வருவாரா, வர மாட்டாரா?| Dinamalar

வருவாரா, வர மாட்டாரா?

Updated : ஜூலை 16, 2017 | Added : ஜூலை 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
டில்லி உஷ், ராகுல், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆர்எஸ்எஸ், மஹாத்மா காந்தி, பா.ஜ., காங்கிரஸ், சோனியா, அகமது படேல், ஆனந்த் சர்மா, ஜனார்த்தன் திவேதி, கோபாலகிருஷ்ண காந்தி,

ராகுல், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படப் போவதாக, பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. நாட்கள் உருண்டோடுகிறதே தவிர, இதுவரை, அவர், தலைவராக நியமிக்கப்படவில்லை. வரும் செப்டம்பரில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் மாநாடு நடக்கவுள்ளது; அப்போது, ராகுல் தலைவராக அறிவிக்கப்படுவார் என்கின்றனர்.இதற்கிடையே, 'சோனியாவே, அடுத்த லோக்சபா தேர்தல் வரை தலைவராக நீடிப்பார்' என, செய்திகள் வெளியாகி தொண்டர்களை குழப்பி வருகின்றன; இதற்குக் காரணம், கட்சியின் மூத்த தலைவர்கள் என சொல்லப்படுகிற, அகமது படேல், ஆனந்த் சர்மா, ஜனார்த்தன் திவேதி ஆகியோர் தான்.இவர்களுக்கும், ராகுலுக்கும் எப்போதுமே ஆகாது. 'இளைஞர்களுக்கு, முக்கிய பதவிகளை விட்டுத் தர வேண்டும்' என, இவர் கூறுவது, மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. 'நிதிஷ் குமார், சரத் பவார் போன்ற தலைவர்களுடன் பேச, ராகுலுக்கு அனுபவம்போதாது; சோனியா தான் சரியானவர்' என்கின்றனர், இந்ததலைவர்கள்.சமீபத்தில், சீனாவின் இந்திய துாதரைச் சந்தித்த ராகுல், தான் சந்திக்கவில்லை என முதலில் கூறினார். ஆனால், சீனா அரசு, இந்த செய்தியை வெளியிட்டதும், சந்திப்பு நடந்தது உண்மை தான் என்றார் ராகுல். இந்த விவகாரத்தை, பா.ஜ.,வினர் கிண்டல் செய்தனர். மக்கள் மத்தியிலும் காமெடியாக விவாதிக்கப்பட்டது.இதை காரணமாக கூறி, 'ராகுல் தலைவரானால், கட்சி அதோகதிதான்' என்கின்றனர், இந்த சீனியர் தலைவர்கள். இது தொடர்பாக டில்லி மீடியாக்களுக்கும் செய்தியைக் கசிய விடுகின்றனர். ராகுலுக்கு துணையாக இருக்கும் இளைஞர் பட்டாளம், இதுபோன்ற செய்திகளை கசிய விடுவது யார் என, விசாரித்து வருகிறது.


காந்திக்கும், பா.ஜ.,வுக்கும் ஆகாது

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தி, மஹாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன். ஜனாதிபதி மாளிகையில், அதிகாரியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர். வெங்கட்ராமன், கே.ஆர்.நாரயணன் ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த போது, அவர்களுக்கு செயலராக பணியாற்றியவர்.குஜராத்தில், 2002ல், கலவரம் நடந்தது. அப்போது, குஜராத்தில் முதல்வராக இருந்தவர் மோடி. மத்தியில், பா.ஜ.,வின் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அப்போதைய ஜனாதிபதி, கே.ஆர்.நாராயணன், இந்த கலவரம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு கண்டன கடிதம் எழுதினார்.ஆனால், அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விபரம் வெளியாகவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, அந்த கடிதத்தை பெற சிலர் முயற்சித்தனர். 'இந்த கடிதம், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையேயான ஒரு ரகசிய விவகாரம். எனவே, இதை வெளியிட முடியாது' என, ஜனாதிபதி அலுவலகம் மறுத்து விட்டது.இந்தக் கடிதத்தை தயார் செய்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. மோடி பிரதமரானதும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பிரச்னை வரும் என கூறியவர் இவர். இதனால் இவரை பார்த்தாலே, பா.ஜ., தலைவர்களுக்கு ஆகாது.'ஏதோ ஆசைக்காக வேட்பாளராக உள்ளார். அவர் தோற்பது நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரியும்' என, கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


இனிமே எல்லாமே நாங்க தான்!

நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில்,ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று ஜனாதி பதி பதவியில் அமரப் போகிறார் என்பது அனைவருக்குமேதெரியும்.ஜனாதிபதி மாளிகை, ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. நாட்டின் பலவித ரகசியங்கள் இங்கு காக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் வேலையைக் கவனிக்க சீனியர் அதிகாரிகள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் உட்பட, 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இங்கு பணிபுரிகின்றனர். புதிய ஜனாதிபதி வந்ததும், பழைய அதிகாரிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக மாற்றிவிட்டு, தனக்கு வேண்டிய நெருக்கமானவர்களை நியமிப்பது வழக்கம்.இதே போல், துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் தான், வெற்றி பெறுவார்; காரணம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான, எம்.பி.,க்களின் எண்ணிக்கை, பா.ஜ., அதன் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகளுக்கு உள்ளன.துணை ஜனாதிபதிக்கு உதவ, 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளனர். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி மாளிகையில் பணியாற்ற, புதிய அதிகாரிகளை நியமிக்க, பா.ஜ., தலைமை வேலைகளைத் துவங்கி விட்டது. கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு நெருக்கமான அதிகாரிகளின் பட்டியல் தயாராகி விட்டதாம்.'இந்த இரண்டு மாளிகைகளிலும் இனிமேல் எங்கள் ஆட்கள்தான் இருப்பர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அலுவலகங்கள் முழுக்க எங்கள் ஆட்களை நிரப்பி விடுவோம்' என்கிறார், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை லோக்சபா, 'டிவி'யும், ராஜ்ய சபா, 'டிவி'யும் ஒளிபரப்புகின்றன.பா.ஜ.,விற்கும், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கும் ஒத்துப் போவதில்லை. மேலும், ராஜ்ய சபா, 'டிவி'யின் முக்கிய பதவிகளில் காங்கிரஸ்காரர்கள் உள்ளனர். புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்றதும், ராஜ்ய சபா, 'டிவி' ஊழியர்கள் முற்றிலும் மாற்றப்படவுள்ளனர். இங்கும், பா.ஜ., ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.'ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அலுவலகங்களில், பா.ஜ., ஆட்களைப் போடுவது நியாயமா' என கேட்டால்,'சுதந்திரம் பெற்று இதுநாள் வரை ஜனாதிபதி அலுவலகத்தில் காங்கிரசுக்கு வேண்டியவர்கள்தானே பணியாற்றினர். அது உங்கள் கண்களுக்குத் தெரிய வில்லையா' என, கோபப்படுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஜூலை-201715:14:20 IST Report Abuse
Cheran Perumal மோடிக்கும் ஆர் எஸ் எஸ் சுக்கும் சமீப காலமாக ஒத்துப்போவதில்லையாம். மோடி பிரதமராக வரக்கூடாது என்பது சில முக்கிய தலைவர்களின் கருத்தாக இருந்ததாம். அதற்காக அவர்கள் செய்த சில விஷயங்கள் தற்போது மோடியின் பார்வைக்கு வந்துள்ளதாம். அதனால் அவர்கள் பேச்சுக்கு மோடியிடம் மதிப்பில்லாமல் போய்விட்டதாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை