விளம்பரங்கள் உணர்த்தும் உண்மைகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

விளம்பரங்கள் உணர்த்தும் உண்மைகள்!

Added : மே 29, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விளம்பரங்கள் உணர்த்தும் உண்மைகள்!

கடந்த சில மாதங்களாக, என் கண்ணில் சில வகையான விளம்பரங்களே அதிகம் தென்படுகின்றன. குறிப்பாக, நகைகளை அடகு வைத்து, மீட்க முடியாமல் மூழ்கி போனவுடன், அதை ஏலம் விடும் நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒன்று. சிறு, குறு தொழில் செய்பவர்கள் வாங்கும் தொழில் கடன்களுக்கு, தங்கள் வீடுகளையோ, நிலங்களையோ அடமானமாக வைக்கின்றனர். பின், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது, வட்டியோடு முதலை மீட்பதற்காக, வங்கிகள் அடமான சொத்துகளை ஏலத்துக்கு கொண்டு வரும் விளம்பரங்கள் இரண்டு.
மூன்று, ஆங்கில நாளிதழ்களில் புதன் கிழமை தோறும் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள். அவை, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாளிதழில், இரண்டரை பக்க அளவுக்கு, அடகு நகைகளை ஏலம் விடும் விளம்பரத்தை பார்த்த போது அதிர்ச்சியாக
இருந்தது. அதுவும், ஒரே நிதி நிறுவனத்திடமிருந்து, அசையா சொத்துகளை ஏலத்துக்கு கொண்டு வரும் விளம்பரங்களோ எக்கச்சக்கம். ஒவ்வொரு வங்கியும் பட்டியலை வெளியிட்டு கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் வெறும் விளம்பரங்கள் அல்ல. ஒவ்வொரு விளம்பரத்துக்கு பின்னும் ஏராளமான சோகக்கதை உண்டு; தோல்வி சித்திரங்கள் உண்டு; எதிர்பார்ப்புகள் சிதைந்து போன வரலாறு உண்டு. இவை சொல்லும் செய்திகளாக நமக்கு புரிவது இது தான்.
இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் அரிய பொருள், தங்கம். அது தான், அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமான சேமிப்பும் கூட. அத்தகைய பொருள், அடகு நிறுவனங்களுக்கு செல்வது, வலி மிக்க முடிவாக தான் இருக்க முடியும். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வேலைவாய்ப்பு இன்மை, நிரந்தர பணி இன்மை, குடும்ப வருவாய் போதாமை, நோய்க்கான மருத்துவ செலவுகள், பெருகி வரும் கல்விச்செலவுகள் ஆகியவற்றோடு, வேறு பல சமூக காரணங்களும் இருக்கலாம். ஆனால், இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்று தான். போதிய நிதி ஆதாரம், மக்கள் கையில் இல்லை. விளைவு, நகைகளை அடகு வைத்தல். ஆனால், பின்னொரு காலத்தில் வருவாய் பெருகும் போது, நகைகளை மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பின் பொய்த்து போய் விட்டது என்பது தான், இங்கே
கவனிக்கத்தக்கது. விளைவு, மீட்க முடியாத அவலச் சூழல். ஏலம், விளம்பரம்.
ஒரு காலத்தில், வட மாநிலத்தவர்களின் அடகுக் கடைகள், இத்தகைய நகை கடன்களை வழங்கி வந்தன. பின், உள்ளூர் பண்டுகள். பொதுத்துறை வங்கிகள் பின் தான் இதன் வாய்ப்பை புரிந்து, நகைக்கடன் வழங்க தொடங்கின. இவர்கள், நகைக்கு ஈடாக குறைந்த தொகையே வழங்கினர்.
அங்கேயும் நகைகள் மூழ்கிப்போன கதை உண்டு. ஆனாலும், சமாளித்து கொள்ள, கொஞ்சமேனும் வாய்ப்பு இருந்தது. ஆனால், நகைக் கடன்கள் வழங்கவென உருவான தனியார் நிதி நிறுவனங்கள் பெருகிய பின், பெரும்பாலான நகைகள் மூழ்கி போகவே செய்கின்றன.

கடன் தொகை அதிகம். கண்ணுக்கு தெரியாத கூட்டு வட்டி. எல்லாவற்றை விட, கடனை திருப்பி செலுத்த முடியுமா... முடியாதா என்ற திட்டமின்மையும் முக்கிய காரணம்.
கண்ணுக்கு தெரியாத மாயச்சுமையில் சிக்கி கொள்கின்றனர். விளைவு, அரிய குடும்ப சொத்து
களான நகைகள், ஏல விளம்பரத்தில் தொற்றிக்கொண்டு நிற்கின்றன.அசையா சொத்துகளுக்கான ஏலம், முற்றிலும் வேறு கதைகளை சொல்கின்றன. சிறு, குறு தொழில்களின் நசிவு தான் பின்னணி. தொழில் செய்வதற்கு இணக்கமான சூழலை கொண்டுள்ள மாநிலங்கள் என்ற மத்திய அரசின் பட்டியலை, இத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கடந்த, 2015ம் ஆண்டில், 12வது இடத்தில் இருந்த தமிழகம், 2016ம் ஆண்டில், 18வது இடத்துக்கு
தள்ளப்பட்டுள்ளது. 2017ல் சரிவு தொடரப் போவது நிச்சயம். அதன் ஒரு வெளிப்பாடாகவே, இத்தகைய அடமான சொத்துகளின் ஏலங்களை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆங்கில நாளிதழ்கள் வேலைவாய்ப்புகளுக்கு என, எட்டு பக்க தனி இணைப்பிதழ்களை வெளியிட்டன. பின் அவை, நான்கு பக்கங்களாயின. அதன் பிறகு, நாளிதழுக்குள்ளேயே இரண்டு பக்கங்களில் அவை தஞ்சம் புகுந்தன. இரண்டு ஒன்றாயிற்று. அரையாயிற்று. சமீப மாதங்களாக கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மட்டுமே அதிகம் கோலோச்சுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையோ, பி.பி.ஓ., கால் சென்டர் விளம்பரங்களோ, வங்கிகளோ, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளோ காணவே இல்லை. வட மாநில, பன்னாட்டு
நிறுவனங்களின் வேலை விளம்பரங்கள் மருந்துக்கும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை, வறட்சியை இதற்கு மேல் யாராலும் எடுத்து சொல்ல முடியாது. மொத்தத்தில், இத்தகைய விளம்பரங்கள், ஒரு செய்தியை தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி சொல்கின்றன.
அது, குடும்பங்களும் சுகமாயில்லை; தொழில்களும் வளமாக இல்லை; வாய்ப்புகளும் கொட்டி கிடக்கவில்லை.

ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
rvrv30@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
30-மே-201714:13:50 IST Report Abuse
ganapati sb நானும் கூட அயல்நாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த பணத்தை கொண்டு வாங்கிய தங்க நகைகளை அடகு வைத்து புனிதமான மருத்துவர்களை உருவாக்கும் கல்லூரியில் மருத்துவமனையில் மருந்தகத்தில் முதலீடு செய்யலாம் என ஒரு போலி மருத்துவனால் ஏமாற்றப்பட்டு நகைகளை இழந்தவன். ஏமாற்றியவன் போலீஸ் அரசியல்வாதி மற்றும் வக்கீல் துணை கொண்டு தலைமறைவு என நாடகம் ஆடி வேறு பலரை இதேபோல ஏமாற்றி வருகிறான். எதிர்காலத்திற்கு தேவையான நகையும் போய் தேவையற்ற பகையும் வந்ததே மிச்சம். காலம் சட்டம் தன் கடமையை செய்யும் போதே கயவர்கள் கட்டுக்குள் வருவர்.
Rate this:
Share this comment
சிங்காரம் - chennai,இந்தியா
30-மே-201719:23:40 IST Report Abuse
சிங்காரம்உங்களின் கதையைப்படிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. தாங்கள் பாடுபட்டு சேர்த்த செல்வம் உங்களைவிட்டு என்றும் அகலாது. உங்களிடம் மீண்டும் வந்தே தீரும். காலதாமதமாகலாம் ஆனால் மறுக்கப்படாது. திடமாயிருங்கள். வாழ்த்துக்கள். ஆண்டவன் யாரும் தங்கள் பக்கம் இருந்து தாங்கள் இழந்த செல்வத்தை தங்களுக்கே கிடைக்குமாறு செய்ய பிரார்த்திக்கிறேனய்யா....
Rate this:
Share this comment
சிங்காரம் - chennai,இந்தியா
30-மே-201719:27:18 IST Report Abuse
சிங்காரம்சரியான வேளையில் எழுதப்பட்ட சரியான கட்டுரை. நகை அடமானம் வைப்பதென்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே நடுத்தரக் குடும்பங்களில் எப்பொழுதும் பார்க்கப்படுகிறது. ஓரிரு தலைமுறைகளுக்கு முன் அவை பலமுறை சென்று திரும்பியும் வந்த கதைகள்தான் ஏராளம். ஆயினும், இன்று நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், தொழில் துறை முடங்கிப்போயிருக்கும் இந்த நிலையில், அவற்றை மீட்பதென்பது கடினமாகவே இருக்கிறது. எச்சரிக்கை மணியை சரியான நேரத்திற்கு அடித்த எழுத்தாளருக்கு பாராட்டுதல்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X