தெரசா மேக்கு சிக்கல் தான் இனி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தெரசா மேக்கு சிக்கல் தான் இனி!

Added : மே 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தெரசா மேக்கு சிக்கல் தான் இனி!

பிரிட்டனில், இசை நிகழ்ச்சிகள் நடக்கும், புகழ் பெற்ற அரங்குகள் அதிகம் அமைந்துள்ள, மான்செஸ்டர் நகரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம், இந்தியா உட்பட, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. முதலில் கிடைத்த தகவல்படி, இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், 22 பேர், குண்டு வெடித்து பலியாகினர்; மேலும், பலர் படுகாயமடைந்து உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
உலக நாடுகளில் நிகழ்ந்து வரும் பயங்கரவாத சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வரும், என்னை போன்ற பலருக்கு, இந்த சம்பவம், எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
பிரிட்டனின் வடக்கு பகுதியான, லீட்ஸ் நகரில், முஸ்லி ம்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளுடன், பிரிட்டன் இணக்கமான உறவு கொண்டிருப்பதை விரும்பாத முஸ்லிம் இளைஞர்களை, பயங்கரவாத போக்கிற்கு, பயங்கரவாத குழுக்கள் மாற்றி
வைத்துள்ளன. கடந்த, 2005 ஜூலையில், பிரிட்டனில், சுரங்க ரயிலில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை, முஸ்லிம் இளைஞர்கள் அரங்கேற்றி இருந்தனர்.
இவர்கள், பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அந்த சம்பவத்தில், நான்கு பயங்கரவாதிகள் உட்பட, 56 பேர் உயிரிழந்தனர். அந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து, அவ்வப்போது, சிறுசிறு பயங்கரவாத சம்பவங்கள், பிரிட்டனில் நிகழ்ந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன் கூட, லண்டனில், பார்லி., கட்டடம் அருகே, பாதசாரிகள் மீது, ஒரு பயங்கரவாதி காரை ஏற்றிச் சென்றதில், பாதசாரி ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர். பயங்கரவாதம் என்பது, பிரிட்டனுக்கு புதிதான ஒன்று அல்ல. அயர்லாந்து குடியரசு ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு, 1970 - 80ம் ஆண்டுகளில், பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டது. அப்போதைய பிரதமர் மார்க்கரெட் தாட்சரை கொல்லவும் முயற்சி நடந்தது.
ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாகத் தான், பிரிட்டனில் பயங்கரவாதம், தன் மோசமான முகத்தை அதிகளவில் காட்டி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின், நியூயார்க் நகரில், 2001 செப்டம்பரில், இரட்டை கோபுரத்தை, ஒசாமா பின்லேடன் தலைமையிலான, அல் குவைதா இயக்கத்தினர், விமானங்களை மோத செய்து தகர்த்த பின், உலகம் முழுவதும், பயங்கரவாத சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. லண்டன் மாநகர போலீசார், பயங்கரவாதிகளை கண்டறிவதிலும், அவர்களை ஒடுக்குவதிலும், தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத பின்னணி உள்ள ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே சமயம், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் முஸ்லிம் மக்களை, பயங்கரவாத கருத்துக்களில் ஆட்படாமல் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளையும், போலீசார் மேற்கொள்ள வேண்டும். லண்டன் மாநகரின் மேயராக உள்ள சாதிக் கான், 47, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவர்; தொழிலாளர் கட்சியில் புகழ் பெற்ற தலைவர். பிரிட்டன் மக்கள், மத சகிப்புத் தன்மை மிக்கவர்கள் என்பதை உறுதி செய்ய, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றே போதும். இந்த பின்னணியில், மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்துள்ள பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இளைஞர்களை மீட்டெடுக்க, பிரிட்டன் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், பெரிதாக பாராட்டத்தக்கவை. இருப்பினும், அவற்றால், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்க முடியவில்லை. பிரிட்டனில் குடியேற விரும்பும் மக்களை வடிகட்ட மேற்கொள்ளும் முயற்சிகள், குறைந்த பயனையே அளிக்க முடியும். வருங்காலத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பயங்கரவாதத்தை ஒடுக்க, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி
வரும். வரும், ஜூன், 8ல், பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்தே, தேர்தல் முடிவுகள் அமையும்.

ஆர்.கே.ராகவன்

சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்

rkraghu@hotmail.co.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை