மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் வேட்டை: வைகையில் நீர்பிடிப்பு பகுதிகளில் வளங்கம் அழிப்பு- காப்பாற்றப்படுமா மேகமலை காடுகள்.| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் வேட்டை: வைகையில் நீர்பிடிப்பு பகுதிகளில் வளங்கம் அழிப்பு- காப்பாற்றப்படுமா மேகமலை காடுகள்.

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement

'வளர்ச்சி' என்ற பெயரில் அரசும், தனியாரும் போட்டி போடுவதில் காணாமல் போகும் இயற்கை வளத்தில் முதலிடத்தில் இருப்பவை காடுகள். காடுகளின் நிலப்பரப்பு குறைவது பற்றி கவலை கொள்ளாததின் எதிர்விளைவுதான் மழை குறைவு, பருவநிலை மாற்றம் என நாம் உணர்கிறோம். எங்கோ ஒரு காடு அழிவதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்ததால், இன்று பல காடுகள் நம் கண்முன்னே மொட்டை மலையாக மாறியுள்ளன.
வைகையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடி வரும் ஊற்றுகள் இன்று வறண்டு, கட்டாந்தரையாக காட்சி தருவதை பார்த்து இயற்கை அன்னையே கண்ணீர் வடிக்கிறாள். ஜூனில் தென் மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியதும் வைகையின் நீர்பிடிப்பு காடுகளில் சாரலும், தென்றலுமாய் வானுயர்ந்த மரங்களும், யானை, புலி, சிறுத்தை என வன உயிரினங்கள் ஆனந்த கூத்தாடும்
காட்சிகளை சில ஆண்டுகளாக காணமுடியவில்லை. இதற்கு என்ன காரணம்?வைகையை வாழவைக்கும் வருஷநாடு, மேகமலைக் காடுகளை பற்றி இனியும் கவலை கொள்ளாமல் இருந்தால் தண்ணீருக்கு காலம் முழுவதும் தவம் இருக்க வேண்டியது தான். இந்த வனப் பகுதி தேனி மாவட்டத்திற்கு சொந்தமாக இருந்தாலும் வைகை பாய்ந்தோடும் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்களுக்கும் அதிக கரிசனம் உள்ளது.


வளம் செழித்த வனம்


தேனி மாவட்டத்தில் 795 சதுர கி.மீ., பரப்பில் 27 வனப்பகுதிகள் உள்ளன. இதில் 19 பகுதிகள் 255 சதுர கி.மீ., பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. மேகமலை வனஉயிரின காப்பகத்தின் கீழ் சின்னமனுார், மேகமலை, வருஷநாடு, கண்டமனுார், கம்பம் கிழக்கு, கூடலுார் வனச்சரகங்களால் 64 ஆயிரம் எக்ேடர் நிலப்பரப்பு பாதுகாக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி கேரள வனத்துறையிடம் உள்ளது.
அந்த பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இயற்கையாகவே அதிகம். அங்குள்ள தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படுகிறது. வருஷநாடு, மேகமலைப் பகுதிகளில் உள்ள தண்ணீர் மூலவைகையில் சேரும் கூட்டாறில் இருந்து வைகை நதியாக ஓடி வருகிறது. இதில் வருஷநாடு - மேகமலை பகுதிகளில் உள்ள வனம் செழிப்பானது. இங்கு இல்லாத வன வளங்கள் இல்லை. ஆனால் இன்று இந்த வனப்பகுதியில் அடர்வனக் காடுகளின் பரப்பு, வனஅழிப்பால் பெருமளவு குறைந்து விட்டது.


பணப்பயிர்களுக்காக அழிப்புமேகமலை, வருஷநாடு வனப்பகுதிகளில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு காபி, தேயிலை உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி நடக்கிறது. பிரிட்டிஷார் காலத்தில் துவங்கிய இந்த வனஅழிப்பு, இன்று வரை தொடர்கிறது. தனியார் எஸ்டேட்களை தாண்டி உள்ள வனப்பகுதிக்கு வனத்துறையினர்
செல்வதற்கு அவர்களின் அனுமதியை பெற வேண்டியது உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தனியார் எஸ்டேட்களில் நடக்கும் மர அழிப்புகளை வனத்துறை
ஊழியர்களாலும் கண்காணிக்க முடியவில்லை.


மரங்களை வெட்ட முடியுமா


12,500 எக்ேடர் பரப்பு கொண்ட வருஷநாடு, மேகமலைப் பகுதியில் 1,600 ஏக்கர் பட்டா நிலங்கள் உள்ளன. கலெக்டர் தலைமையிலான மாவட்ட வன அலுவலர், வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மூலம் மண் அரிப்பு தடுப்பு, மீண்டும் மரம் வளர்ப்பு
உத்தரவாதம் உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ரக மரங்களை வெட்ட அனுமதிக்கிறார்கள். எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது, எப்படி வெட்டப்படுகிறது என்பதை அரசுத்துறை அதிகாரிகளால் முழுமையாக கண்காணிக்க முடியாது. இந்த ஒரு அனுமதியை பெற்றுக் கொண்டு, வனத்தை சூறையாடுகின்றனர்.


நீர்வழிப்பாதைகள் யாருக்கு சொந்தம்


பட்டாநிலங்களில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் அனைத்தும் வருவாய் துறைக்கு சொந்தமானது. இந்த புறம்போக்கு பகுதியில் தேக்கு, தோதகத்தி, சந்தனம், மஞ்சக்கடம்பு, கருங்காலி என மதிப்புமிக்க மரங்கள் மிச்சமிருப்பது அபூர்வம். இவற்றை மர்மநபர்கள் வெட்டியதாகவும், மரங்கள் காணாமல் போவதாகவும் கணக்குகள் காட்டுவது வழக்கம்.
ஓடைகளின் நீர்வழிப்பாதைகள் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி வருவாய் துறையினர் கவலைப் படுவது இல்லை. ஏதாவது பிரச்னைகள் வரும் போது மட்டும் இந்த பகுதிகளை எட்டிப்பார்க்கின்றனர்.


சர்வே செய்யப்படாத நிலங்கள்


மேகமலை, வருஷநாடு வனப்குதிகளில் ஒரே எண் கொண்ட சர்வே உள்ளது. நவீன வசதிகள் இல்லாத காலத்தில் நடத்தப்பட்ட இந்த துல்லிய மதிப்பிடப்படாத உத்தேச 'ஜியாலஜிக்கல்' சர்வேயில் புறம்போக்கு நிலம் என்பது கணக்கிடப்படவில்லை. அந்த நிலங்களும் தனியார்கள் கைவசம் உள்ளது. இந்த மலைப்பகுதிகள் முழுவதையும், நவீன தொழில் நுட்பத்தால் சேட்டிலைட் சர்வே நடத்தி, நிலங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை துவங்குவதற்கு எந்த
அதிகாரிகளும் முன்வரவில்லை. வனத்துறையும் ஆர்வம் காட்டவில்லை.


பாதைக்காக வனம் அழிப்பு


2013ம் ஆண்டு மேகலை வனப்பகுதியில் 200 ஏக்கர் பட்டா நிலத்தில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் தற்போது வெள்ளிமலையில் 85 ஏக்கர் எஸ்டேட் பகுதியிலிருந்து, ைஹவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட கீழ்மணலாறு வரை பாதை அமைப்பதற்காக நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. இதனை கண்காணிக்கவில்லை என 4 வன ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கொண்டு வருவதற்காக ஏற்கனவே இருந்த குதிரை வழித்தடத்தை வாகனங்கள் வருவதற்காக வெட்டியதாக எஸ்டேட் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.


சுற்றுலாவிற்காக வனம் அழிப்பு


மேகமலையில் ைஹவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவலங்காறு, மகாராஜமெட்டு பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ரோடு வசதியை எதிர்பார்த்திருந்தனர். இங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தற்போது தென்பழநியில் இருந்து ைஹவேவிஸ் வரை 30 கி.மீ., இருவழிப்பாதையாக மாற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை
மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக அடர்வனம் இல்லாத இந்த குறுங்காட்டுப்பகுதியில் மரங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. வனத்துறை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் இங்கு மரங்கள் அழிக்கப்பட்டதாக கணக்கு காட்டி
வருகிறது. ஒரு மரம் வளர்ந்து அந்த பகுதி வனமாக மாற 100 ஆண்டுகள் ஆகும். இங்கு அழிக்கப்படும் சிறு மரங்களுக்கு எண்ணிக்கையும் இல்லை. ஏன் அழிக்கப்படுகிறது என்ற கேள்வியும் இல்லை. 89 கோடி ரூபாயில் ஜோராக ரோடு பணி நடக்கிறது. இதற்காக பாறைகளும் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. இந்த சத்தத்தாலும், மரங்கள் அழிப்பாலும் வன தேவதை இங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கும்.


விழித்தெழுமா வனத்துறை


மரங்கள் வெட்டி வியாபாரம் பார்க்கும் கும்பலை நமது வனத்துறை அடக்கி உள்ளது. வேட்டைக் கும்பல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பொறுத்து காடு காப்பாற்றப்படுகிறது. மாவட்டத்தின் ஒவ்வொரு வனச்சரகத்திலும் சராசரியாக 37 பேர் பணிபுரிய வேண்டிய இடங்களில் 10 பேர் பணிபுரியும்
அளவிற்கு வனத்துறையில் காலிப்பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. வனவர், வனபாதுகாவலர், வாச்சர் என ஒவ்வொருவருக்கும் 4 பீட், 3 பீட் என அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பணிச் சுமை அளிக்கப்படுகிறது. இதனால் இவர்களாலும் வனத்தை காப்பாற்ற முடியவில்லை. குற்றங்களை தடுக்க முடியவில்லை.தண்ணீருக்கு தவிக்கும் நாட்டு மக்களை காப்பாற்ற காட்டில் உள்ள காலிப்பணியிடத்தையாவது இந்த அரசு நிரப்ப இனியும் சாக்கு போக்கு சொல்லக்கூடாது.

டபி.ள்யு. எட்வின், படங்கள் விக்ணேஷ்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:53:58 IST Report Abuse
Srinivasan Kannaiya அரக்கர்கள்.. அரக்கர்கள் என்று அந்த காலத்தில் இருந்தார்கள் என்பார்கள்... அவர்கள் வேறு யாரும் இல்லை இவர்கள் தாம் என்று இப்பொழுது அறிந்து கொள்ளுகிறோம்...
Rate this:
Share this comment
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
20-ஜூன்-201703:41:51 IST Report Abuse
R.Kumaresan மலைய கொடஞ்சு வெட்டி பாரெஸ்ட் ஏரியா இருக்கிற இடத்துலதான் தேனி பஸ்ஸ்டாண்டே கட்டியிருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை