எங்கே செல்லும் இந்த பகை?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எங்கே செல்லும் இந்த பகை?

Added : ஜூலை 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எங்கே செல்லும் இந்த பகை?

டந்த, 1962ல் சீனா- - இந்தியா இடையேயான குறுகிய, ஆனால், உக்கிரமான போரை அடுத்து, தற்போது எழுந்துள்ள மோதலே மிக அழுத்தமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், பொருளாதாரத்தில் படுவேகமாய் வளர்ந்து வரும் சீனாவும் மோதிக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது?
ஒரே ஒரு சாலை விவகாரம், நாசம் விளைவிக்கும் யுத்தமாக மாறி விடுமோ என்று கவலை கொள்ளும் அளவுக்கு இருநாட்டு பேச்சுகளும் போர் முழக்கங்களாய் வெளிப்படுகின்றன.
இந்திய - - சீன பனிமலையில் மட்டும் அல்ல; நம்மிரு நாடுகளிடையேயான நல்லுறவிலும் இவ்விவகாரம் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
சமீப காலமாய் இந்தியா, சீனா இடையேயான பொருளாதார உறவு நல்லளவில் முன்னேற்றம் கண்டதாய் வெளிப் பார்வைக்கு தெரிந்தாலும், அதைக் காட்டிலும் அதிகரித்து வந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடே, தற்போதைய நிகழ்வு. இந்திய - -சீன எல்லையோரமாக இருக்கும் சீனாவின் டோகா லா ராணுவ முகாமுக்கு சாலை போடுவதல்ல இங்கு பிரச்னை; அதை பூட்டான் நாட்டின் வழியாக அமைப்பது தான் பஞ்சாயத்து.
இந்தியாவுக்கும், பூட்டானுக்கும் இடையே வலுவான ராணுவ உறவு உள்ள நிலையில், இந்தியா தலையிட்டு சீனாவின் சாலை பணியை தடுத்து நிறுத்தியது. அதற்கு, 'சீன - பூட்டான் பிரச்னையில் இந்தியாவுக்கு என்ன வேலை, இந்திய ராணுவம் எல்லை தாண்டி ஊடுருவுகிறது' என்று கேட்டு கொக்கரிக்கிறது சீனா.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, தன் நட்பு நாடான பூட்டானில், சீனாவின் அத்துமீறல் மட்டுமல்ல இது; இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் விஷயமும் கூட.
சீனாவின் டோகா லா எல்லை முகாமுக்கு நெருக்கத்தில் இருக்கும் இந்தியப் பகுதியான சிலிகுரி, நேபாளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே, கோழியின் கழுத்து போல் குறுகலாக உள்ள பகுதி. இதுவே, நம் நாட்டின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும், இந்தியாவின் மையப் பகுதியோடு இணைக்கிறது.
சீன ராணுவம் தாங்கள் அமைக்கவிருக்கிற சாலை வசதி வாய்ப்பை பயன்படுத்தி, சிலிகுரி பகுதியை சீனா கைப்பற்றிக் கொண்டால் போதும்; வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியா மையப்பகுதிக்குமான தொடர்பு முற்றிலும் அறுபடும் என்பது தான் அபாயம். இதுதான், இந்தியாவின் முக்கிய கவலை.
சீனா போன்று, அண்டை நாடுகளுக்கு எல்லை தொல்லை தரும் நாடொன்று, வேறு இருப்பது ஐயமே. இந்தியாவுக்கும், சீனாவுக்கும், 3,500 கி.மீ., எல்லை பகுதி உள்ளது.
சிக்கிம், இந்தியாவின் மாநிலமாக இருந்தபோதும், அது இந்தியாவுக்கு முழு உரிமையான பகுதி என்பதை, சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றும், சீனாவின் வரைபடங்கள் பல, இந்தியாவின் வடகிழக்கும் மாநிலங்களை தங்கள் நாட்டுடன் உள்ள பகுதியாகவே காட்டுகின்றன.
இதுதவிர, வெளிப்படையாக அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா, லடாக் பகுதியிலும் கையில் பிரச்னையோடு வந்து நிற்கிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த நேபாளம், வங்கதேசம் சீனா வசம் சாய்ந்துவிட, தற்போது இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பது பூட்டான் மட்டுமே.
கடந்த, 1962ல் போர் காலத்தில் இருந்த சீனா அல்ல, தற்போதைய சீனா. எல்லைப் பகுதியில் தரமான சாலைகள், விமான நிலையங்கள், ஹெலிபேடு என முன்னேறியுள்ள சீனா, ரயில் பாதைகளுக்கும் அடித்தளமிட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு வல்லரசாக தன்னை முன்னிறுத்தும் சீனாவுக்கு, வலுவடைந்து வரும் இந்திய- - -அமெரிக்க உறவு, எரிச்சலை ஏற்படுத்துவது இயல்பே. சீனாவுக்கு எதிரான அணி திரட்டலில், இந்தியா முழுவீச்சில் செயல்படுவதாக, சீனா திடமாக நம்புகிறது. சீனர்களிடையே, ஊடகங்கள் இத்தகைய பிரசாரத்தை முழு அளவில் முன்னெடுக்கின்றன.
இந்தியாவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில், சீனா முதலிடத்தில் இருந்தும், அதைத் தாண்டி போர் முரசறைய முற்படுவதற்கு காரணம், இந்த கோபம் தான். இந்தியாவும், 1962ல் இருந்த நிலையில் தற்போது இல்லை.
எனினும், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழலில், வளர்ச்சி பாதையில் வீறுநடை போடும் இந்தியா, சீனாவுக்கு, அது எத்தகைய பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை, பெரிதாக விளக்கத் தேவையில்லை.
உலகளவில் நிகழ்ந்து வரும், பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தில், இந்தியா மற்றும் சீனாவின் நீண்டகால வளர்ச்சி என்பது, இரு நாட்டு நல்லுறவுகளில் தான் உள்ளது. குறிப்பாக, பொருளாதார நல்லுறவில் வலுவடைவதே தற்போதைய முன்னுரிமை என்பதை சீனா உணருமா?இ-மெயில்:saleem1090@gmail.comஆரூர் சலீம்
பத்திரிகையாளர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-ஜூலை-201713:24:02 IST Report Abuse
Sridhar முதலில் வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்பான் மற்றும் அமெரிக்கா உடனான ராணுவ கூட்டமைப்பை வலுப்படுத்தி இந்திய கடல் பகுதிகளில் இப்படைகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டும். பதிலுக்கு பதில் தயங்காமல் குடுக்க வேண்டும். ஒரு தம்மாத்தூண்டு பாகிஸ்தானே இவ்வளவு பெரிய இந்தியாவை எதிர்க்க துணிகிறது என்றால், இந்தியாவுக்கு என்ன பயம்?பிலிபைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகள் கூட சீனா மீது காண்டாக தான் இருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்கும். நேரு போல் தவறான கொள்கைகளோ நடவடிக்கைகளோ எடுக்காமல், மிக நேர்த்தியான வீரமான நடவடிக்கைகள் எடுக்கும் திறன் கொண்டது இந்த மோடி அரசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை