இயற்கை உலகம்: பறவை முட்டைகளின் பலவித அவதாரங்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: பறவை முட்டைகளின் பலவித அவதாரங்கள்

Added : ஜூன் 29, 2017
Advertisement
இயற்கை உலகம்: பறவை முட்டைகளின் பலவித அவதாரங்கள்

பறவைகளின் முட்டைகள் பலவித வடிவங்களில் இருப்பது ஏன்? பறவையியல் வல்லுனர்கள் இதற்கு பல காரணங்களை சொல்கின்றனர். உயரமான கூடுகளிலிருந்து உருண்டு விழாமல் இருக்க நீள் வட்ட முட்டைகளும், கீழே விழுந்தால் உடையாமல் காக்க, கோள வடிவ முட்டைகளும் உருவாகியிருக்கலாம் என்பது பலரது கருத்து.
ஆனால், அண்மையில், 14,000 பறவையினங்களின் 50 ஆயிரம் முட்டைகளின் வடிவங்களை ஆராய்ந்த ஹார்வர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் பறத்தல் திறனைப் பொறுத்து அவை இடும் முட்டைகளின் வடிவங்கள் மாறுபடக்கூடும் என்று விளக்கமளித்துள்ளனர்.
பறக்கும் திறன் வலுவாக உள்ள பறவைகளின் உடல் அமைப்பு பறப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதால், அவற்றின் இனப் பெருக்க உறுப்பு சிறியதாக அமைந்திருக்கும். எனவே, அவை இடும் முட்டைகள் நீள்வட்ட வடிவில் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

பாண்டாக்கள் தந்த வாழ்வு: அழிவின் விழிம்பில் இருந்த பாண்டாக்களை காக்க சீன அரசு, தீவிர முயற்சி எடுத்தது. மரங்களை வெட்ட தடை விதித்து, மரங்கள் வீழ்த்தப்பட்ட காடுகளில் மீண்டும் மரங்களை நட்டு, பாண்டாக்களின் கானக வசிப்பிடத்தை காத்தது.
இதனால் பாண்டாக்கள் பெருகியது மட்டுமல்ல, அவை வாழும் இடங்களில் வாழும் ஆசியக் கரடிகள், மான்கள், தங்க நிறக் குரங்குகள் போன்ற இனங்களும் தழைக்க ஆரம்பித்துள்ளதாக, 'எகோஸ்பியர்' ஆய்விதழ் தெரிவித்து உள்ளது.
பாண்டா, புலி, யானை போன்ற வசீகரமான விலங்குகளைக் காக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும்போது, அவற்றின் வாழிடங்களில் பிற விலங்குகளும் பலனடைவதை அந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

விரயமாகும் உலக மீன் வளம்: மீன் வளம் குறைந்து வருகிறது. 1990களிலிருந்து ஆண்டுக்கு, 12 லட்சம் டன் அளவுக்கு மீன் பிடிப்பு குறைந்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு கோடி டன் அளவுக்கு நல்ல மீன்கள் விரயமாவதாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மோசமான மீன்பிடி உத்திகள், அவற்றை உரிய முறையில் பாதுகாக்கத் தவறுவது போன்ற செயல்களால் விரயம் ஏற்படுவதாக அவர்களது ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலக நாடுகளின் உணவுப் பாதுகாப்பு சிக்கலாகி வரும் நிலையில் இந்த மீன் விரயம் தடுக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூடேறும் கடல்கள்: கடலின் வெப்பம் அதிகரித்து வருவதாக சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த
பல ஆண்டுகளில் நடத்தப்பட்ட, மூன்று வேறு ஆய்வுகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மூன்று ஆய்வுகளும் உலகின் வெவ்வேறு கடல் பகுதிகளில் செய்யப்பட்டவை. ஆனால், எந்தப் பகுதி கடலாக இருந்தாலும் சரி, கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதையே காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமி வெப்பமாதல் என்பது, உண்மையில் கடல் வெப்பமாதல் என்று கூட சொல்லலாம் என்று சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்களது ஆய்வு, 'கிளைமேட் டைனமிக்ஸ்' இதழில் வெளிவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X