வேலைவாய்ப்பு கிடைக்குமா?| Dinamalar

வேலைவாய்ப்பு கிடைக்குமா?

Added : ஜூன் 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு கிடைக்குமா?

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, மூன்றாண்டுகளை கடந்திருக்கிறது. பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றிகள், அவருக்கு மக்களின் அமோக ஆதரவு இருப்பதைக் காட்டுகின்றன. இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆட்சி பறிபோனதாலும், அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்ததாலும், நாடு சந்திக்கும் முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசி, தீர்வு
சொல்லும் நிலையில் இல்லை. குறிப்பாக, மோடி ஆட்சியில், புதிதாக வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்கு தரப்பட்டது? ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறிய பிரதமர் பேச்சு, நடைமுறை சாத்தியப்பட்டதா என்ற கேள்வியை தாமதமாக எழுப்புகின்றனர். ஆனால், சில சமூக நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது என்பது, அதிகாரப்பூர்வ தகவலாக வருகின்றன. ஆட்சி தொடங்கிய இரு ஆண்டுகளில், 'சொந்த வீடு திட்டம்' என்ற திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள நகரங்களில், 17.7 லட்சம் வீடுகள் கட்ட, பிரதமர் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட நகரங்களில், நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை, 23 ஆயிரம் கோடி ரூபாய். அதற்கு முன், 2016 - 17ல், 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்த, 10 ஆண்டுகளில், 1,061 நகரங்களுக்கு இதே மாதிரி திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய தொகை, 32.7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் குளறுபடிகள் நீக்கத்துடன், அதிக நிதி ஒதுக்கீடு, சமையல் எரிவாயு மானியத்தை ஒழுங்குபடுத்தி அதில் அர்த்தமற்ற மானியத்தை குறைத்தது ஆகியவை சிறப்பானவை. நிர்வாகத்தில் சிறப்பான மேலாண்மை, ஊழல் என்பதை ஒழிக்க பல்வேறு அதிரடிகள், இதைவிட நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு அமலாக்கம் ஆகியவற்றை மேற்கொண்டது மத்திய அரசு; எனினும், வேலைவாய்ப்பு தருவதில் பின்தங்கியிருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா, வேலைவாய்ப்பு தரப்பட்ட விஷயம் குறித்த புள்ளி விபரத்தை அரசிடம் கேட்கிறார். ஆண்டுக்கு, ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு தயாராகின்றனர் என்பது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தகவலாகும். இதைத் தவிர, ஆண்டுதோறும், 50 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் மாற்று வேலையை நாடுகின்றனர். ஆனால், கடந்த ஆண்டில் கிடைத்த புள்ளி விபரப்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும், 'மான்யுபாக்சரிங்' தொடர்பான இயந்திரத் தொழில் துறைகளில், 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே சாத்தியப்படுகின்றன. இயந்திரம் கையாளும் பெரும் தொழில்களில், திறமை மிக்க தொழிலாளர்களையே பணிக்கு அமர்த்துவதுடன், அதிலும் பலர் கான்ட்ராக்ட் அடிப்படையில் பணிக்கு சேர வேண்டிய நிலை உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள, ஐ.டி., கம்பெனிகள், இப்போது பல பிரச்னைகளை சந்திக்கின்றன. இதற்கு முன், 2001 மற்றும், 2008களில் சந்தித்த பிரச்னைகளை விட இவை மோசமானவை.
இத்துறையில் மிகப்பெரும் நிறுவனமான, 'இன்போசிஸ்' தன் நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்களை, 'தாங்களாகவே சம்பளத்தை குறைக்கும் திட்டத்திற்கு வரவேண்டும்' என்ற அறிவிப்பு, மிகவும் அரிதானது. இத்துறையில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இம்மாதிரி நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கானோர், இதை சமாளிக்க தொழிலாளர் நல யூனியன் அமைக்கலாமா என, கருதுகின்றனர். ஆனால், இன்றுள்ள பணிச்சூழல்களில் அதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் கத்தார், சவுதி அரேபியாவில் பணியாற்றும் பல்வேறு திறன் மிக்கவர்கள், இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க, 'எச்.1பி' விசா நடைமுறை மாற்றம் இடைஞ்சல் தரும் அறிவிப்பாகும். கப்பல் மற்றும் போக்குவரத்து துறை வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டம், விவசாய பொருட்கள் மதிப்புக் கூட்டும் உற்பத்திக்கான திட்டங்கள் ஆகியவற்றை, அரசு முன்னெடுத்து, அதற்காக நிதிகளை ஒதுக்கி வருவது புதிய வேலை வாய்ப்புகளை தரலாம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அவ்வப்போது கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த சரியான புள்ளி விபரத் தகவல்கள், இன்னமும் வெளிவரவில்லை. பொருளாதார, சமூக நலன் குறித்த விஷயங்களில் அக்கறை காட்டும் அரசு, வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிக முன்னுரிமை தரவேண்டியது அவசியமாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை