தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மரணம்

Added : ஜூன் 01, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மரணம்

சென்னை: தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், வரலாற்று நுால்களின் பதிப்பாளர் என்ற, பன்முகம் கொண்ட, வெள்ளையாம்பட்டு சுந்தரம், ௮௪, உடல்நலக்குறைவால், சென்னை, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டில், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வெள்ளையாம்பட்டில் பிறந்த சுந்தரம், சிறுவயதில் தந்தையை இழந்தார். வறுமையை போக்க தறி தொழில், ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்தார். தொடர் வாசிப்பால், தமிழில் புலமை பெற்றார். அவருக்கு, க.அப்பாத்துரையார், திருக்குறளார் முனுசாமி, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், ம. பொ.சி., வாணிதாசன், சுரதா உள்ளிட்டோர் நண்பர்களாயினர். 1946ல் இருந்து, பகுத்தறிவாளரானார். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராகவும், பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சேகர் பதிப்பகத்தை, 1963ல் துவக்கினார். இதுவரை, 1,100 நுால்களை பதிப்பித்துள்ளார். அவற்றில், 75 சதவீதம், கல்வெட்டு, செப்பேடு, கோவில், ஊர் பற்றிய வரலாற்று நுால்கள். அதற்காக, தொல்லியல் அறிஞர்களான ரா.நாகசாமி, ரா.கலைக்கோவன், நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் இடைவிடாது பழகினார்.நாணயவியல் ஆய்வாளரும், 'தினமலர்' ஆசிரியருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியை அடிக்கடி சந்தித்து,
வரலாறு தொடர்பாக உரையாடி மகிழ்ந்தார்.கோகிலா என்பவரை, 1956ல், திருமணம் செய்தார். அவர்களுக்கு, ஐந்து குழந்தைகள். ௨௦௧௬ல், கோகிலா மறைந்தார். தற்போது, புகழேந்தி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.பகுத்தறிவாளரான வெள்ளையாம்பட்டு சுந்தரம், 'தன் இறப்புக்கு பின் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது' என, தன் குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படியே, சடங்குகள் ஏதுமின்றி அவரது உடல் நேற்று, நல்லடக்கம்
செய்யப்பட்டது.

'பதிப்புலகின் இழப்பு' : ''இளமை காலத்தில், என் தந்தை கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவர். நேர்மை, எளிமை, கண்ணியத்துக்கு உரிய பதிப்பாளர். அவர் சிறிய வீட்டில், பெரிய சிந்தனைகளுடன் வாழ்ந்தார். தமிழை நேசித்ததால், வறுமையிலும், புன்னகைத்தபடியே இருந்தார். தமிழ் பதிப்பாளர்களின் தகவல் களஞ்சியமாக இருந்தார். வளரும் பதிப்பாளர்களை நேரில் சென்று வாழ்த்தும் பண்பாளர். 10 ஆண்டுகளுக்கு முன், 'பபாசி' இவருக்கு, சிறந்த
பதிப்பாளர் விருது வழங்கி கவுரவித்தது. அவரது இழப்பு, பதிப்புலகின் இழப்பு.

- காந்தி கண்ணதாசன்,கண்ணதாசன் பதிப்பகம்.

'பதிப்பு துறையின் எளிய வழிகாட்டி'

''எங்கள் பதிப்பகத்தின் நிறுவனர் மெய்யப்பனாருடன் நெருங்கி பழகியவர். சாதாரண நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், சைக்கிளில் சென்று கவுரவிப்பார். சக பதிப்பாளர்களின் தரமான நுால்களுக்கும், நுாலக பதிப்பு வேண்டும் என, போராடியவர். பள்ளி குழந்தைகளுக்கு, ஏராளமான வரலாற்று நுால்களை அன்பளிப்பாக வழங்கியவர். பதிப்பு துறையின் எளிய வழிகாட்டி. அவர் இழப்பு, பதிப்பாளர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

- குருமூர்த்தி, மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்.

'கடைசி வரை உழைத்தவர்'

''வெள்ளையாம்பட்டு சுந்தரம், பாவேந்தர் பாசறை என்ற, இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து, தமிழுக்காக உழைத்தார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். வரலாற்றுடன் தமிழை ஒப்பீட்டாய்வு செய்து, புதிய புதிய தகவல்களை வெளியிட வேண்டும் என்ற ஆசையில், கடைசி வரை உழைத்தார்.

- இளமாறன், செயலர், பாவேந்தர் பாசறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X