ஸ்டாலின் விருப்பமும் திராவிட நாடும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஸ்டாலின் விருப்பமும் திராவிட நாடும்!

Added : மே 05, 2017 | கருத்துகள் (6)
Advertisement
ஸ்டாலின் விருப்பமும் திராவிட நாடும்!

நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓர் அணுகுண்டை வீசினார். கருணாநிதியிலிருந்து, கடைசி லெட்டர் பேடு கட்சி தலைவர்கள் வரை ஆடிப்போய் விட்டனர்.'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எனக்கு எதிரியே இல்லை' என்றார். உண்மை தான். ஜெயலலிதாவை எதிர்த்து, 'நான் தான் அடுத்த முதல்வர்' என, அடித்துப்பேச அப்போது ஆட்களே இல்லை. சற்று சிந்தித்து பார்த்த போது, அது உண்மை தான் என, பட்டது. அவருடைய நல்ல காலம். 90 வயது முதியவர் கருணாநிதி, அன்று படுத்தவர் தான்... இன்று வரை அவர் உடல் நிலை சரியாகவில்லை. எல்லாம், செயல் தலைவர் ஸ்டாலின் தான். ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் நிறைய உண்டு. ஆனாலும், அரசியலில் அவர் ஒரு, 'ஒயிட் காலர்' பேர்வழி தான்.
கலைஞரை போல, சொற்சிலம்பம் ஆட வராது. ஆவேசம் வராது; சாதுர்யம் போதாது. இந்த, 'அம்மா'வை எப்படி சமாளிக்கப் போகிறாரோ என பயந்த, தி.மு.க., தலைவர்கள் சிலரை எனக்கு தெரியும். இந்தக் குதிரையை நம்பி, பணம் கட்டலாமா என, எண்ணிய பழைய, தி.மு.க., தலைவர்களும் உண்டு. அதற்குள் ஜெ., விலையில்லா ஆடு, மாடு, கோழி, லேப் டாப் என வழங்கி, எங்கோ போய் விட்டார். டில்லி போவார். மோடியை மட்டும் சந்திப்பார். 'அதிக நிதி வேண்டும்' என, நிதியமைச்சரையோ, 'நீர் வேண்டும்' என, வேளாண் துறை அமைச்சரையோ, மின்சாரப் பற்றாக்குறைக்காக, மின் துறை அமைச்சரையோ சந்திக்க மாட்டார். கோரிக்கைகள் எல்லாவற்றையும், 32 பக்க கடிதத்தில் எழுதி, மோடியிடம் கொடுத்து, அன்றிரவே, மீனம்பாக்கம் வந்து விடுவார். தன் தகுதிக்கு மோடி மட்டுமே லாயக்கு என்ற எண்ணம், அவரைப் பிடித்து ஆட்டியது. இப்படி ஜெ., நடந்து கொண்டதால், தமிழகத்திற்கு நல்லது எதுவுமே நடக்காமல் போனது.
அவரின் மிக கடுமையான விஷயம் என்றால், சுப்ரீம் கோர்ட் செல்வார். அதோடு, கதையை முடித்து விடுவார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வரும் போது, கர்நாடகாவில், சித்தராமையா நான்கு அணைகளை கட்டியிருப்பார்; உம்மன் சாண்டி, நம் நிலத்திலேயே, கார் பார்க்கிங்கும், தங்கும் விடுதியையும் கட்டியிருப்பார். இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த ஜெயலலிதாவுக்கு சக்தி போதாது. அதிகாரிகள் எடுத்து சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்.
கருணாநிதியாக இருந்திருந்தால், காங்கிரசோடு கூட்டணி அமைத்து, பேரன்களுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து, 35 லோக்சபா தொகுதிகளில், 30ஐ கொடுத்து, காங்கிரசை ஜெயிக்க வைப்பார். இந்திராவுக்கும், ராஜிவுக்கும் அது போதும்.

காவிரியாவது... முல்லைப் பெரியாறாவது... உழவன் உணவு தின்றால் என்ன... எலிக்கறி தின்றால் என்ன... கருணாநிதியின் காலமும் இப்படியே போய் விட்டது. இனி, தமிழகத்திற்கு யார் என, பார்க்கும் போது, ஸ்டாலின் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிப்பார் என, நினைத்த நேரத்தில், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல, வாயை திறக்க ஆரம்பித்திருக்கிறார், அவர். அன்புமணி ராமதாசோ, வைகோவோ, விஜயகாந்த்தோ, ஐவர் கூட்டணியோ யாருமே முதல்வராக தகுதியில்லை என, தமிழக மக்கள் முடிவெடுத்த பின், காயை ஸ்டாலின் சரியாக நகர்த்த வேண்டாமா... 50 ஆண்டு கால அரசியல் அனுபவம், பல முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்த கவுரவம், ஒரு முறை துணை முதல்வராக இருந்த செல்வாக்கு, இவை எல்லாம் கை கொடுக்கும் என, மக்கள் நினைத்த நேரத்தில், எதை பேசுவது என, தெரியாமல் பேசியிருக்கிறார்.
'இன்றைய இளைஞர்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, திராவிட இயக்கம் பற்றி எதுவுமே தெரியவில்லை. இதை, நல்லபடி எழுதி, பாட திட்டங்களில் சேர்க்க வேண்டும்' என, பேசியுள்ளார். சிரிப்பு தான் வருகிறது. ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கலைஞரால் முடியாததை, இவர் முடிக்க ஆசைப்படுகிறார். இப்படி பேசியவுடன், இவருக்காவது திராவிட இயக்க வரலாறு தெரியுமா... என்ற சந்தேகமும் வருகிறது. இந்தியாவை மோடி, 2030க்கு அழைத்து போக ஆசைப்படுகிறார். ஸ்டாலின், 1930க்கு தமிழகத்தை அழைத்து போக ஆசைப்படுகிறார். 1930களில் சென்னை நகரில் உள்ள, சில, பிராமணரல்லாத பணக்கார பேர்வழிகள் ஒரு கட்சியை துவக்கினர். அதன் பெயர், தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதில், ஈ.வெ.ரா.,வும் அடக்கம்.
'வெள்ளையன் வெளியேற வேண்டாம்; இந்தியாவை அவனே ஆளட்டும்' என்பதே, இச்சங்கத்தின் குறிக்கோள். சர் பி.டி.ராஜன், டி.எம்.நாயர், தியாகராய செட்டியார், பொப்பிலி ராஜா, ஈ.வெ.ராமசாமி, பனகல் ராஜா மற்றும் சில பணக்காரர்கள் தோற்றுவித்த கட்சியே அது. இவர்களின் தலையாய கொள்கையே, 'பிராமணத் துவேஷம்' மட்டும் தான். 'வெறும், 2 சதவீதமே வாழும் பிராமணர்கள், ரயில்வே, தபால், தந்தி துறையில், மற்ற அரசு வேலைகளில் நிறைய இருக்கின்றனரே, நம் சமூகத்தைச் சேர்ந்த முதலியார்கள், வன்னியர்கள், செட்டியார்கள் போன்ற பிராமணரல்லாதோர் ஏன் அரசு வேலைகளில் இல்லை, பிரிட்டிஷ் அரசு ஏன் நம்மவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை' என, யோசித்து போராட ஆரம்பித்தனர். மேலும், வட மாநிலங்களில் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கும் போது, தீரர் சத்யமூர்த்தி, ஸ்ரீனிவாச அய்யங்கார், ராஜாஜி, விஜயராகவாச்சாரியாருக்கு கிடைத்த மரியாதை, காங்கிரசில் இருந்த, ஈ.வெ.ரா.,வுக்கு கிடைக்கவில்லை. காரணம், ஈ.வெ.ரா.,வுக்கு ஆங்கிலம் தெரியாது; ஹிந்தியும் தெரியாது.
அவரால் எப்படி, மதன் மோகன் மாளவியாவிடமும், நேருவுடனும், காந்தியுடனும் பேச முடியும்... அதனால், வடக்கேயும், பிராமணனாக இருந்தால் தான், நமக்கு மரியாதை என, இங்கு வந்து, பிரசாரத்தை துவக்கினார். பிராமணத் துவேஷம், ஹிந்தி எதிர்ப்பு,
வட மாநிலத்தவர் எதிர்ப்பே, ஈ.வெ.ரா.,வின் கொள்கை என, ஆயிற்று. அது தான், ஈ.வெ.ரா., கண்ட, திராவிடம்.'திராவிடம்' என்ற சொல்லே, 'சம்ஸ்கிருதம்' என்ற வடமொழி சொல் தான். தமிழம், தமிளம், த்ரமிளம், திராவிடம் என, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, இங்கே வழக்கத்தில் இருந்தது. தமிழுக்கு, மதுர பாஷா என்று பெயர் இருந்ததாக, ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரே கூறுகிறார். இன்னொரு பெயராக, தமிழ், திராவிட பாஷை எனவும் வழங்கலாயிற்று. எங்கோ இருந்த தாகூர், 'ஜன கன மன' தேசிய கீதத்தில், 'த்ராவிட உத்சல வங்கா' என, ஈ.வெ.ரா.,வுக்கு முன்பே கூறியிருக்கிறார். எனவே, திராவிடம் என்பதே வடசொல் தான். இது தெரியாமல், திராவிடர் கழகத்தை துவக்கினார், ஈ.வெ.ரா. அண்ணாதுரை போன்ற பேச்சாளர்கள், ஈ.வெ.ரா.,வின் சீடராயினர். அண்ணாதுரை, நாவலர், ஈ.வெ.கி.சம்பத், என்.வி.நடராஜன் போன்றோரும் சேர, திராவிடர் முன்னேற்ற கழகம் தோன்றியது. இவரது கொள்கைகளுக்காக, திராவிட நாடு பத்திரிகையும், சுவர்களில் இவர்களின் கொள்கை முழக்கங்களை எழுத, சுவரெழுத்தாளர் சுப்பையாவும், பல்பொடி மெரினா ராஜாரத்தினமும், திராவிட இயக்கத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் கருத்தில், மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளே திராவிடம். ஆனால், கன்னடரும், ஆந்திரரும், மலையாளியும், திராவிட நாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. தமிழிலிருந்து இம்மொழிகள் பிறந்தன என்பதை இன்று வரை இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அண்ணாதுரை மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, நான்கு மொழிகளிலும் ஒரு திரைப்படம் எடுத்தால், திராவிட நாட்டை பெற்று விடலாம் என, பேசி பார்த்தார். எதுவும் செல்லுபடியாகவில்லை.
'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்றார். எவனும் மசியவில்லை. ஆனால், அண்ணாதுரை ஓர் அறிவாளி. ராஜ்யசபா எம்.பி., ஆனவுடன் விமானத்தில் டில்லி செல்லாமல், காரில் சென்றார். அண்ணாதுரை அறிவுப்பூர்வமாக பேசலானார்.'நம் தமிழர் வாழ்வை விட வடமாநிலத்தவரின் வாழ்வு மோசமாக இருக்கிறது' என்பதை உணர்ந்தார். சீன யுத்தம் வந்தபோது நேருவிடம் தாராளமாக நிதியுதவி வழங்கினார். திராவிட நாட்டை கை விட்டார். சிறிது சிறிதாக, அவரிடம் மொழி துவேஷமும், இனத் துவேஷமும் குறைந்தது. ராஜாஜி, ம.பொ.சி., கூட்டு அவரை முதல்வராக்கியது. அவரது எதிர்பாரா மரணம், கருணாநிதியின் யோகம். அண்ணாதுரையின் மரணத்திற்கு பின் திராவிட நாடும், சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. தனித் தமிழ்நாடு சிலரால் கோரப்பட்டது. ஆனால், அனைவருடைய பதவி ஆசையால் அது எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. திராவிடம் என்ற நாடு போய், அந்தச் சொல்லை, தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., பெரியார் திராவிடர் கழகம் போன்றவை பயன்படுத்த ஆரம்பித்தனவே தவிர, யாரும் திராவிட நாடும் கேட்கவில்லை; தனித் தமிழ்நாடும் கேட்கவில்லை.
அரசியல் என்பதே மக்களுக்காக உழைப்பது என்பது போய், காசு பார்ப்பது என்பது, ஆர்.கே.நகர் தேர்தல் வரை வந்து போய் விட்டது.இந்நிலையில், மீண்டும் ஸ்டாலின், இளைஞர்கள் அனைவரும் திராவிட இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யார் முன்வருவர்?
ஸ்டாலினுக்கு பின் யார்... யாருமே இல்லை. திராவிட நாடு கதை முடிந்து விடும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் பின் போவதில்லை. திடீரென ஒரு நாள், லட்சக்கணக்கில், விவசாயிக்கு, மீனவனுக்கு என கூடுவர்.
அவர்களுக்கு தலைவர்கள் கிடையாது. பேச வந்த ஒரு சிலரையும் விரட்டி விடுவர். தனியே போராடுவர். தங்கள் தெருவில், வட்டத்தில், விவசாயிகளிடத்தில், மீனவ சமுதாயத்தில் கேடு என்றால் பொங்கி எழுவர்.இவர்களுக்கு திராவிட வரலாறாவது... வெங்காயமாவது... ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்!

பா.சி.ராமச்சந்திரன்
மூத்த பத்திரிகையாளர்
இ - மெயில் :bsr43@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
07-மே-201710:59:15 IST Report Abuse
Mohan Sundarrajarao பொருளாதாரம் படித்தவர், இரண்டு MA பட்டம் வாங்கியவர். ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றைக்கும் போட முடியாது என்று அவருக்கு தெரியாதா? தன் நெஞ்சறிந்து, பொய்யுரைத்து, ஆட்சிக்கு வந்தார். அரசியல் அமைப்பு சட்டத்தை எரிக்க வில்லை, வெறும் தாளைத்தான் எரித்தோம் என்று சொல்லி தப்பித்து ஓடி வந்து விட்டார். ஆனால், ஒன்று. ஊழல் செய்து, கொள்ளை அடிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sulikki - Pudukkottai,இந்தியா
07-மே-201710:12:59 IST Report Abuse
Sulikki திராவிடர்களை மட்டம் தட்டும், இந்த மேதாவியாவது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடாமல், தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யட்டும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
06-மே-201712:25:57 IST Report Abuse
S Rama(samy)murthy சிறப்பான கருத்து பதிவு சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X