கத்தும் பாட்டு; காதுக்கு வேட்டு!பஸ் 'ஸ்பீக்கர்'களின் அலறல் அதிகரிப்பு:பல விதங்களிலும் பயணிகளுக்கு பாதிப்பு!| Dinamalar

தமிழ்நாடு

கத்தும் பாட்டு; காதுக்கு வேட்டு!பஸ் 'ஸ்பீக்கர்'களின் அலறல் அதிகரிப்பு:பல விதங்களிலும் பயணிகளுக்கு பாதிப்பு!

Updated : மே 20, 2017 | Added : மே 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கத்தும் பாட்டு; காதுக்கு வேட்டு!பஸ் 'ஸ்பீக்கர்'களின் அலறல் அதிகரிப்பு:பல விதங்களிலும் பயணிகளுக்கு பாதிப்பு!

'வெட்டிவேரு வாசம்...விடலைப்புள்ள நேசம்...' - எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத்தட்டாத, இளையராஜாவின் இந்த 'எவர் கிரீன் மெலடி' கூட, பஸ் பயணத்தில் வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்தளவுக்கு அதீத சப்தம், பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, பயணத்தையும் ஆபத்தாக்குகிறது.
சக பஸ்களின் போட்டியை சமாளித்து, வசூல் அள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடத்துனர்கள், பயணிகளை ஈர்க்க கையாளும் யுக்தி தான் பாட்டு. கால் நுாற்றாண்டுக்கு முன்பே துவங்கிய இந்த போட்டி, சமீபமாக உக்கிரமடைந்து, பயணிகள் செவிகளை பதம் பார்க்கிறது. செவிப்பறைகளைக் கிழித்து எறியும் அளவுக்கு, அதீத சப்தத்தில் பாடல்களை ஒலிக்க விடுவது அதிகரித்துள்ளது. கோவை மாநகர டவுன் பஸ்கள் மற்றும் மொபசல் பஸ்கள் என எதுவும் இதில் விலக்கில்லை.
எங்குமேயில்லை அமைதி!
பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பியவுடனே, 'லேட்டஸ்ட்' படங்களை, 'டிஜிட்டல் எபக்ட் சவுண்டு'டன் படு பயங்கர சத்தத்தில் போட்டு, பயணிகளை பாடாய்ப்படுத்துவதும், சில பஸ்களில் நடக்கிறது. நகருக்கு வெளியே சென்று விட்டால், இந்த சத்தம் மேலும் அதிகமாகி விடுகிறது; வயதானவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் பயணிப்போர், 'ஏன் தான் இந்த பஸ்சில் ஏறினோம்' என்று நொந்து போகின்றனர். பஸ்களில் அமைதியான பயணமே மேற்கொள்ள முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'இப்போதெல்லாம் பஸ்சில் ஏறி அமர்ந்தவுடன், அனைவரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர். பஸ்சில் ஒலிக்கும் கர்ண கடூர சத்தம், பயணிகளுக்கு எரிச்சலைதான் ஏற்படுத்துகிறது. சக பயணியுடனோ, அலை பேசியிலோ பேச முடிவதில்லை; நிம்மதியாய் சிறிது நேரம் கண்ணயர முடிவதில்லை. பஸ்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களால், ஓட்டுனரின் கவனம் தடுமாறுகிறது. தனது தலைக்கு மேலே பொருத்தியுள்ள 'டிவிடி'யில், பஸ்சை இயக்கியபடி 'சிடி', பென்டிரைவ் மாற்றுவது, ரிமோட் கன்ட்ரோல் பயன்படுத்தி, பாட்டு மாற்றுவது என, டிரைவர்கள் புரியும் 'ஒரு கை சாகசம்', நம்மை பதைபதைக்க வைக்கிறது. பஸ்களில் இந்த வசதிகளை உடனே அகற்ற வேண்டும்' என்றார்.
100 டெசிபலை தாண்டி...
விபத்து அபாயம் ஒருபுறமிருக்க, இந்த சத்தம், கேட்கும் திறனை கடுமையாக பாதிக்குமென எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள். இதுகுறித்து, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:தனியார் பஸ்களில் கேட்கும் பாட்டு சத்தத்தின் அளவு, கண்டிப்பாக 100 டெசிபலுக்கு மேலேதான் இருக்கும்.
தொடர்ந்து பல நாட்கள், ஒரு மணி நேரத்துக்கு மேல், இந்த சத்தத்தின் மத்தியில் பயணம் செய்தால், காது கேட்கும் திறன் கண்டிப்பாக பாதிக்கப்படும். நம் காதின் உள்ளே அமைந்துள்ள, சப்தத்தை கேட்க உதவும், 'இயர் செல்ஸ்' மிகவும் மெல்லியவை. தொடர்ந்து அதிக சப்தம் தாக்குவதால், இவை பாதிப்புக்கு உள்ளாகும். கூடவே ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படும்.
இதனால் பஸ்சில் இருந்து இறங்கும்போதே, கடுமையான தலைவலியுடன்தான் இறங்குவர். பயண களைப்பே காரணம் என தவறாக நினைத்துக் கொள்வர். நாளடைவில் காது கேட்கும் திறன், மெல்ல குறையத் துவங்கும். 'ஆடியோகிராம்' சோதனையில்தான், பாதிப்பின் தீவிரம் தெரியவரும். அதிக சப்தம், இரைச்சல் நிறைந்த சூழலில், கூடுதல் நேரம் செலவிடுவதை தவிர்ப்பது நல்லது.இவ்வாறு, டாக்டர் மணிகண்டன் கூறினார்.
பெரியவர்களின் 'இயர் செல்'லுக்கே இந்த கதி என்றால், பஸ்களில் எடுத்துச் செல்லப்படும் பச்சிளங்குழந்தைகளின் காதுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி கூற வேண்டியதில்லை. சமீபத்தில், கோவை - பொள்ளாச்சி சாலையில், 'ரேஸ்' பஸ் இயக்கி, குலைநடுங்க வைத்த, பஸ் ஓட்டுனர்கள் மீது எடுத்த நடவடிக்கையை, ஆடியோ-வீடியோ பஸ்கள் மீதும், அதிகாரிகள் எடுக்க வேண்டும். அத்துடன், பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ, வீடியோ வசதிகளையும், நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும்.'செவிடன் காதில் ஊதிய சங்காக', இந்த கோரிக்கை மாறி விடக்கூடாது!-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
21-மே-201714:41:25 IST Report Abuse
Sathish சத்தத்தை குறைக்க சொன்னால் அதை அவனுங்க செய்யமாட்டாங்க. பஞ்சை சுருட்டி இரண்டு காதுக்குள்ளும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியும் சத்தம் கேட்கும் என்றால் Ear plug வாங்கி காதில் சொருகிக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த ஸ்பீக்கர் பிரச்னையை எதிர்கொள்ள இவை தான் சிறந்த வழி.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
20-மே-201705:38:54 IST Report Abuse
Amirthalingam Sinniah போக்குவரத்து அமைச்சு அங்கீகரித்த ஒலிபெருக்கி பெட்டிகளையே பொருத்தி மக்களை காப்பாத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை