சேற்றில் சிக்கித் தவித்த யானை: பல மணி நேரம் போராடி மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேற்றில் சிக்கித் தவித்த யானை: பல மணி நேரம் போராடி மீட்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பவானிசாகர்: பவானி ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்து, சேற்றில் சிக்கித் தவித்த பெண் யானையை, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின், வனத்துறையினர் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. கடும் வறட்சியால் வனத்தில் குளம், குட்டைகள் வறண்டு விட்டன. இதனால் யானைகளுக்கு போதிய தீவனம், தண்ணீர் கிடைப்பதில்லை. குடிநீர் தேடி பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிக்கு படையெடுக்கின்றன. பவானி ஆற்றை ஒட்டியுள்ள பகுதி, சேறும் சகதியுமாக உள்ளன. இதனால், யானைகள் சேற்றில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒன்பதுக்கும் மேற்பட்ட யானைகள், பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான, சித்தன்குட்டை-நடுமேடு பகுதிக்கு வந்தன. அப்போது, ஒரு பெண் யானை, பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, வாழைத்தோட்டத்தை நோக்கி சென்றது. சமீபத்தில் பெய்த மழையால், ஆற்றில் ஒரு சில இடங்களில் சேறும் சகதியுமாக இருந்தது. சேற்றில் யானை சிக்கியது. உடன் வந்த யானைகள், யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அப்போது, பின்னங்கால் சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் மீட்க முடியாமல், சேற்றில் சிக்கிய யானையின் குட்டியுடன், மற்ற யானைகள் காட்டுக்குள் சென்று விட்டன. நேற்று அதிகாலை, அப்பகுதிக்கு சென்ற விவசாயிகள் மற்றும் மக்கள், சேற்றில் சிக்கித் தவித்த யானையை பார்த்தனர். பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், மக்கள் உதவியுடன் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யானை உடலில் கயிறு, பெல்ட் கட்டி இழுத்தனர். வெகு நேரம் சிக்கியிருந்ததால், சோர்வாக காணப்பட்ட யானை, பலமுறை எழுந்து நிற்க முயன்றது. ஆனால், முடியாததால் சேற்றிலேயே விழுந்தது. இதனால் யானை உடலில் தண்ணீர் தெளித்து, வெப்பத்தை தணித்தனர். சிறுமுகை வனத்துறை ஊழியர்களை அழைத்தனர். அவர்களுடன் இணைந்து, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பிறகு, யானையை மீட்டனர். அதன் பிறகு, யானை மெதுவாக எழுந்து பவானி ஆற்றைக்கடந்து வனப்பகுதிக்கு சென்றது. உடன் வந்த யானைக்கூட்டத்தின் பிளிறல் சத்தம் கேட்டு, சுறுசுறுப்படைந்த பெண் யானை, பட்ரமங்கலம் வனத்துக்குள் சென்று சேர்ந்தது. மீட்கப்பட்ட பெண் யானைக்கு, 20 வயது இருக்கும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை