பூமியை வளமாக்க செயற்கை மழை| Dinamalar

பூமியை வளமாக்க செயற்கை மழை

Added : மே 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பூமியை வளமாக்க செயற்கை மழை

கடந்த சில ஆண்டாக வறட்சி தாண்டவ மாடுகிறது. கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மழைகுறைந்ததே இதற்கு காரணம். வரும் காலங்களில் இதன் தீவிரம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய 60,70 ஆண்டுகளுக்கு முன் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று மரம், செடி கொடிகள் அடர்ந்து இருந்த காரணத்தால் மழை போதிய அளவிற்கு மேலாகவே பெய்தது. உதாரணத்திற்கு மதுரை, தேனி மாவட்டங்களை எடுத்து கொள்ளலாம். அப்பொழுது வைகை நதியிலும், தேனி முல்லையாற்றிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்.
வருஷநாட்டு மலையிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் மழைநீரை மரங்கள் தம் வேர்களில் சேமித்து வைத்து சிறிது, சிறிதாக வழிய விட்டதனால் ஆண்டு முழுவதும் ஆறுகளில் தண்ணீர் ஓடியது. அதனால் அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் வைகை அணையை கட்டினார். இதே நிலை இருந்த மற்ற பகுதிகளிலும் அவர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டன. விவசாயம் நன்கு செழித்தது.

மரங்கள் அழிப்பு : தற்போதைய நிலையில் குறிப்பாக மதுரை,தேனி மாவட்டங்களை பொறுத்த வரையில், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வருஷநாட்டு மலைகளிலும் இருந்த மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. அதனால் மழை குறைந்து வருகிறது. குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதே நிலைதான் மற்ற பகுதிகளில் நிலவுகிறது.
இமயமலை பகுதியில் இப்பொழுதும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்படுகின்றனவாம். அப்பகுதியில் பெய்யும் மழை நீர் தங்கு தடையின்று பெரும் வெள்ளமாக பெருக்கெடுத்து பெருத்த அழிவுகளை வட மாநிலங்களில் ஏற்படுத்துவதை கண்கூடாக காண்கிறோம். கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் நாம் குடிநீருக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். நமக்கான உரிய நீர் தடுக்கப்படுகிறது. அம் மாநிலங்களில் கட்ட முனைந்திருக்கும் புதிய அணைகள், தடுப்பணைகள் வாயிலாக தமிழகத்திற்கு கிடைக்க கூடிய நீர் கிடைக்காமல் செய்யப்படுகிறது. நீதிமன்றங்களை நாடி நீதி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். மத்திய அரசும், எல்லா மாநில அரசுகளும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்தால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு பல தீர்வுகள் உண்டு என்பதை அறிவர். அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.

செயற்கை மழை : எல்லா மாநிலங்களிலும் மலைகள் நிறைந்த பகுதிகளில் இருந்துதான் மழை பெய்து தண்ணீர் வருகிறது. மழை போதிய அளவு பெய்யாததால் பிரச்னை உருவாகிறது. அவ்வப்பொழுது அப்பகுதிகளில் செயற்கை மழை பெய்ய ஆவண செய்ய வேண்டும். அதாவது மலைகளில் சூழ்ந்துள்ள குளிர்ந்த மேகங்களுக்கிடையில் விமானம் மூலம் சில்வர் அயோடைட், துாளாக்கிய சமையல் உப்பு, ஐஸ்கட்டிகள் போன்றவற்றை துாவி விட்டால் மேகங்கள் திரண்டு மழை கொட்டும் என்பது விஞ்ஞான ரீதியாக அறிந்த உண்மை. உலகிலேயே சீனாவில் அதிகமாக செயற்கை மழையை உருவாக்கி கொள்கிறார்கள். தாய்லாந்து, துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் இம் முறையை பயன்படுத்துவதாக அறிகிறோம். மும்பையில் ஒருமுறை செயல்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தும் நாடுகளுக்கு நமது வல்லுனர்களை அனுப்பி தொழில் நுட்பத்தை அறிந்து வர செய்யலாம் அல்லது அந்நாட்டு வல்லுனர்களை நம் நாட்டிற்கு வரவழைத்து செய்முறை செய்து காண்பிக்கலாம். இதற்கு சில கோடி ரூபாய் செலவு செய்தாலும் பலகோடி ரூபாய் அளவிற்கு பயனடைய வாய்ப்பு உள்ளது. அந்த செலவை பயனடையும் மாநிலங்களுக்குள் பயன்பாட்டிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளலாம்.

நதிநீர் இணைப்பு : மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதற்கான செயல் திட்டத்தை வகுத்து அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவு நீர் கிடைக்கும் படியாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பெரு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளையும், வறட்சியால் நிகழும் இன்னல்களையும் தவிர்க்க முடியும். இதனை நிறைவேற்ற நீண்டகாலமாகும் என்றாலும் இது நிரந்தர தீர்வு தரும் திட்டம். நதிநீர் இணைப்புகளை போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம்.

சொட்டு நீர் பாசன முறை : கிடைக்கும் நீரை சொட்டு நீர் பாசனம் மூலம் சிக்கனமாக பயன்படுத்தினால் பயிரிடும் முழுப்பயனை கொடுக்கும். தண்ணீர் குறைவாக கிடைக்கும் பகுதிகளில் இம்முறை கையாள வேண்டும். தற்பொழுது சிலர் மட்டுமே இதனை பயன்டுத்துகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள அனைத்து பகுதிகளிலும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு மானியம் உண்டு. வறட்சி நிரம்பிய நாடுகள் சில இம்முறையை கையாண்டு அபரிமிதமான வருமானம் பெற்று வருகின்றன.

மழைநீர் சேமிப்பு : மழைக்காலங்களில் உபரியாக ஓடி வீணாக கடலில் கலக்கும் மழைநீரை ஆங்காங்கே ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். அதற்கான கால்வாய்களை வெட்டி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே போல் வீடுதோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து நீரை பூமிக்குள் செலுத்த வேண்டும். இது நிலத்தடி நீர் மட்டம் உயர உதவும்.
ஏரி, குளம் பராமரித்தல் பொதுப்பணித்துறை, ஊராட்சி, ஒன்றியங்கள் பராமரிப்பில் உள்ள ஏரி, குளங்களை ஆண்டுதோறும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். முக்கியமாக வரத்துகால்வாய்களை சுத்தம் செய்தல், ஏரி, குளம் ஆழப்படுத்துதல், ஆழப்படுத்த எடுக்கும் மண்ணை கொண்டு கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை பழுதுபார்த்தல், வயல்களுக்கு செல்லும் கால்வாய்களை சரி செய்தல் போன்றவற்றை கிடப்பின்றி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் நீர் நிலைகளில் மழைநீர் சேகரமாகி வயல்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். வயல்களில் பாயும் நீர் ஆங்காங்கே உள்ள கிணறுகளுக்கு ஊற்றெடுக்க வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் நீர் வற்றினாலும் கிணற்று நீரை பயன்படுத்தி பயறு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்யலாம். இதனால் ஆண்டு முழுவதும் வேளாண்மை செழிக்க வாய்ப்பு உண்டு. ஏரிக்கரைகளில் பனைமரங்கள் வளர்த்தால் கரைகள் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் உடையாமல் இருக்கும். பெரும்பாலான ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அவற்றை அகற்றி பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்..

பயிர்களை தேர்வு செய்தல் : தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்ப பயிர்களை விளைவிப்பது நல்ல பலனை தரும். டெல்டா மாவட்டங்களில் முழுமையாக தண்ணீர் கிடைக்கும் பொழுது நெல், கரும்பு பயிர் செய்யலாம். சிறிது குறைவாக கிடைக்கும் பட்சத்தில் மாற்றுப்பயிரான சிறுதானியங்கள், பயிறுவகைகள் பயிரிடலாம். மலைகளிலும், காடுகளிலும் உள்ள மரங்களை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க, பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள், மாணவர்களை இப் பணியில் ஈடுபடுத்தலாம்.
இந்த வழிமுறைகளை திட்டமிட்டு செயல்படுத்தும் பட்சத்தில் பூமாதேவி மனம் குளிந்து, குளிர்ந்த காற்றை மேலே அனுப்பி மேகங்களை திரள செய்து 'பெய்' என்றால் பெய்யும் மழை.
வளங்களை பெருக்குவோம்! வளமுடன் வாழ்வோம்!

எஸ்.ஜெகநாதன்
ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர்
94420 32516

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - California,யூ.எஸ்.ஏ
13-மே-201709:52:20 IST Report Abuse
Tamilan Ungaloda vaarthai malai migavum inimai. Aanaal kollai adikkum manguni Mannargudi gumbalai allava Naam therndheduthu sattasabaikku anuppi ullom.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-மே-201711:54:45 IST Report Abuse
மலரின் மகள் அறிவியல் கட்டுரைகளில் தமிழ் வார்த்தை ஜாலங்கள் கொண்டு செய்யப்படுவதால் அறிவியலின் உண்மையான பொருள் மறைந்து தமிழின் சுவை உவமை மட்டுமே வெளிப்படும். உவமேயம் தவறாகி விடும். ஒற்றை காரணிகள் என்று எந்த நிகழ்வுகளுக்கும் இல்லை. பல்வேறு காரணிகளின் கூட்டு தொகுப்பு அது ஒரு வித வீதியில் இணைந்து இருக்கும் பொது எல்லாம் சரியாக இருக்கும். அரசனுக்காக பொறு மலை என்று சொன்னார்கள், ஆகையால் மீண்டும் முடியாட்சியை கொண்டுவருவதா? மன்னனை பாராட்டி அவனை நாள் ஆட்சி செய்ய வைத்த டெக்னீக் அது. பொதுவான கருத்தாகத்தான் இதை எழுதுகிறேன். கட்டுரை அருமையாக இருந்தது, தமிழ் வார்த்தை மழை.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-மே-201714:57:50 IST Report Abuse
Nallavan Nallavanகட்டுரையாசிரியர் நன்கு புரியும்படியாகவே எழுதியுள்ளார் .... கட்டுரையும் உபயோகமானதே ..... ஆனால் செயல்படுத்தும் முனைப்பு, திறமை இதில்தான் இந்தியர்கள் பின்தங்கிவிடுகிறோம் .......
Rate this:
Share this comment
Kundalakesi - Coimbatore,இந்தியா
12-மே-201717:17:13 IST Report Abuse
Kundalakesiநல்லவன் நல்லனவன் அவர்களே. பின்தங்கி விடுகிறோம் என்று சொல்வதற்கு முன் நாம் (நீங்களும், நானும்) எவ்வளவு முயற்சி எடுத்தோம்? மரம் வளர்க்க, மழை நீர் சேகரிக்க, குளம் ஆறு மாசற்று காக்க?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை