தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள்!

Added : மே 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள்!


மிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால், நமக்கு நாமே செயல்பட்டால் தான் உண்டு என கருதி, நம் இளைஞர்கள், மாவட்டத்திற்கு மாவட்டம், களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு, 'சல்யூட்!'
சென்னை அருகே உள்ள, கும்மிடிப்பூண்டியில், 'கும்மிடிப்பூண்டி இளைஞர் களம்' என்ற அமைப்பு செயல்படுகிறது. நான்கு பேரில் ஆரம்பித்த இந்த குழு, 500 பேர் குழுவாக வளர்ந்துள்ளது. இதில் உள்ள இளைஞர்கள், மக்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு ஞாயிறு அன்றும், நாற்றம் பிடித்த இடங்களை சுத்தம் செய்வதுடன், மரக்கன்றுகளை நட்டு, கம்பி வேலி அமைத்து, நீர்நிலைகளை பராமரிக்கின்றனர்.
அசுத்தமான தெருக்களை சுத்தம் செய்து தரும் படி, மக்களும் இவர்களை அழைக்கின்றனர். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த இளைஞர் அமைப்பு, சொந்த பணத்தை செலவழித்து, அப்பகுதியை அழகுபடுத்தி வருகின்றனர். இவர்களை போன்ற இளைஞர்களுக்கு கரம் கொடுத்து, உதவி செய்யுங்கள்.
சனி, ஞாயிறு கிழமைகளில் ஓய்வெடுத்து, 'நெட்'டில் கிடந்து, பகல் எல்லாம் தூங்கி வழிந்து, வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் இளைஞர்கள் மத்தியில், கும்மிடிப்பூண்டி இளைஞர்கள், ஞாயிறு முழுவதும் பொது சேவை செய்வது, எவ்வளவு பெரிய விஷயம்!நீர் நிலைகளை பாதுகாத்தல், தங்கள் பகுதியை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல் என, தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர், இந்த இளைஞர்கள்.
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இளைஞர் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தால், நம் நாடு, அடுத்த சிங்கப்பூர் ஆகிவிடும்.
மகேஷ் என்ற இளைஞர், பிரவீன், ஜெகன், பரணி என்ற தன் நண்பர்களின் துணையுடன், 'தமிழா' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கனடாவில் வசித்தாலும், அவ்வப்போது தமிழகம் வந்து, மாநிலம் முழுவதும் பயணம் செய்து, மக்கள் பணி ஆற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி மடையாறு குளம் என்ற குளத்தை, தூர் வாரியுள்ளனர். 20 ஆண்டுகளாக, அரசு செய்யாத வேலையை, 'தமிழா' அமைப்புடன், 'கன்னியாகுமரி மீம்ஸ், இளந்தளிர், இயற்கையோடு பயணம், ஸ்கிரீனர்' என்ற அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் கை கோர்த்து, மூன்றே நாளில், தூர் வாரி, நீர் நிரம்பி வழியும் அழகிய குளமாக மாற்றி
உள்ளனர்.
இந்த வேலையை மாநில அரசு செய்யுமானால், கோடிக்கணக்கில் கணக்கு காட்டி, மாதக்கணக்கில் இழுத்தடிக்கும். ஆனால், வெறும், 30 ஆயிரம் ரூபாயில், மூன்றே நாளில், இந்த பணியை மிக அழகாக செய்து, நீர் சுரப்பதற்கு வழி செய்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தில், 4,400 குளங்கள் இருந்த நிலையில், இன்று, 2,300 குளங்கள் தான் உள்ளன. இவற்றை பாதுகாத்து, பழைய நிலைக்கு கொண்டு வந்தால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லி, குளங்களை சுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்களை ஏற்படுத்தி, நீர் நிலைகளை பாதுகாப்பதுடன், நாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது தான், 'தமிழா' போன்ற, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் விருப்பமே.
தமிழா அமைப்பினர், ஆந்திர அரசு தண்ணீர் தராமல் இருக்கும், பாலாறு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினர். இந்த பாலாறு, கர்நாடகாவிலுள்ள கோலார் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு, ஆந்திரா வந்து, அதன் பிறகு, தமிழகத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாய்ந்து, கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம், நம் தமிழகத்தில், 4 லட்சத்து, 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில், ஆந்திர அரசு, இந்த ஆற்றில், ஆங்காங்கே தடுப்பணை கட்டி, நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்று தானே, ஓலமிட்டு கொண்டிருக்கிறோம். இதுகுறித்து, இந்த இளைஞர் அமைப்பினர் ஆராய்ச்சி செய்தது. அவர்கள் கண்டுபிடித்த உண்மை என்னவென்றால், நம் மாநில மணல் திருட்டு, 'மாபியா' கும்பல், ஆற்றில் தண்ணீர் இருந்தால், மணலை திருட முடியாது என்பதற்காக, தண்ணீரை தேங்க விடாமல் செய்யும் சதி திட்டம்
செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள, 'கோவை குளங்கள் பாதுகாப்பு' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், ஒரு அருமையான வேலையை
செய்துள்ளனர். என்ன தெரியுமா...கோவையிலுள்ள வெள்ளலூர் என்று ஒரு கிராமம். இங்கு, 15 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, 99 ஏக்கர் பரப்பளவிலுள்ள குளத்தை, இந்த அமைப்பினர் தூர் வாரி சுத்தம் செய்துள்ளனர்.
அத்துடன், நின்று விடாமல், இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகளை கண்டுபிடித்து, இடிந்து போய் இருந்த கண்மாயை சரி செய்துள்ளனர். நாமெல்லாம் விழிப்புணர்வு இல்லாமல், கண்ட கண்ட இடத்தில் குப்பை போட்டு, நீர் நிலைகள் உள்ள இடத்தை, பிளாஸ்டிக் கழிவுகளால் நாசம் செய்து வைத்துள்ளோமே... அந்த குப்பை, குளத்திற்கு தண்ணீர் வரும் மூன்று துவாரங்
களையும் அடைத்திருந்தன.
அவற்றை எந்த, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டும் தூர் வார முடியாது. 'பீட்ஸா, பர்க்கர் சாப்பிட்டு, 'கெத்து' காட்டத்தான் இன்றைய இளைஞர்கள் லாயக்கு... வீட்டில் சாப்பிட்ட தட்டை கூட கழுவாத, உதவாக்கரைகள்' என, பெற்றோரால் வசைபாடப்படும் இந்த இளைஞர்கள், தங்கள் கைகளால் குப்பையை அகற்றி, சுத்தம் செய்து
உள்ளனர். குப்பை லாரி நம்மை கடந்து சென்றாலே, மூக்கை பிடிக்கும் நம் மத்தியில், இந்த இளைஞர்களது தியாகத்தை நாம் என்னவென்று சொல்வது!இவ்வளவு கஷ்டப்பட்டு, வெள்ளலூர் குளம், ராஜ வாய்க்கால் என, மூன்று நீர்நிலைகளை சுத்தம் பண்ணியாச்சு... இனி, பருவ மழை பெய்து, ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து, நொய்யல் ஆறு நிரம்பும் என, நினைத்த நேரம், ஒரு சிக்கல் இருந்தது.ராஜ வாய்க்காலில் ஒரு பகுதி முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவர்களை அகற்றினால் தான், ராஜ வாய்க்கால்
வழியாக நீர் வந்து, நொய்யலூர் குளம் நிரம்பும்.
அங்கு, ஆக்கிரமிப்பாளர்களுக்காக, 1,000 வீடுகளை அரசே கட்டி வைத்துள்ளது. அவர்கள் இடத்தை காலி பண்ணாமல், தாமதம் செய்வது தான் பிரச்னையே... காலி செய்யவில்லை என்றால், நம் இளைஞர்கள் செய்த ஒட்டு மொத்த பணியுமே வீணாகி விடும்.
இப்படி ஒரு பைசாவும், எதிர்பார்க்காமல், தங்களது அறிவை பயன்படுத்தி, 'மேப்' போட்டு, 'வீடியோ'வில் பதிவு செய்து, எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு தீர்வு கண்டே தீர்வோம் என, உழைக்கும் இந்த இளைஞர்களுக்கு, நாம் கை கொடுப்போம். அப்போது தான், நம் நாடு முன்னேறும்.நாட்டை, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன... என, நாமெல்லாம் இருந்ததன் விளைவு தான், அரசியல்வாதிகள் நம் தமிழகத்தை கூறு போட்டு விற்று விட்டனர். எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்.
நீர்நிலைகளை அம்போவென விட்டதில், நம் விவசாயிகளுக்கும் பெரிய பங்குண்டு. விளைச்சலை மட்டும் அனுபவித்த அவர்கள், நீர்நிலைகளை காப்பாற்ற தவறிவிட்டனர். குடிமராமத்து என்ற அவர்களின் முக்கிய பணியை மறந்து, 'டிவி' தொடர்களில் ஆழ்ந்து விட்டனர் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
நம் விவசாயிகளை பற்றி பேசும் போது, விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன, ஆந்திராவின், குடிவாடா நாகரத்தினம் நாயுடுவை பற்றி சொல்ல விரும்புகிறேன்...
ஐதராபாத்தில் வசிக்கும் இவர், இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர். விவசாயத்தில் புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், வேலையை விட்டு, தன் சேமிப்பு பணத்தில், 17 ஏக்கர் நிலம் வாங்கினார்.
விவசாயத்திற்கு ஏற்றதல்ல என, ஒதுக்கி வைக்கப்பட்ட கரடு முரடான இடத்தை, இவரும், இவரின் மனைவி, தாய் ஆகிய மூன்று பேரின் கடின உழைப்பால், தங்கம் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். இவர், ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில், இயற்கை வேளாண்மை செய்கிறார்.
'திருந்திய நெல் சாகுபடி' முறையில், பயிர்களை சாகுபடி செய்து, 2.5 ஏக்கரில், 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து, சாதனை படைத்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இம்முறையை பயன்படுத்தி, சாகுபடி செய்து, பயன் அடைந்துள்ளனர்.
'ஒரு விவசாயி, ஒரே பயிரை, திரும்ப திரும்ப பயிரிடக்கூடாது. பல வகை பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும்' என, சொல்லும் இவர், 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறார். மாங்காயில், 35 வகைகளை பயிரிடுகிறார். அலங்கார மலர்களில், 40 வகைகளை பயிரிடுகிறார். இவரது வயலில், இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். இதனால், 10 கி.மீ., தூரத்தில் இருந்தும் மக்கள் வந்து, இவரது பண்ணையில் விளையும் பொருட்கள் மற்றும் பால் போன்றவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
'ஒரு விவசாயிக்கு, தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், ஆறு மாதத்திற்கு ஒரு வருமானம், ஆண்டு வருமானம் என, ஐந்து வகையான வருமானங்கள் உண்டு. அதை சரியாக திட்டமிட்டால் வங்கி கடன், அரசு மானியத்தை நீங்கள் எதிர்பார்க்கவே வேண்டாம்' என்கிறார்.
ஆச்சரியமாக இருக்கிறது!
'ஒரு மாடு, இயற்கையாக எவ்வளவு பால் கறக்குமோ அதை மட்டும் தான் கறக்க வேண்டும். இப்படி செய்தால், மாடுகளுக்கு மருத்துவ செலவே வராது' என கூறும் இந்த வேளாண் விஞ்ஞானி, மாணவர்களுக்கு, விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை கடமையாக வைத்துள்ளார். இது வரை, 35 ஆயிரம் மாணவர்கள், இவரது பண்ணைக்கு வந்து, ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர். ஆந்திர அரசு, சமூக அறிவியல் பாடத்தில், இவரது விவசாய முறையை, ஒரு பாடமாக வைத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விவசாயம் செய்து, பெரிய கோடீஸ்வரராக விளங்கும் இவரது வீடு முழுவதும், 336 விருதுகள், ஒன்பது சர்வதேச விருதுகள் அலங்கரித்துள்ளன.
நம் நாட்டு விவசாயிகளின் உயிரை காப்பாற்ற துடிக்கும் இளைஞர்களே... இவரை அணுகி, இவரது விவசாய முறையை அறிந்து, நம் விவசாயிகளுக்கு உதவி செய்தால், நம் மாநிலத்திலும் அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை காப்பாற்ற முடியும்.குடிவாடா நாகரத்தினம் நாயுடு, ஐதராபாத். மொபைல் எண்: 094404 24463.
சிந்திப்போம்; செயல்படுவோம்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
07-மே-201705:03:34 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. கும்மிடிப்பூண்டி இளைஞர் களம,தமிழா' அமைப்பு,கன்னியாகுமரி மீம்ஸ், இளந்தளிர், இயற்கையோடு பயணம், ஸ்கிரீனர்' போன்ற அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள். ஒரு பேராசிரியராக, மாணவர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளவன் நான். நாளைய உலகம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டது போல சனி, ஞாயிறு கிழமைகளில் ஓய்வெடுத்து, 'நெட்'டில் கிடந்து, பகல் எல்லாம் தூங்கி வழிந்து, வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பொதுநல சிந்தனையுடன் சேவையை செய்யும் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் . சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் மனிதன் என்று அழைக்க படும் ராஜஸ்தானை சேர்ந்த திரு ராஜேந்தர்சிங் அவர்களின் அற்புதமான உரையை கேட்ட போது தமிழ்நாட்டில் நிலவும் வறட்சிக்கும் வெள்ளத்திற்கும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தான் காரணம் என்று ஒரு கருத்தை வலியுறுத்தி கூறினார். அவரின் கருத்து உண்மை என்பதை நாம் உணர வேண்டும். நம் மாநில மணல் திருட்டு, 'மாபியா' கும்பல், ஆற்றில் தண்ணீர் இருந்தால், மணலை திருட முடியாது என்பதற்காக, தண்ணீரை தேங்க விடாமல் செய்யும் சதி திட்டம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. என்ற இந்த செய்தியை படிக்கும் மாண்பு மிக்க நீதி அரசர்களில் ஒருவர் இதனை தான் முன் வந்து விசாரிப்பார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீரின்றி அமையாது உலகு, அதைப்போல சுழன்றும் ஏர்பின்னது உலகம். அதனால் நீர் நிலைகளை பராமரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. தினமலர் அருமையான கட்டுரையை பிரசுரித்த அதே நேரம் கட்டுரை ஆசிரியரின் பெயரை போடாதது ஒரு குறையாக தோன்றுகின்றது. அதை போல தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள என்று தலைப்பை கொடுத்து விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன, ஆந்திராவின், குடிவாடா நாகரத்தினம் நாயுடுவை பற்றி குறிப்பிடுவதால் தலை நிமிர்த்தும் இளைஞர்கள என்றோ தலை நிமிர வைக்கும் இளைஞர்கள என்றோ கொடுத்து இருக்கலாம். இந்த சமுதாயத்தை மேம்படுத்த தினமலருக்கு இருக்கும் பொறுப்பான எண்ணம் வரவேற்க தக்கது. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். வெற்றியும் நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை