வெண்ணந்தூர்: ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, வெண்ணந்தூரில், விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 600 தறிப்பட்டறைகளும், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகளும் இயங்குகின்றன. மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யில் ஜவுளி ரகங்களுக்கு, 5 சதவீதம் வரி விதித்துள்ளது. இதை கண்டித்து, பல்வேறு விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள், வெண்ணந்தூர் சாவடி மைதானத்தில், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வெண்ணந்தூர், விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பழனிமுத்து தலைமை வகித்தார். அது மட்டுமின்றி, ஏழு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.