இன்னொரு கலாமை கண்டுபிடிப்போம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இன்னொரு கலாமை கண்டுபிடிப்போம்!

Added : ஜூன் 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இன்னொரு கலாமை கண்டுபிடிப்போம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவித்தாகி விட்டது. முதல் குடிமகனை, நாட்டின் குடிமக்கள் நேரடியாக தேர்வு செய்யாவிட்டாலும், நாம் ஓட்டளித்து, தேர்வு செய்து அனுப்பிய, எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் தான் தேர்வு செய்ய போகின்றனர். எனவே, நாட்டின், 14வது ஜனாதிபதியாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என, கருத்துக்கூறும் கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு உண்டு. நம் ஜனநாயக முறையின் விசித்திரத்தை பாருங்கள்... நாம் முதல்வரையும், பிரதமரையும் தேர்வு செய்வதற்காக மட்டுமே தேர்ந்தெடுத்த, எம்.எல்.ஏ.,வும், எம்.பி.,யும் தான், நம் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில், அவர்கள் விரும்பியவர்களுக்கு ஓட்டளிக்க போகின்றனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் பிரிவதற்கு, மக்களின் கருத்து கேட்டது போல, 'ஜனாதிபதி தேர்தலில், நான் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்?' என, மக்கள் பிரதிநிதிகள், நம்மிடம் கருத்து கேட்பது தான் சரியாக இருக்கும். ஆனால், நம் அரசியலமைப்பு சட்டப்படி, இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை.
ஆனால், எதிர்கால இந்தியா, இவற்றை எல்லாம் எதிர்பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவில், அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தலையிட்டது என, இப்போது சர்ச்சை கிளம்பி இருப்பது போல் எல்லாம், நம் நாட்டில் நடக்காது என்பது நமக்கு ஆறுதல். இந்த விஷயத்தில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, நாம், 'காலரை துாக்கி' விட்டுக் கொள்ளலாம்.

பெருமை சேர்த்தவர்கள் : நம் நாட்டின் நிர்வாகம், கொள்கை உருவாக்கம், திட்டமிடுதல், முடிவு எடுக்கும் அதிகாரம் அத்தனையும், பிரதமரிடம் குவிந்திருந்தாலும், ஜனாதிபதி என்பவரே, அதை சட்டபூர்வமாக அங்கீகரிப்பவர். இந்த உச்ச பதவிக்கு பெருமை சேர்த்தவர்கள் ஏராளமானோர். ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம் போன்ற மிகப்பெரிய ஆளுமைகள், அறிவுஜீவிகள், அப்பழுக்கற்ற தலைவர்கள் அலங்கரித்த பதவி இது.
இந்திரா பிரதமராக இருந்த போது, பிரதமர் அலுவலகத்திற்கு துணை அலுவலகம் போல், ஜனாதிபதி மாளிகையை மாற்றினார், வி.வி.கிரி. இவர், 'ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி' என, 'விக்கிபீடியா' அடைமொழி கொடுத்த பதிவு, இன்றும் உள்ளது. இந்திராவின், 'எமர்ஜன்சி'க்கு கேள்வி கேட்காமல், கையெழுத்திட்ட பக்ரூதின் அலி அகமதும், 'ரப்பர் ஸ்டாம்ப்' என்றே
கிண்டலடிக்கப்பட்டார்.ஜெயில் சிங் இருந்த போது, ஜனாதிபதி மாளிகை அரசியல் செய்தது அப்பட்டமாக தெரிந்தது. பிரதிபா பாட்டீல் பதவி வகித்த போது, உறவினர்களும், குடும்பமும் ஜனாதிபதி மாளிகையில் கோலோச்சி சர்ச்சைகள் உருவாகின. டில்லியே பார்த்திராத அண்ணனையும், குடும்பத்தையும், சில நாட்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்க வைத்து, அதற்கான செலவுத் தொகையை கூட, தன் மாத ஊதியத்தில் இருந்து தந்தவர் அப்துல் கலாம்.
இப்படி பதவிக்கு பெருமை சேர்த்தவர்கள், சிறுமை கூட்டியவர்கள் பட்டியல் நீளும்.

பொதுவாக, ஜனாதிபதி வேட்பாளர் என்றால், கட்சிகள் தங்களுக்குள் ஒரு, 'மறைமுக திட்டம்' வைத்திருக்கின்றன. சமகால அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர், ஓய்வு பெற்றவர், வயதானவர், கவர்னர், அமைச்சர் பதவி வகித்தவர்கள், பிரதமர் பதவி போட்டிக்கு வருபவர்கள் என, ஆட்களை தேடுவர். துணை ஜனாதிபதியாக இருந்தவர்களை, ஜனாதிபதி ஆக்குவர். ஆனால், பிரதமராக இருந்தவர்கள் ஜனாதிபதி ஆனது இல்லை. கட்சி களின் தலைமை தான், 'ஜனாதிபதியை' நிர்ணயிக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. அப்துல் கலாமை, வாஜ்பாய் தேர்வு செய்தார். பிரதிபா பாட்டீலை, சோனியா தேர்வு செய்தார். தேர்வு செய்யும் நோக்கத்தில் தான் வித்தியாசம்.

எதிர்பார்ப்பு என்ன? : அரசியல்வாதிகளின் திட்டம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால், ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்பதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக மக்கள், சமூக ஊடகங்களில் பிரதிபலிக்கும் மனநிலையை பார்க்கும் போது, எதிர்கால, வலிமையான இந்தியாவுக்கு ஒரு தலைச்சிறந்த ஜனாதிபதி, தலைமை ஏற்க வேண்டும் என, விரும்புவதை அறிய முடிகிறது.
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி; பெரும்பான்மை மதம், சிறுபான்மை மதம்; அந்த கட்சி, இந்த கட்சி; தென் மாநிலத்தவர், வட மாநிலத்தவர்; அந்த இனம், இந்த இனம் என, எல்லாம் பார்க்க வேண்டாம். ஆனால், படித்தவராக இருக்க வேண்டும்; பண்பாளராக, நம் நாட்டின் ஜனநாயகத்தையும், பண்பாட்டையும் கட்டி காப்பவராக இருக்க வேண்டும். எந்த துறையைச் சேர்ந்தவராக இருப்பினும், உலகளாவிய அளவில் பெயர் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஜனாதிபதி மாளிகையை, ஓய்வு மாளிகை ஆக்கக் கூடாது. 'எழுபது பிளஸ்' வயதினர் தான், ஜனாதிபதியாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா என்ன! 35 வயதானால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்; பிரான்சில், 40 வயதுக்காரர் ஜனாதிபதி ஆகவில்லையா! துணிச்சலாக, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பவர், அந்த பதவிக்கு வர வேண்டும்.

வரும் தலைமுறைக்கு, 'ரோல்மாடலாக' அவர் இருக்க வேண்டும், அப்துல் காலம் போல! 'பொக்ரான்' அணுகுண்டு வெடிக்கும் வரை, பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது வரை, அப்துல் கலாம் அவ்வளவாக யாராலும் அறியப்படாதவராக இருந்தவர் தானே! அவர் ஜனாதிபதி ஆனதும், அவரால் அந்த பதவி பெருமை பெற்றது.

வல்லரசு இந்தியா : இந்திய தேசமே, அந்த ஜனாதிபதியை கொண்டாடியது. வல்லரசு இந்தியா என்ற வளமான கோஷத்தை எழுப்பி, இளைஞர்களிடம் வலிமையான கனவை வளர்த்தார். அந்த கனவை விதைக்க, விஞ்ஞானி கலாமிற்கு, ஜனாதிபதி என்ற பொறுப்பு உதவியது.
'நாட்டின் தலைமை பதவிக்கு தகுதியானவர் இவர்' என, கலாமை, வாஜ்பாய் கண்டுபிடிக்காமல்
இருந்திருந்தால், நமக்கு ஒரு, 'மக்கள் ஜனாதிபதி' கிடைக்காமல் போயிருப்பார்.
கலாம் போன்று, எங்கோ ஒருவர் இருப்பார்; தேச நலனும், மக்கள் நலனும் உயிர் மூச்சு என்று! கட்சித் தலைவர்களே... அப்படி ஒரு தலைவனை தேடுங்கள். இன்னொரு கலாமை கண்டுபிடிப்போம்... வல்லரசு இந்தியாவிற்கு நிச்சயம் அவர் அவசியம்!

ஜி.வி.ரமேஷ்குமார்

பத்திரிகையாளர்

E mail: rameshgv1265@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
16-ஜூன்-201716:22:05 IST Report Abuse
மஸ்தான் கனி நாட்டின் தற்போது நடக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக ரப்பர் ஸ்டாம்ப் ஆக தான் இருப்பார் - வைத்து விடுவார்கள்., ஊழல் ஊழல் என்று சொல்லியே ஒருவர் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டால் எவ்வாறு பதவிக்கு வருபவர் சுயமாக செயல்படமுடியும்? என்பது பிளஸ் ஆக இருந்தாலும் சரி இளையவராக இருந்தாலும் சரி அவரின் அதிகாரத்தை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mathi - Raleigh,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201703:53:06 IST Report Abuse
mathi நாம் தேர்ந்தெடுத்த MLA க்களை வைத்து நம் தமிழ் நாட்டு முதல்வரை கூட நாம் தேர்ந்தெடுக்க முடியாது என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel
A.sivagurunathan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201718:52:19 IST Report Abuse
A.sivagurunathan இன்றைய சூழ்நிலையில் இக்கருத்து சிந்திக்க வேண்டிய விசயங்களில் ஒன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை