மழை நீர் - மறை நீர் எனும் பொக்கிஷங்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மழை நீர் - மறை நீர் எனும் பொக்கிஷங்கள்!

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 17, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மழை நீர், மறை நீர்

நம் மாநிலத்தின் முக்கிய, தலையாய பிரச்னை, தண்ணீர் தான். ஒவ்வொரு தனி மனிதனும், தண்ணீர் இன்றி தவிக்கிறான்.
பல நுாறு அடுக்கு மாடி கட்டடங்கள் சென்னையில் எழும்பி விட்டதால், நிலத்தடி நீர் காணாமல் போய் விட்டது; பருவ மழையும் கானல் நீராகிப் போனது.ஆங்காங்கே பெய்யும் மழை நீரை, தங்கம் போல் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. ஆனால், அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா... இல்லை!அரபு நாடுகளில், தண்ணீரை காண்பதே அரிது. அந்த பாலைவனப் பகுதியில் வாழ்பவர்களும், எப்படியெல்லாமோ தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பழ மரங்களை உற்பத்தி செய்கின்றனர். இஸ்ரேல் நாட்டினர் சொட்டு நீர் பாசனத்தின் மூலம், உலகையே திரும்பிப் பார்க்கச் செய்கின்றனர்.
அவ்வளவு ஏன்... நம் நாட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில், தவுலா கிராமத்தில் பிறந்து, ஆயுர்வேத மருத்துவப் பணியை துறந்து, நீர் மேலாண்மை படிப்பை கற்று, தன் சொந்த முயற்சியால், கிராம மக்களின் ஒத்துழைப்புடன், ஏழு நதிகளை அழிவில் இருந்து மீட்டு, இன்று ஜீவநதிகளாக்கியுள்ளார், ராஜேந்தர சிங் என்ற தண்ணீர் மனிதன். மழை நீர் சேகரிப்புக்காக கிராமங்களில், 4,500 தடுப்பணைகளை கட்டி, 1,200 கிராமங்களை செழிப்பான பகுதிகளாக மாற்றியுள்ளார். இதன் காரணமாக, இந்திய அரசு, 2001ம் ஆண்டின், 'ராமோன் மகசேசே' விருது கொடுத்து கவுரவித்துள்ளது. அத்துடன், 2015ல் தண்ணீருக்கான நோபல் பரிசாகக் கருதப்படும், 'ஸ்டாகோம்' பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவர், நம் தமிழகத்தில், திருநெல்வேலியில் ஆரம்பித்து, கன்னியாகுமரி, மதுரை, முக்கொம்பு, வேலுார் போன்ற இடங்களில் உள்ள, ஆறு, குளங்களை பார்வையிட்டு, நதி நீர் ஆர்வலர்களுக்கு, 'அட்வைஸ்' வழங்கி வருகிறார்.ராஜஸ்தானில், 20 சதவீத மழை பொழிவு தான் கிடைக்கிறது. ஆனால், உங்கள் தமிழகத்தில், 80 சதவீத மழை பொழிவு உள்ளது. எங்களது பாலைவனத்தையே சோலைவனமாக்க, 33 ஆண்டுகளாக போராடினோம். தமிழகத்தை சோலைவனமாக மாற்ற வெறும், 10 ஆண்டுகள் போதும்.

தமிழகத்தில் நான் பார்த்த பெரிய பெரிய ஆறுகளைப் போல, வேறு எந்த மாநிலத்திலும் பார்த்ததில்லை. நீங்கள் ஆறுகளை தாயைப் போல பாதுகாக்க வேண்டும். எங்கு பார்த்தாலும், 'போர்வெல்' போடும் பழக்கத்தை தமிழகத்தில் காண்கிறேன். இப்படி எல்லாரும், 'போர்வெல்' போட்டு நீரை உறிஞ்சினால், பூமி என்னாவது...
'நீங்கள், பெரிய மக்கள் இயக்கமாக மாறி, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். குப்பை கழிவுகளை போட்டு, நீர் நிலைகளை அசுத்தமாக்குவதை முதலில் தடை செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட அனுமதிக்கவே கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை துார்வாரி, சுத்தம் செய்து மழை நீரை சேமியுங்கள். 'நிறைய, 'செக்டேம்ஸ்' கட்டி தண்ணீரை பாதுகாத்தீர்களானால், பக்கத்து மாநிலத்தவரிடம் தண்ணீர் கேட்டு, போராட வேண்டிய அவசியமே இல்லை. ஆறுகள் புத்துயிர் பெற்று ஜீவ நதிகளாகி விட்டால், தண்ணீர் பிரச்னையால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள் சமுதாயம், முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும்...' என்கிறார்.


பிரச்னை இல்லை:

மழை நீரை சேமிப்பதால் இன்று ஒரு கிராமமே தண்ணீர் பிரச்னை இன்றி நிம்மதியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே, மிக்கேல்புரம் என்ற கிராமத்தில், மழை நீரை சேமித்து வருவதால், கடந்த, 11 ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னையே இல்லை என்கின்றனர் அவ்வூர் மக்கள். 5 லட்சம் ரூபாய் செலவில், ஒரு ஊரணி அமைத்து, அதில் மழை நீரை சேமித்து வைக்கின்றனர். சற்று சேறுடன் காணப்படும் மழை நீரை, மண் பானைகளில் பிடித்து, தேத்தாங்கொட்டையை போட்டு வைக்கின்றனர். பின், தண்ணீரை காய்ச்சி குடிக்கின்றனர். 'மினரல் வாட்டரை விட சுவையாக உள்ளது மழை நீர். எங்கள் பக்கத்து கிராமங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்க, எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்னையே இல்லை' என்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ரிசர்வ் போலீஸ் குவார்ட்டஸ்சில், 750 வீடுகள் உள்ளன.இங்குள்ள, 12 டஜன் கிணறுகளும் வற்றி வறண்டு விட்டன. இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, இங்குள்ள, எஸ்.பி., மணிவண்ணனும், ஏ.டி.எஸ்.பி., இன்பமணியும், விவசாய பரம்பரையில் வந்தவர்கள். இவர்களின் ஆலோசனைப்படி, மக்கள், 75 ஆயிரம் சதுரடியில் குளம் அமைத்தனர்.சில அடிகள் தோண்டியவுடனே தண்ணீர் பொங்கி வந்ததால், ஒரே உற்சாகம்! தினமும் நீர் மட்டம் ஏறியபடி இருக்கிறது. குளத்தில் மோட்டார் வைத்து, குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு அனுப்புகின்றனர்!இந்த குளம் அமைப்பதற்கு முன், 4 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும், டன் கணக்கில் கருவேல மரங்களையும் அகற்றி உள்ளனர். இனி இந்தப் பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றவும், சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு அழகான பசுமையான பகுதியாக மாற்றவும் தயாராகி வருகின்றனர்.
பொதுவாக, ராமநாதபுரம் மாவட்டம் தான், வறட்சி மாவட்டம் என்று சொல்லப்படும். ஆனால், அங்குள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இல்லாததால், நிலத்தடி நீருக்கு பஞ்சம் இல்லை; தோண்டிய உடனே தண்ணீர் ஊற்று எடுக்கிறது.இது போல், மற்ற மாவட்டங்களிலும், கிடைக்கும் தண்ணீரை நாம் வீணாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று யோசியுங்கள். சென்னை மாநகராட்சி, மழை நீர் சேமிப்பிற்கென மாதிரிகள் செய்து வைத்துள்ளது. விபரங்கள் அடங்கிய புத்தகங்களும் வெளியிட்டுள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம்... மறை நீர் என்று ஒன்று உண்டு. 'விர்ச்சுவல் வாட்டர்' என, ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் நீர் தான் மறை நீர்.அரிசியை எடுத்துக் கொள்வோம். அந்த அரிசியை உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் தேவைப்படுகிறது என்பதை கணக்கிடுவது, ஒரு வகை பொருளாதாரம். இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த, பொருளாதார வல்லுனர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக, 'ஸ்டாக் ஹோம் வாட்டர் 2008' விருது பெற்றவர்.


உற்பத்தி:

ஒரு பொருள் உற்பத்தி செய்வதற்கு செலவாகும் நீரின் அளவை, அவற்றுக்குள் மறைந்திருக்கும் நீருக்கான செலவை, நம் நாட்டில் கணக்கிடுவதில்லை. ஆனால், வளர்ந்த நாடுகள், இதை எல்லாவற்றையும் கணக்கிட்டு, அதிக தண்ணீர் தேவை உள்ள பொருட்களை, தங்களுடைய நாடுகளில் உற்பத்தி செய்வதில்லை. இந்தியா போன்ற ஏமாந்த நாடுகளிடம் இருந்து, புத்திசாலித்தனமாக இறக்குமதி செய்து கொள்கின்றன.
உதாரணத்துக்கு முட்டை உற்பத்தியில், இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரம் முக்கிய இடம் வகிக்கிறது. 70 லட்சம் முட்டைகள், தினமும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம், 4.8 லட்சம் ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது. 60 கிராம் முட்டையை உற்பத்தி செய்ய, 190 லிட்டர் மறை நீர் தேவை; 1 கிராம் புரோட்டீனுக்கு, 29 லிட்டர் மறை நீர் தேவை. அப்போ இந்த தண்ணீருக்கான பணத்தை கணக்கிடுங்கள். இப்போது புரிகிறதா, புத்திசாலி நாடுகள் எப்படி செயல்படுகின்றன என்று! சென்னையில், பன்னாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களை தயாரித்து, சொந்த நாடு உட்பட பல நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்கின்றன.
இது ஏன் தெரியுமா... குறைந்த கூலி, நிறைய தண்ணீர் ஆகிய வசதிகள் காரணம். அதாவது, 1.1 டன் எடை கொண்ட ஒரு காரை உற்பத்தி செய்ய, 4 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அது இங்கே கிடைக்கிறது. அவர்களோ, தம் நாட்டு தண்ணீரை சேமித்து கொள்கின்றனர்!
வளைகுடா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் தண்ணீர் இல்லை. அதனால், வளைகுடா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 'மறை நீர்' கொள்கையை கடைபிடிக்கின்றன. திருப்பூரில், பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க, 10 லிட்டர் மறை நீர் தேவைப்படுகிறது. 250 கிராம் பருத்தி ஆடை தயாரிக்க, 500 லிட்டர் மறை நீர் தேவை. அது மட்டுமல்ல, இந்த சாயப்பட்டறை கழிவுகளால், அந்த ஊரின் நிலத்தடி நீர் கெட்டு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எத்தனை விதமான நோய்கள் அவர்களை தாக்குகின்றன... இப்போ தெரிகிறதா, நாம் எவ்வளவு இளிச்சவாயர்களாக உள்ளோம் என்பது! வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற விஷயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; மாற்று வேலைகளை யோசிக்கலாமே!
கச்சா எண்ணெய், தங்கம் வாங்க தேவையான டாலருக்காக, பின்னலாடைகளை நாம் ஏற்றுமதி செய்துவிட்டு, அவர்களிடம் ஏமாந்து நிற்கிறோம். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, சைக்கிள் பயன்பாட்டை சீன நாடு அதிகரித்துள்ளது. நாமும் இப்படி மாற வேண்டும். இந்திய பெண்கள் தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க வேண்டும். இப்போதெல்லாம், நகை போடாமல் இருப்பது தானே அழகு!எந்த பொருள் தயாரிக்க, தண்ணீர் தேவை அதிகம் உள்ளதோ அதற்கு நிறைய கெடுபிடிகள் விதிக்கின்றன சீனா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள். சீனாவில், 1 கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கு, 600 லிட்டர் தண்ணீர் தேவை.
எனவே, பன்றி உற்பத்திக்கு நிறைய கெடுபிடி உண்டு அங்கே. நம் அரசு திறமையான பொருளாதார மேதைகள் உதவியுடன், என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும், எவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்பது குறித்து, ஒரு வரையறை கொண்டு வர வேண்டும்.எனவே, நாமும் மறை நீர், மழை நீர் என்ற பொக்கிஷங்களின் அவசியத்தை உணர்ந்து செயல்படுவோம்.
*தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்கிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர், jalpurushtbs@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
ஜெனிபர்
பத்திரிகையாளர்
jjaneepremkumar@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Ramesh - Vietnam,வியட்னாம்
29-ஜூன்-201711:41:19 IST Report Abuse
Mani Ramesh மாண்புடைய சகோதரி ஜெனிபர் பொக்கிஷ பதிவிற்கு வெகுமிகு வணக்கங்கள். இந்நாளில் மிகத்தேவையான செய்தி. ஆயினும் ஏனோ விளங்கவில்லை, ஒருவரும் இச்செய்திக்கு கருத்து தெரிவிக்கவில்லை. மக்களின் கவனம் எங்கே நோக்கியுள்ளது? அதற்க்காக யாரும் வாசிக்கவில்லை என அர்த்தமில்லை. இருப்பினும் தினமலருக்கு வேண்டுகோள். நீர் பற்றிய செய்திகளையும் தேவைகளையும் நமது கடமைகளையும் தினந்தோறும் ஒரு செய்தியாவது வெளியுங்கள். நல்வன செய்ய 10 % மாவது ஒதுக்குவது மாண்பு .
Rate this:
Share this comment
Cancel
ramtest - Bangalore,இந்தியா
19-ஜூன்-201720:04:17 IST Report Abuse
ramtest மன்னிக்கவும் மக்கள்தொகையை குறைக்காதவரை அவர்களின் வேலை வாய்ப்பிற்காக , வீடு கட்டுவதற்காக , கடைகள் கட்டுவதற்காக இயற்கையை அழிப்பதை தடுக்க முடியாது ... 1947இல் 33 கோடி இருந்த நாம் இப்போது 130 கோடி ... மக்கள் எல்லோரும் ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற முறைக்கு மாறினாலொழிய இந்த மக்கள் தொகை பெருக்கம் எனும் silent killerஐ ஜெயிக்க முடியாது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை