல் பகுதியில், பினாமி நிறுவனமான, 'ராசி புளூ மெட்டல்ஸ் குவாரி' ஆகிய இடங்களிலும் சோதனைநடந்தது.மேலும், நச்சாந்துப்பட்டியில் உள்ள, அமைச்சரின் டிரைவர் அப்துல்லா வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அன்னை தெரசா கல்வி நிறுவனங்களிலும், இலுப்பூர் ராசி லாட்ஜிலும் சோதனை நடந்தது.மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மணப்பாறையிலும், நாமக்கல்லில் உள்ள அமைச்சரின் உறவினரான, கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் என, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் சோதனை நடந்தது. இதில், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுவாடா ஆவணங்கள் மற்றும், 4.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையில், சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30 க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.

போட்டுக் கொடுத்த சேகர் ரெட்டி

'அமைச்சர் விஜயபாஸ்கர், என் மறைமுக தொழில் கூட்டாளி' என, சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் தான், அவரது வீட்டில் சோதனை நடத்த காரணமாகி உள்ளது.தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளை நடத்தும் உரிமம் பெற்றிருந்த, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில், 2016 டிசம்பரில் வருமான வரி சோதனை நடந்தது. அதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின், சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, சேகர் ரெட்டியிடம், டிசம்பர், 8ல் வாக்குமூலம் பெற்றோம். அப்போது, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற மணல், கிரானைட் சாம்ராஜ்ஜியத்தில், நான், சீனிவாசலு, ரத்தினம் ஆகிய மூவருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், சைலன்ட் பார்ட்னராக இருக்கிறார்' என்ற அதிர்ச்சி தகவலை, சேகர் ரெட்டி கூறினார். இந்தத் தகவல், அவரின், ௧௨௪ பக்க வாக்குமூலத்திலும் இடம் பெற்றுள்ளது. அப்போதிருந்தே விஜயபாஸ்கரை கண்காணித்து வருகிறோம். தேர்தல் பணம் பட்டுவாடாவுக்காக மட்டும், இந்த சோதனை நடைபெறவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மணல் சாம்ராஜ்ஜியம்!அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில், இலுப்பூரில் மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு, ஜல்லி, கிராவல் மண் ஆகியவை எடுக்கப்படுகின்றன.

Advertisement

வருமான வரித்துறையினர் கூறியதாவது:நடிகர் சரத்குமாரை,தினகரனுக்கு ஆதரவாக இழுக்க, விஜயபாஸ்கர் கடுமையாக முயன்றுள்ளார். இதில், ஏழுகோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.சரத்குமாரை, தினகரனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்துள்ளார். அதனால், சரத்குமாருக்கு தரப்பட்டதாக கருதப்படும் ரொக்கப் பணத்தை, அவரது வங்கி லாக்கர்களில் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குட்கா அதிபரிடம் பல கோடி மாமூல்!

வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் பான், குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தார். ஆனால், மாநிலம் முழுவதும், அவை தங்கு தடையின்றி விற்பனையாகின. அந்த ஆலை அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர்.அதனால், நாங்கள், 2016 ஜூலை மாதத்தில், சென்னை, திருச்சி மற்றும் ஆந்திராவில் உள்ள, குட்கா ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினோம். அதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆலை அதிபர் மற்றும் கூட்டாளிகளிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 'டைரி' மூலம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில், தடை விதிக்காமல் இருப்பதற்கு, மாமூல் தரப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கீதாலட்சுமி சிக்கியது எப்படி?

தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் அரசு பொது மருத்துவமனை டீன் போன்ற பதவிகளை வகித்தவர்.சில பணி நியமனங்கள் மற்றும் மருந்து கொள்முதல்களுக்கு, விஜயபாஸ்கருக்கு தரகர் போல் செயல்பட்டதால், அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

அரசியல் பழிவாங்கல்!

வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு வந்ததும், அமைச்சர் திடுக்கிட்டார். அப்போது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்ற பணிகள் தொடரட்டும் என, அதிகாரிகள் கூறினர்.ஆனால், தன் மகளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, அமைச்சர் பேட்டி கொடுத்ததால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், அமைச்சர் அளித்த பேட்டியில், ''தினகரன் வெற்றியை தடுக்கும் திட்டத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி, அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான், இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதே தவிர, வேறெந்த காரணமும் இல்லை,'' என்றார்.

சரத்குமார் வீட்டில்நடந்த பரபரப்பு

சென்னை, கொட்டிவாக்கத்தில், சரத்குமார் வீடு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி முதல், வருமான வரித்துறையினர், இந்த வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டு வாசலில் நின்ற, இரண்டு பிரசார வாகனத்தை சோதனையிட்டனர்.வீட்டில், சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருந்தனர். சிறிது நேரத்தில், அங்கு கூடிய ரசிகர்கள், மோடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.மாலை, 3:00 மணிக்கு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்களை, போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசார் மற்றும் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சரத்குமார் கூறியதாவது :தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க, என் வீட்டை சோதனையிட்டு உள்ளனர். மனைவி ராதிகா குளித்துக் கொண்டிருந்த போது, குளியலறை கதவை தட்டி, சாவி கேட்டனர். மருந்து வாங்கக் கூட வெளியே அனுப்பவில்லை. அதிகாரிகள், நாகரிகம் இல்லாமல் நடந்தனர்.நான், தினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (190)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
09-ஏப்-201707:36:21 IST Report Abuse

rmrஇந்த சரத்குமார் போன்ற கூத்தாடிகளுக்கு ஆதரவு தரவே கூடாது ஊரே வில்லங்கமா போய்டும்

Rate this:
VELAN S - Chennai,இந்தியா
08-ஏப்-201723:54:56 IST Report Abuse

VELAN Sதினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லைன என சரத் கேட்கிறார் , பதில் ரொம்ப சிம்பிள் , நீ தினகரனிடம் கோடி கணக்கில் காசு வாங்கியிருக்கிறாய் , அவர் வாங்கவில்லை ,ஒரு ஓட்டை கட்சியை வச்சிக்கிட்டு உழைக்காமல் , நோகாமல் கோடி கணக்கில் சம்பாதித்து விட்டாயே ,

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-ஏப்-201704:54:40 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்/நீ தினகரனிடம் கோடி கணக்கில் காசு வாங்கியிருக்கிறாய் , அவர் வாங்கவில்லை// எவர்? பன்னீரு.. வாங்கலை? என்ன வாங்கலை? மணல் மாபியா டான், தேனீ மாபியா லீடரை இப்படி அவமானப்படுத்துறியே.....

Rate this:
sankar - trichy,இந்தியா
11-ஏப்-201703:25:24 IST Report Abuse

sankarஅவரு வாசனை சொல்றாரு...

Rate this:
jagadeesan - Hosur,இந்தியா
08-ஏப்-201723:01:41 IST Report Abuse

jagadeesanமுட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை நாடு உயராது.அறிவாளிகளாக இருந்த மக்களை முட்டாளாக்கிய பெருமை திமுகவை சேரும்.1967 சட்டசபை தேர்தலில் கள்ள ஒட்டு போட்டு ஆட்சிக்கு வந்தவர்களின் வாரிசுகள் இன்றை நிலையில் ஆட்டம் போடுகிறார்கள் கள்ள ஓட்டுக்கு எடுத்துக்காட்டு திமுக.ஓட்டுக்கு பணம் கொடுத்தது திமுக எதையெல்லாம் மறந்து விட்டு காங்கிரஸ் கட்சிக்காரன் திமுக, அதிமுக,இவர்களின் சட்டியி தூக்குகிறார்கள்.பணத்தை கொள்ளை அடிப்பது இவர்களுக்கு நன்கு தெரியும் அதை விட பணத்தை பதுக்க தெரியும் எத்தனை அதிகாரிகள் வந்தாலும் நாங்கள் ஆதரமாட்டோம்

Rate this:
Anandan - chennai,இந்தியா
09-ஏப்-201705:45:27 IST Report Abuse

Anandanஇன்னொரு விடயம் பிஜேபி தமிழனை கேவலப்படுத்துகிறான். உதாரணம். ராஜா, சு.சா, தருண் விஜய்...

Rate this:
மேலும் 184 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X