நேர்மை இல்லாதிருக்கும்வரை விவசாயிகளுக்கு வாழ்வில்லை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நேர்மை இல்லாதிருக்கும்வரை விவசாயிகளுக்கு வாழ்வில்லை!

Updated : ஜூலை 05, 2017 | Added : ஜூலை 04, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நேர்மை இல்லாதிருக்கும்வரை விவசாயிகளுக்கு வாழ்வில்லை!

விவசாயிகள் பக்கமிருந்து, கடன், வறுமை, வறட்சி என்ற குரல் மட்டுமே கேட்கிறது. விவசாயத்தில் லாபமே கிடையாதா, வெறும் நஷ்டம் மட்டும் தானா, அவர்களை நாலாந்தர மக்களாக அரசாங்கம் கைவிட்டு விட்டதா என்று அறிய, விவசாயத் துறை படிப்பு முடித்து, அதேத் துறையில் நேர்மையான அதிகாரியாக இருக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் நம் நெஞ்சை சுடுவதாக இருந்தது. அவை:
உண்மையில் உழவர்களுக்கு நன்மைப் பயக்கும் பல திட்டங்களை அரசாங்கம் செய்தபடி தான் இருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து விதை, உழவுக் கருவிகள், பயிர் நடும் கருவி என, அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்கிறது. ஆனால், வழக்கம்போல் சில பெருச்சாளிகள் இங்கேயும் உள்ளே புகுந்து, உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை, தங்கள் பக்கம் திருப்பி, உழவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
ஒரு விவசாயி தான் விருப்பப்பட்ட விதையை, கருவியை வாங்க முடியாது. அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நிறுவனத்தில் அல்லது ஆட்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாய விதி இருக்கிறது.
உதாரணமாக, தோட்டக்கலைத் துறை மூலமாக, மானிய விலையில் வீரிய ஒட்டுரக விதைகள் விவசாயிகளுக்குத் தருகின்றனர். ஆனால், இதில் சில அதிகாரிகள், லஞ்சம் வாங்கி, தரமற்ற, முளைப்புத் திறன் குறைந்த விதைகளை வாங்கி விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் விற்கும் இந்த விதை தரமற்றதா, தரம் வாய்ந்ததா என்பது, அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. விதைத்த விதை சரியாக முளைக்காமல், விளைச்சலும் இல்லாமல் நஷ்டத்திற்கு ஆளானப் பின் தான் அவனுக்குத் தெரிய வரும். ஆனால், அதை அவன் எங்கு சென்று முறையிட முடியும்?
அப்படியே வாங்கிய அலுவலரிடம் சென்று முறையிட்டாலும், விதை சரியாக முளைக்காமைக்கு தாங்கள் தான் காரணம் என்று எந்த அதிகாரியாவது பொறுப்பேற்பாரா என்ன! 'எங்களுக்கு வருவதே அப்படித்தான்! நாங்கள் என்ன செய்ய முடியும்? அடுத்த முறை நல்லதாகத் தருகிறோம்' என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கிறது.
விவசாயக் கருவிகளில் நடக்கும் முறைகேடு, இதை விட அதிகமானது. இனக்கவர்ச்சி பொறி, விசைத் தெளிப்பான் போன்றவை வெளிமாநிலங்களில், 5,000 ரூபாய்க்கு தரமானதாகக் கிடைக்கிறது. ஆனால், இங்கு அதையே, 8,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து அரசாங்கப் பணத்தில் வாங்குகின்றனர். அதை உழவர்களுக்கு, 4,000 ரூபாய்க்கு மானிய விலையில் தருகின்றனர். அதுவும் ஏனோ தானோ என்று தயாரித்து, ஒட்டுமொத்தமாக கமிஷன் ரேட்டுக்கு வாங்கிய கருவிகள்.
ஒரு கருவிக்கே, 6,000 ரூபாய் வரை லாபம் என்றால், ஆயிரக்கணக்கான கருவிகளுக்கு எத்தனை லாபம் கிடைக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். கருவி, மருந்து என எதுவாக இருந்தாலும், எந்தக் கம்பெனி அதிக கமிஷன் தருகிறதோ அதைத்தான் அதிகாரிகள் வாங்குகின்றனர்.
சமயத்தில் புதிதாக ஒரு கம்பெனியை இவர்களே போலியாக ஆரம்பித்து விடுவர். வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியிடம், மொத்தமாக கமிஷன் ரேட்டுக்கு பேசி வாங்கி, அதில் இவர்கள் கம்பெனி பெயரைப் பதித்து விற்று விடுவர். கலப்பை, நெல் களையெடுக்கும் கோனாவிடார் கருவி, நடவு செய்யும் மார்க்கர் போன்றவை, இப்படித் தான் விற்பனை செய்யப்படுகின்றன.
சொட்டு நீர்ப்பாசனத்திற்கு பயன்படும், 'பைப் லைன்' கருவியிலும் இப்படி தான் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நாலு ஏக்கருக்கு சொட்டு நீர்ப்பாசனம் என்று எழுதி விடுவர். ஆனால், 2 ஏக்கர் நிலத்திற்கு தான் அந்த பைப் லைன் பொருத்தப்பட்டிருக்கும். மீதி இரண்டு ஏக்கர் நிலத்திற்கான காசு, அதிகாரிகளுக்கு மிச்சம். நுண்ணீர் பாசனத்தை முறைப்படி பின்பற்றி இருந்தால், இவ்வளவு வறட்சி வந்திருக்காது, வராது. அந்த நுண்ணீர் பாசனத்தில் ஏக்கர் கணக்கில் லஞ்சம் புகுந்து ஆடுவது தான் நஷ்டத்திற்குக் காரணம்.
விதைப் பண்ணைகளின் வேலை, விதை கொடுத்து வாங்கி சேமித்து வைப்பது தான். ஆனால், அதையும் அங்குள்ள அதிகாரிகள் சரியாகச் செய்வதில்லை. வெளியில், 40 ரூபாய் விற்கப்படும் விதைகளை, அதிகாரிகள், 60 ரூபாய் என்று வாங்குவர். அதையும் பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள். அதை யார் பாதுகாப்பது என்ற அலட்சிய மனப்பான்மையுடன் பாதுகாப்பதாக கணக்கில் காட்டி விட்டு, விவசாயிக்கு விற்றதாய் பொய்யான கணக்கு காட்டி, வெளிமார்க்கெட்டில் விற்று விடுகின்றனர்.
- இப்படிச் சொல்கிறார் அந்த
நண்பர். 'பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறதே, அது எப்படி?' என, அவரிடம் கேட்டால், 'பயிர் இன்சூரன்ஸ் இடத்திற்கு இடம் மாறுபடும். உதாரணம், தஞ்சைக்கு நெல் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்திருந்தால் அவருக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும். பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கிடைக்கும். அங்கு நெல் பயிரிட்டு நஷ்டம் அடைந்தவர்களுக்கு கிடைக்காது. 'இதுபோன்ற இட பாகுபாடும் விவசாயிகளுக்கு நஷ்டத்தையே தருகிறது. எந்த ஊரில் என்ன பயிர் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்தாலும், அவருக்கு இன்சூரன்ஸ் இருந்தால், இந்த நிலை மாறும்' என்றார் அந்த அதிகாரி. விதை, கருவி, மருந்து என்று கிடைக்கும் அத்தனை வழிகளிலும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவர்கள் எந்தக் காலத்தில் முன்னேற முடியும்? எப்போதும் போல் அவர்கள், துண்டை தோளில் போட்டு, 'விளைச்சல் இல்லை' என்று வானம் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டியது தான்.
நேர்மையான அரசு அமையும் வரை, விவசாயிகளுக்கு வாழ்வு இல்லை!
இ.எஸ்.லலிதாமதி
சமூக நல விரும்பி
இ-மெயில்: eslalitha@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-ஜூலை-201709:20:36 IST Report Abuse
Darmavan இதற்கு பரிகாரம் என்ன என்பதை விவரமறிந்தவர் சொல்ல வேண்டும்.இப்போதுதான் ஆதார் வந்துவிட்டதே இதை வைத்து பரிகாரம் தேடலாம் என்று நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-201706:11:51 IST Report Abuse
Padmanaban Jayakrishnan தலைப்பு அரசாங்க அதிகாரிகளை விட்டு விட்டு விவசாயிகளை குற்றம் சொல்வது போல உள்ளது. பயிர் காப்பீடு விதிமுறைகள் அபத்தமான ஒன்றாக உள்ளது. புயல் கடும் மழையால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த நிவாரணம் பெற முடியாது. மாறாக ஒட்டு மொத்த மாவட்டமே பாதிக்கப்பட்டால் தான் இன்சூரன்ஸ் நிவாரணம் கிடைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201715:44:01 IST Report Abuse
P R Srinivasan நேர்மையான அரசு அமையும்வரை தமிழ் நாடு மக்களுக்கு வாழ்வு இல்லை. அதில் விவசாயிகளும் அடங்குவர்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூலை-201712:16:35 IST Report Abuse
Sridhar நிலசீர்திருத்த மசோதா வந்தபோது அதை நிறைவேற்றி இருந்தால், இந்த விவசாயிகளுக்கு நல்ல ஈடுழப்பு கிடைத்திருக்கும். அவர்களும் அந்த தொகையை வைத்து வேறிடத்தில் நிலத்தை வாங்கி நவீன முறையில் விவசாயம் செய்து நன்றாக பிழைத்திருக்கலாம். ஆனால் இந்த கேடுகெட்ட எதிர்க்கட்சிகள் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் செய்து விட்டன விவசாயம் இன்று ஒரு 'அந்தி' தொழில். மறையும் நிலையில் உள்ள ஒன்று. அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியுமோ அந்த விவசாயிகளுக்கு நல்லது. நவீனங்கள் வளர வளர உற்பத்திகள் பெருகிக்கொண்டு இருக்கின்றன. நம் நாட்டில் 25 கோடி பேர் செய்யும் விவசாயத்தை அமெரிக்காவில் 25 லட்சம் பேர் செய்து விடுகிறார்கள் ஒருசில குறிப்பிட்ட விவசாயங்களை தவிர நம் விவசாயிகள் உலக அளவில் போட்டிபோடும் நிலையில் இல்லை. அதற்க்கு நிறைய கல்வியும் மனப்பான்மையும் தேவை. நம்மிடம் அவை அமைய, இன்னும் 100 வருடங்கள் ஆகலாம். அதுவரை சீர்செய்யப்படாத விவசாயத்தை விட்டு ஒதுங்கி நிற்பதே மேல் நம் நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் 70% மக்களின் பொருளாதார பங்களிப்பு வெறும் 25% தான். இந்த பங்களுப்பிற்கும் அரசாங்கம் ஊக்கத்தொகையாக பலவற்றை செய்யவேண்டியிருக்கிறது, கடன் தள்ளுபடி உட்பட ஆகவே, இந்த விவசாயிகள் வாழ்வதே இதர மக்களின் வரிப்பணத்தில்தான் இவ்வாறு ஒரு பெரும் சுமையை நாடு எவ்வளவு நாட்களுக்கு சுமக்க முடியும்? அவ்வாறு சுமந்தால் முன்னேற்றம் எவ்வாறு வரமுடியும்? விவசாயிகள் மீது பரிதாபப்படுவது போல் நிறைய பேர் அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் தீமை இழைத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையான அக்கறை கொண்டவர்கள் விவசாயிகளை கரையேற்ற வேண்டும். அவர்களின் குழந்தைகள் படிக்க உதவ வேண்டும். அடுத்த தலைமுறை அந்த தொழிலில் ஈடுபடாதவாறு வேறு தொழில் நுட்பங்களை கற்று தரவேண்டும். அவர்கள் பிழைப்பிற்கு ஒரு நல்ல வழி கிடைக்க உதவிட வேண்டும். அரசாங்கத்திடம் மண்டியிட்டு பிழைக்கும் பிழைப்பு ஒரு கேவலம். இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் அரசு உதவலாமே தவிர, தொடர்ந்து ஒரு சாராருக்கு அரசு உதவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அரசு அதிகாரிகள் மட்டத்திலும் அரசியல்வாதிகள் மட்டத்திலும் உள்ள ஊழல் மனப்பான்மை வேரோடு அழிக்க படவேண்டும். இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சிகளை துரத்தி விட்டு, ஒரு புதிய தலைமையை நாட வேண்டும். நாராயணசாமி மாதிரி ஒருவர் இவ்வளவு தைரியமாக குரல் கொடுக்கமுடிகிறது என்றால், அதற்க்கு நாமும் நம் மடமையும் முதல் காரணம்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-ஜூலை-201716:29:14 IST Report Abuse
அம்பி ஐயர் பல பேர் விவசாயிகள் என்ற போர்வையில் உலா வருகிறார்கள்.... அவர்கள் எல்லாம் வெள்ளை வெள்ளை சட்டை அதுவும் அயர்ன் செய்து பச்சைத் துண்டோடு உலா வருகின்றனர்.... உண்மையில் விவசாயிகளிடம் ஏமாற்றி நிலத்தை வாங்கி அவர்களை வைத்தே (கூலியாக) விவசாயம் செய்கின்றனர்.... இவர்கள் எல்லாம் பெரும் முதலாளிகள்.... அரசாங்கம் கொடுக்கும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்குத்தான் சென்று சேர்கின்றன... விவசாயக் கடன், கடன் தள்ளுபடி.... வாகனக் கடன் தள்ளுபடி இப்படிப் பல வசதிகளையும் இவர்களே அனுபவிக்கிறார்கள்.... பின் எப்படி விவசாயி முன்னேறுவான்... அதிலும் ஒரு சில விவசாயிகள் தங்களிடம் இருக்கும் நிலங்களை அதிகாரிகளின் துணையோடு ஃப்ளாஅட் போட்டு விற்றுவிடுகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-ஜூலை-201716:24:05 IST Report Abuse
அம்பி ஐயர் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி விற்கும் கய வணிகர்களை விட்டு விட்டீஎகளே....
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூலை-201713:22:03 IST Report Abuse
Sivagiri ஜெனரல் இன்சூரன்ஸ் என்பதே முக்கால்வாசி fraud. அதிலும் அக்ரி இன்சூரன்ஸ் என்பது முழு fraud..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-ஜூலை-201712:41:43 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நிறுவனத்தில் அல்லது ஆட்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாய விதி இருக்கிறது. //// உலகம் சுற்றும் வாலிபர் மோதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லுங்கள் .... ஆவன செய்வார் ....
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
05-ஜூலை-201712:34:13 IST Report Abuse
SENTHIL NATHAN விவசாயிகளும் பல தவறு செய்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்தை நாடுகின்றனர். ஆனால் லாபம் பார்க்கும் விவசாயிகள் பலரும் அரசு உதவி இல்லாமல் தான் செயல் படுகின்றனர்.பல விவசாய பத்திரிக்கைகளில் வெற்றி பெற்ற விவசாயிகளின் விபரங்கள் வெளி வருகின்றன. ஆனால் பெரும்பாலானோர் இந்த விபரங்களை அறிந்து கொள்வதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Guru Bharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-201712:12:23 IST Report Abuse
Guru Bharan மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. எங்கும் லஞ்சம் ஊழல் எதிலும் லஞ்சம் ஊழல். இப்பொழுதெல்லாம் ஊழல் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஊழல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. எல்லாருக்கும் உணவளிக்கும் விவசாயிக்கு இந்த நிலை. விவசாயிகளை வஞ்சித்த எவரும் உருப்படவே மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை