ஜி.எஸ்.டி., வரி: வர்த்தகர்கள் வரவேற்பும் எதிர்பார்ப்பும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வரி: வர்த்தகர்கள் வரவேற்பும் எதிர்பார்ப்பும்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மத்திய அரசு வரும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தை அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் காஷ்மீரில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் முக்கிய பொருட்கள், சேவைகளுக்கான வரி விதிப்புகள் குறித்து இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்புடன் கூறிய கருத்துக்கள்:

மதுரை

எதிர்பார்க்கும் வரி விலக்கு

எஸ்.பி.ஜெயப்பிரகாசம், தலைவர், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் : ஜி.எஸ்.டி.,யில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களை, ஆடம்பர பொருட்கள் பட்டியலில் சேர்த்து அதற்கு வரி விதித்திருந்தனர். பிராண்டட் பொருட்களை சுத்தமாகவும், தரமாகவும் கொடுக்க பாக்கெட்டில் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, வரி விலக்கு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். இப்போது பதிவு செய்யப்பட்ட, பிராண்டட் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். மற்றபடி ஜி.எஸ்.டி., வரவேற்கப்பட வேண்டிய ஒரு சட்டம் தான்.

இறக்குமதி எண்ணெய்க்கு வரி

வி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலாளர், எண்ணெய் வியாபாரிகள் சங்கம்: சமையல் எண்ணெய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன் மத்திய உணவுத் துறை அமைச்சகம் சமையல் எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்த அமைச்சக கோரிக்கையை ஜி.எஸ்.டி., கவுன்சில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என, நாங்களும் வலியுறுத்தியுள்ளோம். எண்ணெய்க்கு வரி விலக்கு அளித்தால் பாமாயில் - நல்லெண்ணெய் வரை 3 - 10 ரூபாய் வரை விலை குறையும் இந்த விரி விலக்கை ஈடு செய்ய இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு 10 - 20 சதவீதம் வரி விதிக்கலாம். ஆனால், ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலையில் அமல்படுத்த வாய்ப்பில்லை, இன்னும், இரண்டு மாதங்கள் தள்ளிப் போகலாம்.

கடலை மிட்டாய்க்கு வரி

எல்.முராரி, தலைவர், மடீட்சியா: ஜி.எஸ்.டி.,யில் சில உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நிலக்கடலைக்கு வரி இல்லை ஆனால், அதில் கடலை மிட்டாய் தயாரித்து விற்றால் அதற்கு வரி உண்டு. அதே போல் நட்டு, போல்ட் போன்ற பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினால் ஒரு வரி, அதையே கார்களுக்கு பயன்படுத்தினால் ஒரு வரி என்ற முரண்பாடுகள் இருக்கிறது. 60 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகளுக்கு தடை உள்ளதால், 'நான் ஓவன்' துணிப்பைகள் அதிகம் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஜி.எஸ்.டி.,யில் இந்த பைகளுக்கும் வரி விதித்துள்ளனர். இதுவரை வரி விலக்கில் இருந்த ஆயூர்வேதம், சித்த மருந்துகளுக்கு 12 சதவீதம், டியூப், டயர்களுக்கு 28 சதவீதம் விதிக்கப்பட்ட வரிகளை நீக்க வேண்டும்.

பொருட்களின் விலை குறையும்

எஸ். ரத்தினவேலு, முதுநிலை தலைவர், தொழில் வர்த்தக சங்கம்: ஜி.எஸ்.டி.,யில் 1211 பொருட்களான வரிகளை கூறியுள்ளனர். இதில், வரி விலக்கு பெற்ற பொருட்கள் சுமார் 80, மீதமுள்ள பொருட்களுக்கு 5, 12, 18, 28 சதவீதங்கள் வரி விதித்துள்ளனர். பெரும்பாலான பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த கலால், மதிப்புக்கூட்டு வரிகளின் கூட்டுத் தொகையை விட, குறைவாக இருப்பதை பாராட்டி வரவேற்கிறோம். இதனால், பொருட்களின் விலை ஜி.எஸ்.டி., வரி சட்டத்தின் கீழ் குறையும் என்பது உறுதி. ஜி.எஸ்.டி.,யில் கலால், மதிப்புகூட்டு வரிகளை ஒரே கட்டமாக விதிப்பதால் அரசு, வரி ஏய்ப்பும் நடக்காமல் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் நேர்மையான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். கோதுமை, சோளம், தானியங்களை பேக்கிங் செய்யாமல், பதிவு செய்த வணிகப் பெயர் இல்லாமல் இருந்தால் தான் வரி விலக்கு என்று, உள்ளதை எதிர்க்கிறோம். பதிவு பெற்ற வணிகப் பெயரில் விற்றால் வரி விதிக்கப்படும் என்பதையும் எதிர்க்கிறோம்.

திண்டுக்கல்

பெரியளவில் பணபரிமாற்றம்

ஏ.பாலன் செயலாளர், வர்த்தகர்கள் சங்கம்: ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதை எங்கள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். உணவு பொருட்களின் வணிக பரிமாற்றத்திற்கு வரி விலக்கு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். வியாபாரிகளுக்கான வரியை முறைப்படுத்துவது அவசியம். ஜி.எஸ்.டி., முழுவதும் அமலுக்கு வரும்
போது மாநில வாரியான முக்கிய உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.தற்போது கர்நாடகாவில் அரிசிக்கு 2 சதவீதம் வரி உண்டு. தமிழ்நாட்டுக்கு அது கிடையாது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமைக்கும், தமிழகத்தில் அரிசிக்கும் வரி விலக்கு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கான ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதன்பின் நிறைய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. மாநிலங்களில் சாகுபடியாகி சந்தைகளுக்கு செல்லும் உணவு பொருட்கள், உணவு தானியங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி கிடைத்தால் வணிகர்கள் பொருளாதாரத்தில் ஜி.எஸ்.டி., வரி மூலம் பெரியளவில் பண பரிமாற்ற ஒழுங்குமுறை நிகழும். வணிக பொருட்களின் பரிமாற்றமும் எளிதாகும், என்றார்.

தேனி

-சர்க்கரை, மைதா விலை குறையும்

எம். ஆனந்தவேல், மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்க தலைவர்: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், வரி குறைப்பு உள்ளது. நுாறு கிலோ சர்க்கரைக்கு 195 ரூபாய் சுங்கவரி உள்ளது. உருண்டை வெல்லத்திற்கு வரி இல்லை. இது தவிர 5 சதவீத வாட் வரி உள்ளது. ஜி.எஸ்.டி., யில் சுங்கவரி தள்ளுபடி செய்யப்பட்டு, வாட் வரியாக வசூலிக்கப்பட்ட 5 சதவீத வரி தொடரும். இதனால் கிலோவிற்கு 2 ரூபாய் வரை குறையும். கோதுமை, மைதாவிற்கு 5 சதவீத வரி ஏற்கனவே உள்ளது. ஜி.எஸ்.டி.,யில் இந்த வரி நீக்கப்படுகிறது. இதனால் கிலோவிற்கு 3 ரூபாய் வரை குறையும்.
எண்ணெய்க்கு 5 சதவீத வாட் வரி ஜி.எஸ்.டி., யிலும் இருக்கும்; இந்த வரி அதிகரிக்கவில்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி ரத்துசெய்வது வரவேற்கதக்கது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் சாக்கில் வைத்து சில்லரை விற்பனை செய்தால் வரியில்லை. அதே நேரத்தில் 25 கிலோ பையில் விற்றால் வரி உண்டு. ஏற்கனவே அரிசி, பருப்பு, கோதுமை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லை. தற்போது அறிமுகம் செய்யும் ஜி.எஸ்.டி.,யில் வரி இல்லை என்பது வரவேற்பை பெறும். நறுமணப் பொருட்களான ஏலம், கிராம்பு, பட்டை , சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றிற்கு வரி உண்டு.

ராமநாதபுரம்

பொருட்களின் விலை குறையும்

பி. ஜெகதீசன், தலைவர், வர்த்தகர் சங்கம்: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது உறுதி. நாடு முழுவதும் பொருட்களுக்கு ஒரே விதமான வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதால் எல்லா ஊர்களிலும் ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்கப்படும். இதனால், விலைவாசி ஏற்றத்தாழ்வு நீங்குவதுடன் விலை நிச்சயம் குறையும்.
அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். அதே நேரம் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். தவறான, முறைகேடான வணிகம் செய்வோருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அரசை ஏமாற்றி போலி கணக்குகள் தாக்கல் செய்யவோ, வரி ஏய்ப்பு செய்யவோ இனி முடியாது.
ஆடம்பர கார்கள், புகையிலை பொருள்களுக்கு வரிவிதிப்பு அதிகரிப்பதை வரவேற்கலாம்; இதனால், கறுப்பு பண முதலீடு குறையும். மறைமுகமான விற்பனை வரி, சர்சார்ஜ், எக்சைஸ் வரி, நுழைவு வரி நீக்கப்படுவது மகிழ்ச்சி. இந்த வரி விதிப்பு முறை இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்.

சிவகங்கை

சாமி திராவிட மணி, தொழில் வணிக கழக தலைவர், காரைக்குடி: ஜி.எஸ்.டி.,யில் அரிசி, தானியம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு வரி குறைத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும். அழகு சாதன பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு வரி அதிகரித்திருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை. வரி குறைவான இடங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்து, பிற மாநிலங்களில் விற்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. புதுச்சேரியில் பொருட்களுக்கான வரி குறைவு என்பதால், கார் உள்ளிட்டவை அங்கு பதிவு செய்யப்பட்டு வாங்கப்பட்டன; தற்போது அனைத்து பகுதியிலும் ஒரே வரி என்பதால் விலை மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்காது. இதன் மூலம் வணிகர்களிடையே போட்டி ஏற்பட வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் சாதாரண வணிகர்களுக்கு பாதிப்பு குறைவு.

விருதுநகர்

அலசி ஆராய்ந்து வரி விதிப்பு

அருணாசலம், வர்த்தக சங்க தலைவர், சிவகாசி: எந்த பொருளுக்கு என்ன வரி என ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவித்துள்ளது. 'ஏசி' மற்றும் ஆடம்பர ஓட்டல்களில் தங்கும் போது சேவை வரி கூடுதலாக இருக்கும். ஆனால் பட்ஜெட் ஓட்டலில் 1,000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும். 'பில்களுக்கு சேவை வரி கிடையாது' என அறிவித்துள்ளனர். இதுபோன்று, நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்காத வகையில் சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. கல்வி மற்றும் சுகாதாரம் சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டு, ஆடம்பர பொருட்களுக்கு சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது.பால், காய்கறி, உப்பு, பால், முட்டை, டீ, காபி உள்ளிட்ட பொருட்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. கீழ்தட்டு மக்கள் எள்ளவும் பாதிக்காத வகையில் அலசி ஆராய்ந்து வரி விதித்திருப்பது பாராட்டத்தக்கது.

முறையற்ற வியாபாரம் குறையும்

பத்மநாபன், தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர், ராஜபாளையம்: மிகுந்த பாதிப்பு இல்லாமல் ஜி.எஸ்.டி., அமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கம் போன்ற சில பொருட்களுக்கு மட்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசின் வரி வருமானம் அதிகரிக்கும்.'அனைத்து தொழில்களும் வங்கி மூலம்தான் பணபரிவர்த்தனை செய்யவேண்டும்' என புதிய விதியில் கூறப்பட்டுள்ளது; இதனால் முறையற்ற வியாபாரம் குறையும். நேர்மையாக வியாபாரம் செய்தால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அறிமுகநிலை என்பதால் வரிவிதிப்பு குறைவாகவே உள்ளது; இதனால் பெரும்பாலும் பாதிப்பு இருக்காது.புது விதிகள் சேர்க்கப்படும்போதுதான், இதனுடைய நிறைகுறைகள் தெரியும். வரி வருமானம் அதிகமாகும்போது, நாட்டின் வசதிகள் பெருகும். நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய வரிவிதிப்பு முறையை நாம் சகித்துக் கொள்ள வேண்டும்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை