ஜி.எஸ்.டி., - வரலாற்றுடன் ஓர் ஒப்பந்தம்!- எம்.வெங்கையா நாயுடு -| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., - வரலாற்றுடன் ஓர் ஒப்பந்தம்!- எம்.வெங்கையா நாயுடு -

Added : ஜூன் 30, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு மாறுவதன் மூலம், நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளோம். மேலும், புதிய வரலாறாகவும் இது அமைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் வரி முறையில் புதிய அத்தியாயத்தை துவக்கிஉள்ளோம்.

நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கையான, 'ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை' என்ற இந்த புதிய வரிவிதிப்பு முறை, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இதன் மூலம், வர்த்தகர்களும், பொதுமக்களும் மிகப் பெரிய பலனை காண்பதுடன், அதிகமானோர் வரி விதிப்பின் கீழ் வருவதால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பிறகு, ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 1.5 முதல், 2 சதவீதம் வரை உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., - எஸ்.ஜி.எஸ்.டி., - ஐ.ஜி.எஸ்.டி., என, நிர்வாக ரீதியில், ஜி.எஸ்.டி., மூன்று வகையாக இருந்தாலும், முந்தைய வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒற்றை வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை நிர்ணயிக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில், மொத்தம், 1,211 வகையான பொருட்களுக்கு, 0, 3, 5, 18, 28 சதவீதத்தில் ஐந்து அடுக்குகளாக வரி விதிக்கலாம் எனக் கூறி உள்ளது. இருந்தாலும், பெரும்பாலான பொருட்கள், 18 சதவீத வரியின் கீழ் வருகின்றன.ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வதற்கு, மிகப் பெரிய அளவில் பங்களிப்பு அளித்த, அருண் ஜெட்லியையும், கவுன்சிலின் உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன்.

ஜி.எஸ்.டி.,யை ஆதரித்த, அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டுக்கு உரியவை. ஆனால், சில கட்சிகள், தங்களுடைய குறுகிய கால பலன்களுக்காக, இரட்டை வேடத்தை போட்டுள்ளன.
முன்பு, ஜி.எஸ்.டி.,யை ஆதரித்த அவர்கள், தற்போது அதை எதிர்க்கின்றனர். இவர்களின் போலி முகத்தை மக்கள் உணர்ந்து, சரியான பாடத்தை புகட்டுவர்.


கட்டுப்பாடுகள்


இந்த புதிய வரி முறையினால், துவக்கத்தில் சில நடைமுறை பிரச்னைகள் வரலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில், வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப் பெரிய பலனை அளிக்க உள்ளது. அதிகார துஷ்பிரயோகம் தடுக்கப்படுகிறது; நெருக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது; மாநில எல்லைகளில் செக்போஸ்ட்கள் கிடையாது; வரித் துறையினரின் தொந்தரவுகள் கிடையாது.

அதே நேரத்தில், வெளிப்படைத்தன்மை, விலைவாசி குறைப்பு, பொருட்களின் விலை குறையும், தொழில் செய்வது சுலபம், அனைவருக்கும் வாய்ப்பு, வரி செலுத்துவது அதிகரிப்பு, உயர் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை புதிய வரி விதிப்பு முறை உறுதி செய்யும்.

'சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்' என்பதை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்த வரி சீர்திருத்தம், நாட்டின் வரி முறையை புதிதாக உருமாற்றம் செய்யும். தற்போது, 142 நாடுகளில், ஜி.எஸ்.டி., அம லில் உள்ளது. இதன் மூலம், இந்த ஒற்றை வரி முறையானது, செயல் பாட்டை மேம்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டாலும், மிகப் பெரிய மக்கள் தொகை, மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நம் நாட்டில் இதை செயல்படுத்துவது தனி சிறப்பாகும்.

தினசரி பயன்படுத்தும் உணவு பொருட்களான, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், பிரெட், மாவுகள், தானியங்கள், பருப்புகள், சிக்கன், இறைச்சி, இயற்கை தேன் ஆகியவற்றுக்கு வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ், கைத்தறி, பொட்டு, ஸ்டாம்ப், பத்திரிகைகள், குழந்தைகள் வர்ணம் தீட்டும் புத்தகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.


18 சதவீதமாக குறைவு


மத்திய, மாநில வரிகளை சேர்த்தால், இதுவரை, 31 சதவீதமாக இருந்த, சோப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி, 18 சதவீதத்துக்கு குறைகிறது என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ஏற்கனவே செலுத்திய வரியை குறைத்து கொள்ளலாம், பல முனை வரி கிடையாது போன்றவற்றால், தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையும். மறைமுக வரி, கூடுதல் வரி கிடையாது என்பதால், பெரும்பாலான பொருட்களின் விலை குறைவதால், பொதுமக்களுக்கு பலன் கிடைக்கிறது. தற்போது, 25 முதல், 30 சதவீத வரி, எதிர்காலத்தில் மேலும் குறையும் என்பதால், பொதுமக்களுக்கு நீண்ட கால பலன் கிடைக்கிறது.ஒற்றை வரி முறை, நுகர்வோர், வர்த்தர்கள், வியாபாரிகள், அரசு என அனைத்து தரப்பினரின் வெற்றியாகும்.

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும், 'லாஜிஸ்டிக்ஸ்' துறையும், செக்போஸ்ட் இல்லாததால், பலன் அடைய உள்ளது. ஒவ்வொரு செக்போஸ்டாக நிறுத்தி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மிக வேகமாக பொருட்கள் இலக்கை அடையும். இதனால், செலவும் குறையும்.

இந்த புதிய வரி முறையானது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தையும் உறுதி செய்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்ப தரமான பொருட்களை உருவாக்கும் போட்டியை, புதிய வரி முறை ஏற்படுத்தும்.


இரண்டு மாதம் அவகாசம்


ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையின் மிக முக்கியமான அம்சம், இது அடிக்கடி விலையேற்றம் ஏற்படுத்தாது என்பதால், நீண்டகால அடிப்படையில் மிகப் பெரிய பலனை அளிக்கும்.
ஜி.எஸ்.டி., முறையினால், வரி உள்ளிட்ட துறைகளில், அடுத்த சில மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக மற்றும் தொழில்துறையினரின் பிரச்னைகளை உணர்ந்து, கணக்கு தாக்கல் செய்வதற்கு, இரண்டு மாதம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய, மிக முக்கியமான, வரலாற்று சிறப்புமிக்க வரி விதிப்பு முறை என்பதால், இது கடந்து வந்த பாதையை பார்ப்போம். இந்த வரி விதிப்பு முறையின் பலனை நாம் அனுபவிப்பதற்கு, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது சற்று நீளம் தான்.

இந்த வரி விதிப்புக்கான விதையை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 2000ம் ஆண்டில் விதைக்கப்பட்டது. அப்போது மேற்கு வங்க நிதியமைச்சராக இருந்த அசிம் குப்தா தலைமையில், ஒரு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. அதை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது.

அந்தக் குழு, 2008ல் அளித்த அறிக்கையின்படி, 2011ல், ஜி.எஸ்.டி.,க்கான, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரி தொடர்பான பிரச்னைகளை, 2012, டிசம்பருக்குள் தீர்வு காண்பதாக, மத்திய, மாநில நிதி அமைச்சர்கள் கூறியதைத் தொடர்ந்து, 2013, பிப்ரவரியில் இருந்து, ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த, 2014, டிசம்பரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டத்தில், ஜி.எஸ்.டி.,க்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அது, லோக்சபாவில், 2015 மே மாதத்திலும், ராஜ்யசபாவில், 2016 ஏப்ரலிலும் நிறைவேற்றப்பட்டது.


கவலை வேண்டாம்


ஜி.எஸ்.டி., தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அதை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த
வேண்டும் என்பதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முனைப்புடன் செயல்பட்ட விதம், நாட்டை மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு வலுசேர்க்கும் விதமாக இருந்துள்ளது.

'அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்கான' என்ற அரசின் கொள்கையின்படி இந்த வரி விதிப்பு முறை வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களைத் தவிர மற்ற எவரும் கவலைப்பட வேண்டியதில்லை.

(கட்டுரையாளர், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர். கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை, அவருடைய சொந்தக் கருத்துகள்).

- எம்.வெங்கையா நாயுடு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை