நன்றியுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நன்றியுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!

Updated : ஜூன் 06, 2017 | Added : ஜூன் 04, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நன்றியுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!

இறைச்சிக்காக, பசு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 'கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் துாக்கி மணையில வை...' என்பது போல், நாட்டில் எத்தனையோ தீர்க்கப்படாத, முக்கியத்துவம் தர வேண்டிய பிரச்னைகள் இருக்க, அனைத்தையும் விட்டு, மாட்டிறைச்சி புசிக்க, மல்லுக்கு நிற்கின்றனர், அரசியல்வாதிகள்!
ஒரு குழந்தையை, 10 மாதம் சுமந்து, பெற்று, ரத்தத்தை பாலாக கொடுப்பதனாலேயே ஆணிலிருந்து, தனித்துவம் மிகுந்தவளாக பெண் கருதப்படுகிறாள் என்றால், ஜாதி, மத வேறுபாடின்றி, தன் உதிரத்தை பாலாக தந்து, பசியாற்றுகிறதே பசு... அது எத்தனை புனிதமானதாக கருதப்பட வேண்டும்!
கொஞ்சம் புல், சிறிது புண்ணாக்கு, வீணாகும் கழிவு நீருக்காக, தன் ஆயுள் முழுக்க உழைத்து, ஓடாய் தேயும் அந்த ஒப்புயர்வற்ற விலங்கு தான், தாயை இழந்த பிஞ்சுகளுக்கும், தாய்ப்பால் மறுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கும், குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படும் தளிர்களுக்கும் தன் ரத்தத்தை பாலாக தந்து பசியாற்றுகிறது.
அது தான், நம் எல்லாருக்கும் காலை எழுந்தவுடன், டீ, காபியில் இருந்து, நாம் சப்புக் கொட்டிச் சாப்பிடும் பல உணவுப் பொருட்களும் காரணமாகிறது. அதற்கு மனிதன் செய்யும் நன்றிக் கடன் தான், அதைக் கொன்று புசிப்பது!
உழைப்பை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சிய பின், தன்னை பெற்றவர்களையே முதியோர் இல்லத்தில் தள்ளும், ஆறறிவு சிந்தனையாளர்களிடையே எப்படி நன்றியுணர்வை எதிர்பார்க்க முடியும்!
அவர்களுடைய மனோதர்மமே, 'தனி மனித சுதந்திரம்' எனும் தனித்துவமான தத்துவம் அல்லவா!
இந்த உலகமும், அதில் படைக்கப்படும் அனைத்துமே, தாங்கள் உண்டு, ருசித்து, புசிக்க மட்டுமே என்பது தானே, இவர்களின் ஏகோபித்த சிந்தனை!
இந்த ஆண்டின் துவக்கத்தில் தான், 'ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாட்டு மாடுகள் அழிகின்றன; விவசாயிகள் தங்கள் பிள்ளையைப் போல் வளர்த்து வந்த மாடுகள் கேரளாவிற்கு அடிமாட்டுக்கு விற்கப்படுகின்றன...' என்று கூறி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை விலக்கக் கோரி, உரத்த குரல் எழுப்பி, இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர், நம் தமிழகத்து இளைஞர்கள்.
அந்த நிகழ்வு, பசுமரத்தாணியாய் எல்லார் நினைவிலும் பதிந்திருக்கையில், அதே பிள்ளையைப் போன்று வளர்த்த மாட்டை, ருசி பார்க்க, சூரஜ் என்ற, ஐ.ஐ.டி., மாணவர், மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளார். அத்துடன், அசைவம் சாப்பிடாத ஜெயின் சமூக மாணவனுக்கு ருசி பார்க்க ஊட்டி விட்டுள்ளார். இதையும் தான் சில அமைப்புகள் ஆதரித்து கோஷம் எழுப்புகின்றன.
'உப்பிட்டவனை உள்ளளவும் நினை' என்பது தான் தமிழர்களின் பண்பாடு; அதுவே, ஆறறிவு படைத்த, பகுத்தறியும் திறன் படைத்த ஒவ்வொரு மனிதனின் பண்பாடும் கூட!
ஆனால், 'நம் பசியைத் தீர்த்து, ஏழை விவசாயியின் வாழ்க்கை ஆதாரமாக, உற்ற தோழனாக உடன் வரும் ஜீவனைக் கொல்லக் கூடாது; இறைச்சிக்காக அதை விற்பனை செய்யக் கூடாது' என, தடையுத்தரவு பிறப்பித்தால், 'மாட்டுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு... மீன், கிருஷ்ண பரமாத்மாவின் மத்ஸ்ய அவதாரம் இல்லையா; பன்றி, கிருஷ்ணனின் வராக அவதாரம் இல்லையா; சேவல் முருகனின் வாகனம் இல்லையா... அவற்றை மட்டும் ஏன் விட்டு விட்டனர்...' என்கின்றனர்.
ஐயா சிந்தனைவாதிகளே... மீனும், பன்றியும், சேவலும் உங்கள் வீட்டு பச்சிளம் குழந்தைகளின் பசியாற்றுமா அல்லது உங்கள் நிலங்களை உழுது, கதிர்களை பரம்படித்து, பாரம் சுமந்து, உங்கள் வாழ்விற்கு துணையாக வருமா... எதை, எதனுடன் ஒப்பிட வேண்டும் என்ற வரன்முறை இல்லையா?
காட்டு விலங்குகளான சிங்கம், புலி, யானை, மான், முயல் என, பல விலங்குகள் இந்துக் கடவுள்களின் அம்சமாக பார்க்கப்படுகின்றன. காட்டு விலங்குகளை வேட்டையாடக் கூடாது என, சட்டம் வரவில்லையா; அதைத்தான் நாம் ஒப்புக் கொள்ளவில்லையா?
கண்ணகி, கோபத்தில் மதுரை நகரை சபிக்கும் போது கூட, 'பசு, பத்தினி பெண்டிர், குழந்தை, முதியோரை விட்டு விட்டு பற்றுக நெருப்பே...' என்று தான் சபித்தாள். கோபத்திலும் நன்றி மறக்காத மறத் தமிழச்சி அவள்!
கவர்ந்து செல்லப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டு வருவதற்காகவே, பல உயிர்களை தியாகம் செய்து போரிட்டுள்ளனர், நம் சங்க கால மன்னர்கள்.ஆறலைக் கள்வர்களிடம் இருந்து தன் பசுக் கூட்டங்களை காக்க, 'ஜல்லிக்கட்டு' என்ற வீர விளையாட்டை தோற்றுவித்து, வீரத்திற்கு வித்திட்டான், தமிழன்.
தாய்ப் பசுவின் அபயக் குரலுக்கு நீதி வழங்க, தன் மகனையே பலி கொடுத்த மனுநீதி சோழன் வாழ்ந்த நாடு, தமிழகம். தன் வாழ்வின் இன்ப, துன்பங்களில் இணைந்து வந்த அந்த வாயில்லா ஜீவனுக்கு நன்றி செலுத்தத்தான், மாட்டுப் பொங்கல் என, விழா எடுத்து, அதை தெய்வமாக வழிப்பட்டான், நம் முப்பாட்டன்.
இத்தனை வரலாற்றையும், வசதியாக மறந்து, பிராமண துவேஷத்தை முழங்குவதையே தங்கள் பேரரறிவின் வெளிப்பாடாக கருதுவோர், 'பசுவை யாகத்தில் பலி கொடுத்தவர்கள் தானே...' என்கின்றனர்.
ஆம்... ஒரு காலத்தில் அவர்கள் பசு வதையை கடைப்பிடித்து வந்தவர்கள் தான்; காரணம், அன்றைய குறைந்தளவிலான மக்கள் தொகையும், அதிகளவிலான ஆநிரையும் இருந்த நிலையில், உணவுக்கு முக்கிய ஆதாரமே ஆநிரை தான் என்றளவில் இருந்தது.
ஆனால், இன்று திருந்திய, நன்றியுள்ள, நாகரிக மனிதர்களாக மாறிவிட்டனர். ஆனால், பசுவை தெய்வமாக, தோழனாக, பிள்ளையாக மதித்து, போற்றி, பாதுகாத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தவர்களோ, தங்கள் பாரம்பரியத்தை மறந்து, அதன் சதையை ருசிக்க, சப்புக் கொட்டுகின்றனர்.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை, வசதி படைத்தவர்கள் வாரத்தில் ஒருநாளும், மற்றவர்கள் விசேஷ நாட்களிலும் இறைச்சி புசிப்பது வழக்கம். இன்றோ, திரும்பும் திசையெல்லாம் மாமிசக் கடைகள்; மாலை வேளைகளில் சாலையோரங்களில் எல்லாம், கோழி, பன்றி, ஆடு, மாடு, காடை, கவுதாரி என, அத்தனை ஜீவராசிகளின் மாமிசத் துண்டுகளும், மசாலாவுடன் நாவை பதம், பார்க்கத் துடிக்கின்றன.
இனி வரும் காலங்களில், பாம்பு, பல்லி, நாய், தவளை, கரப்பான் பூச்சிகளை கூட, சட்டம் போட்டுத் தான் காப்பாற்ற முடியும் போலிருக்கு! ஏனெனில், உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் தன் வயிற்றுக்குள் அள்ளிப் போட்டாலும், மனிதனின் பெருந்தீனி ஆசை அடங்கப் போவதில்லை!
நன்றியுள்ளவர்களே... நீங்கள் பசுவை கடவுளாக பார்க்க வேண்டாம்; நம் பசியை தீர்க்கும் தாயாக பாருங்கள். பால் கொடுத்த அதன் மடியில் கத்தியை சொருகுவது, உங்கள் தாயின் சதையை புசிப்பதற்கு சமம்!
ப.லட்சுமி, எழுத்தாளர் ,
madhanaingmail.com

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bhuvaneshwari - Chennai,இந்தியா
17-ஜூன்-201712:50:32 IST Report Abuse
bhuvaneshwari திருமதி லட்சுமி அவர்களின் கட்டுரையை படித்தும் மாறாத மக்கள் வேறு யார் சொல்லி maaruvaargal. மிகவும் அற்புதமான சிந்திக்கக்கூடிய கருத்துக்களை இதற்கு மேல் யாரால் எழுத mudiyum.
Rate this:
Share this comment
Cancel
anvar - paramakudi,இந்தியா
05-ஜூன்-201716:41:04 IST Report Abuse
anvar விலங்குகளை விலங்குகளாக பாருங்கள். மனிதனை மனிதனாக பாருங்கள். மனிதனுக்கென்று உணவாக படைக்கப்பட்ட சில விலங்குகள் தான் இவை. பால் கொடுத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாத பசுவை இவர்கள் பராமரிக்க முடியுமா. செலவுக்கு அரசு பணம் கொடுக்கட்டும். அல்லது அரசு தொட்டில் குழந்தை மாதிரி தொட்டில் பசு ஒன்று கொண்டு வரட்டும். அப்புறம் தெரியம்
Rate this:
Share this comment
Cancel
Seena - Salem,இந்தியா
05-ஜூன்-201713:30:57 IST Report Abuse
Seena மிக நல்ல கருத்துள்ள கட்டுரை. மக்கள் திருமதி லெட்சமி கூறியுள்ள நடைமுறை செயல்படுத்தி நன்றி உள்ளவர்களாக ஆவோமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X