த்வயக் காப்பு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

த்வயக் காப்பு

Added : ஏப் 09, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
த்வயக் காப்பு Ramanujar Download

ஒரு மேகத்தைப் போல் நின்று நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது காவிரி. கரையோர மரங்கள் காற்றை நெம்பித் தள்ளும் விதமாக ஆடிக் கொண்டிருக்க, அண்ணாந்து பார்த்துவிட்டு, 'இன்றைக்கு மழை வரும் போலிருக்கிறதே!' என்றார் பெரிய நம்பி.

'நாங்கள் கிளம்பும்போது திருமலையில் நல்ல மழை. ஒரு பெரிய காரியம் சிறப்பாக நடந்தேறியதால் அதை அனுபவித்துக்கொண்டு நனைந்தபடியே கிளம்பி விட்டோம்.' என்றார் ராமானுஜர்.'ஒன்றல்ல, இரண்டு என்று சொல்லுங்கள் சுவாமி. திருமலையப்பனின் அடையாளச் சிக்கல் தீர்ந்தது என்றீர்களே, அது அளிக்கும் நிம்மதி மகத்தானதாக உள்ளது. உண்மையில் சொல்லுவதென்றால் எனது நுாறாவது பிறந்த நாளில் இதைக் காட்டிலும் ஒரு நற்செய்தி
கிடைத்திருக்க முடியாது. என்னைப் பாரும். நுாறு வயது போலவா தெரிகிறது? பத்திருபது வருடங்கள் உதிர்ந்து விட்டதைப் போல இருக்கிறது!' குழந்தை போலச் சிரித்தார் நம்பி.காலை அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுவிட்டு, கோயிலுக்குப் போய் சன்னிதியில் நெடுநேரம் கண்மூடி நின்றிருந்தார் ராமானுஜர்.'உடையவரே, நுாறாண்டுகள் வாழ்வது ஒரு சாதனையல்ல. வாழ்வு நாள் முடியும் காலத்தில் மனக்கவலைகள் மிகுவதுதான் வேதனையளிக்கிறது. சோழன் நம்மைச் சும்மா விட்டுவைக்க மாட்டான் போலிருக்கிறது' என்று சொல்லியிருந்தார் பெரிய நம்பி.திருமலையில் இருந்து அவர் அரங்க நகர் திரும்பிய கணத்தில் இருந்து பலபேர் சுற்றிச் சுற்றி இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். குலோத்துங்கனின் வைணவ விரோத நடவடிக்கைகள். கோயில் மானியங்களை ரத்து செய்கிற நடவடிக்கை. உற்சவங்களைத் தடுக்கிற மனப்போக்கு.
வைணவர்களைத் தேடித்தேடி அவமானப்படுத்துவதில் அவன் அடையும் ஆனந்தம்.'அரசுப் பணியில் வைணவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள் சுவாமி! சிவனே பெரிய கடவுள் என்று ஏற்போருக்கு மட்டுமே மன்னன் சபையில் இடம்.'

'அப்படியா? நாலுாரான் கங்கை கொண்ட சோழபுரத்தில்தானே இருக்கிறார்? சோழனின் அமைச்சர் வைணவரே அல்லவா?' என்று கேட்டார் ராமானுஜர். 'கெட்டது கதை. நாலுாரான் விவகாரம் தெரியாதா உமக்கு? அவர் வைணவர் என்றாலும் மன்னன் வழியே தன்வழி என்று மாறிப் பலகாலமாகிறது.' 'உடையவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? அவர் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி ஆறு வருடங்களாகின்றன. நாலுாரான் கெட்டதெல்லாம் இப்போதுதானே?'ராமானுஜர் அமைதியாக யோசித்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் உள்ளிட்ட சில சீடர்களுடன் அன்று மாலை ஆற்றங்கரைக்கு உலவச் சென்றபோது தற்செயலாகப் பெரிய நம்பி அங்கு ஓரிடத்தில் அமர்ந்திருப்பது கண்டு அருகே சென்று வணங்கினார்.'சுவாமி, தள்ளாத வயதில் தாங்கள் இத்தனை துாரம் நடந்து வர வேண்டுமா?''வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை உடையவரே. மனம் முழுதும் சோழனின் நடவடிக்கைகளைப் பற்றிய கசப்பே நிரம்பியிருக்கிறது. கங்கை பாவம் கரைக்கும் என்றால் காவிரி துக்கமாவது கரைக்காதா?''சுவாமி, தங்களுக்குத் தெரியாததல்ல. வைணவம் அனாதியானது. இது ஒருவர் தோற்றுவித்த சமயமல்ல. என்றும் உள்ளது. எத்தனை இடர் வந்தாலும் வென்று மீள்வது. இங்கே ஒரு யக்ஞேசர் போல பரதக் கண்டம் முழுதும் இந்தப் பயணத்தில் எத்தனை யக்ஞேசர்களைக் கண்டேன் தெரியுமா? வாதத்தின் பெயரால் நிகழ்ந்த விதண்டாவாதங்களை வைணவமே வென்று வாகை சூடியது. காரணம், இது பெருமானுக்கு உகந்த வழி. பெருவழி என்பது இதுவே அல்லவா? எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள். நிரந்தரமற்ற உலகில் வைணவ தருமம் ஒன்றே நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாதா!''உண்மைதான் ராமானுஜரே. ஆனால் சோழன் கண்மண் தெரியாமல் ஆடுகிறான். பலப்பல சிறு கோயில்கள் இந்தச் சில வருடங்களில் இழுத்துப் பூட்டப்பட்டு விட்டன. மன்னனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அறப்பணி செய்வோரும் வைணவத் தலங்களைக் கண்டும் காணாமலும் போக ஆரம்பித்து விட்டார்கள். விளக்கேற்றவும் வழியின்றி பல ஆலயங்கள் இருண்டு கிடக்கின்றன.'

பெரியவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.'புரிகிறது சுவாமி. இதில் நாம் செய்யக்கூடியது என்னவென்றுதான் தெரியவில்லை. உயிர் உள்ள வரை நாம் இத்தருமத்தைவிட்டு விலகப் போவதில்லை. திட சித்தம் கொண்ட யாரும் மன்னனுக்கு அஞ்சி மறுவழி தேடப் போவதுமில்லை. மழையோ வெயிலோ அடித்து ஓயத்தானே வேண்டும்? நாம் அது ஓயும் வரை அமைதி காப்பது தவிர வேறு வழியில்லை.' என்றார் ராமானுஜர்.
சிறு துாறல் விழத் தொடங்கியிருந்தது.'கூரேசரே, பெரியவரை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வாரும்!' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் புறப்பட்டார்.'ஒரு நிமிடம் சுவாமி. என் ஆத்ம திருப்திக்கு நான் ஒரு காரியம் செய்யலாம் என்றிருக்கிறேன்!' என்றார் பெரிய நம்பி.
'சொல்லுங்கள்.''நாளைக் காலை த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கோயிலை நான் வலம் வரப் போகிறேன். நடக்கச் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி தெரியவில்லை. நமக்கெல்லாம் நலம் தரும் சொல் என்றால் அது ஒன்றுதானே. அது காக்கட்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'தங்கள் சித்தம் சுவாமி.''அகந்தையற்ற சுத்த ஆத்மாவான இந்தக் கூரேசரை எனக்கு உதவியாக அனுப்பி வையுங்கள். பிடித்துக்கொள்ள ஒருத்தர் தேவைப்படுகிறார் இப்போதெல்லாம்.'மறுநாள் காலை பெரிய நம்பி, கூரேசரின் கையைப் பிடித்துக்கொண்டு த்வய மந்திரத்தை உச்சரித்தவண்ணம் திருவரங்கம் பெரிய கோயிலைச் சுற்றி வரத் தொடங்கினார். அது ஒரு காப்பு. மந்திரக் காப்பு. கெட்ட நோக்கத்தோடு யாரும் நெருங்க முடியாமல் தடுத்து நிறுத்துகிற காப்பு. உச்சரிப்பவரின் பரிசுத்தம், மந்திரத்துக்கு மேலும் வீரியம் கொடுக்கும். வெறும் உச்சாடனமல்ல. அது தியானம். தன்னை ஆகுதி ஆக்கி, மந்திரத்தில் நிகழ்த்துகிற வேள்வி.

'இது போதும் முதலியாண்டான். பெரிய நம்பியைக் காட்டிலும் ஒரு புனிதர் திருவரங்கத்தில் இன்றில்லை. அவர் செய்கிற த்வயக் காப்பு இம்மண்ணை சோழனிடம் இருந்து காக்கும்.' என்று சொன்னார் ராமானுஜர்.சிறிது காலம் அப்படித்தான் இருந்தது. சோழ தேசம் முழுதும் வைணவர்களைத் தேடித்தேடிச் சித்ரவதை செய்து கொண்டிருந்த குலோத்துங்கன், திருவரங்கத்தின் பக்கம் திரும்பாமலேதான் இருந்தான்.சட்டென்று ஒருநாள் அதுவும் நடந்தது. 'என்ன பெரிய ராமானுஜர்? என்ன பெரிய ஸ்ரீபாஷ்யம்? சிவனே பெரிய கடவுள் என்று அவரையும் சொல்ல வைக்கிறேன் பார்!'நச்சு உமிழ் சர்ப்பமாகச் சீறி எழுந்தது அவனது அகந்தை.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
10-ஏப்-201709:45:22 IST Report Abuse
Manian பொலிக என்பது "ஒளிரட்டும்" என்று பொருள். புத்த லோவில்களை ஜைனர்கள் அழித்தார்கள். ஜைனர் கோவில்களை இந்துக்கள் அழித்தார்கள். இந்து கோவில்களை முசல்மான்கள் அழித்தார்கள். சுன்னிகள் ஷியா மசூதிகளை தாக்குகிறார்கள், சிங்களத்தில் புத்தர்கள் இந்து கோவில்களை தாக்குகிறார்கள்.15 ம் நூற்றாண்டில், கத்தோலிக்கர்கள் piradasdanduklai கொன்றார்கள். இவ்வாறு மத்தின் பெயரால் சண்டைகள் - பொருளாதார, அரசியல் சுய தந்திரிக்காக நடந்துள்ளன. இப்போது ஜாதி சண்டைகளாகவும் மாறிவிட்டன . இதில் வைணவ, சைவ சண்டைகளும் அடங்கும். பெருமை படக்கூடிய விஷயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-ஏப்-201716:18:54 IST Report Abuse
மலரின் மகள் ஆசிரியர் ப ராகவன் ஐயா அவர்களுக்கு ஒரு கேள்வி எழுதும் விதம் திவ்யமாக இருக்கிறது. உண்மையில் மனதில் பக்தி பெருகுகிறது. தலைப்பிற்கு விளக்கம் தருவது ஒரு மரபு என்று அறிகிறேன். ஒரு தலைப்பை இடும் பொது அதற்கான விளக்கமாக அதன் கதைகள் அமையும், தலைப்பே கதை சொல்லும் அவ்வாறு இல்லாத பொது அதை பற்றிய விளக்கங்கள் இருக்கும் என்றெல்லாம் அறிகிறேன். த்வயக் காப்பு விளக்கம் என்ன? அதற்கான அர்த்தம் தெரியவில்லை. ''த்வயம்'' என்றால் என்ன? த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போலவா? அதனால் காப்பு எதற்காக செய்யப் படுகிறார்கள், மனதை அங்கும் இங்கும் அலைந்து விடாமல் இறைவனை நோக்கி ஒருமுகப் படுத்தருவதற்காக செய்யப் படுவதா? அதை எவ்வாறு செய்ய வேண்டும்? விளங்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி ஐயா?
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
10-ஏப்-201711:54:30 IST Report Abuse
Darmavanத்வயம் என்பது இரண்டு(ட்வின்) என்பதை குறிக்கும். விஷிஷ்டாத்வைதத்தில் மூன்று ரகசியங்கள் சொல்லப்படுவதுண்டு. அதாவது 1.'ஓம் நமோ நாராயணாய' - என்கிற திரு மந்திரம் 2.மேலே சொன்ன தவயம் 3,' சர்ம சுலோகம்' அதாவது பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன ' சர்வ தர்மான்' என்கிற சுலோகம். இது மூன்றும் குரு மூலம் சீடன் கற்க வேண்டும். ஒன்றாவதில் நாராயணன் மட்டுமே குறிக்கப்படுகிறான் ஆனால் இரண்டாவதான த்வயத்தில் ஸ்ரீ என்கிற மகா லக்ஷ்மியும் ஸ்ரீமன் நாராயணனும் சேர்த்து வணங்கப்படுகிறார்கள்."அது: ஸ்ரீமன் நாராயண சரனொவ் சாரம் பிரபத்யேயே , ஸ்ரீமதே நாராயணய நமஹ' என்பது. ஆக லட்சுமி பிராட்டியின் சேர்த்தியினால் பெருமான் கருணை அதிகம் என்றும் ,சேர்த்தியிலே வணங்குவதுதான் உயர்வு என்றும் அது எல்லா பாபங்களையும் போக்கும் கவசமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சேர்த்தியில்தான் ராமானுஜரும் பங்குனி உத்திர விழாவில் ஸ்ரீரங்கத்தில் தன்னுடைய கத்ய தரியம் மூலம் மோட்ச கத்தியை பிரார்திக்கிறார் ....
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-201723:56:14 IST Report Abuse
மலரின் மகள்நன்றி ஐயா தெளிவு பிறந்தது....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-ஏப்-201715:43:28 IST Report Abuse
மலரின் மகள் அன்புள்ள ஆசிரியர் குழுவிற்கு, எனது தமிழ் அறிவு அப்படி ஒன்றும் சிறந்தது அல்ல. ஒரு சிறிய சந்தேகம். பொலிக பொலிக என்பதன் அர்த்தம் என்ன? அது சரி தானா? நான் பொழிக பொழிக என்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆங்கிலம் மூலம் டைப் செய்து அது தமிழ் வாரியாக மாறுவதில் வந்த குழப்பமா? தயவு செய்து விளக்கவும். ( பொலிக பொலிக- மேலும் மேலும் சிறப்பு பெறுக பொழிக பொழிக- பெய்தல் அல்லது வழங்குதல்)
Rate this:
Share this comment
arvindan - Chennai,இந்தியா
10-ஏப்-201709:52:30 IST Report Abuse
arvindanபொலிக பொலிக என்பதே சரியான வார்த்தை. இவ்வார்த்தை நம்மாழவாரின் ப்ரபந்ததில் எடுத்த வார்த்தை. அர்த்தம் நல்லது நடக்கவிருக்கிறது என்ற பொருளில்....
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-201723:53:56 IST Report Abuse
மலரின் மகள்நன்றி. மனம் சந்தோசம் அடைகிறது. விளக்கங்களை கேட்டு அதற்கு அருமையாக விளக்கம் கிடைத்ததை படிக்கும் ஆனந்தம் அலாதியானது. ஆசிரியர் குழுவிற்கும், வாசக பக்த கோடிகள் பக்திமிகு அரவிந்தன் மற்றும் பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு எனது நன்றி. அனைவரின் வாழ்விலும் வளங்கள் பொலிக பொலிக....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X