சின்டெக்ஸ் டேங்க் சீரமைக்கப்படுமா? ராசிபுரம் அடுத்த, அத்தனூர், 15வது வார்டு, எம்.ஜி.ஆர்., காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க், பயன்பாட்டில் இல்லை. இதில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகிறது என்கின்றனர். தற்போது, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சின்டெக்ஸ் டேங்கில் அமைக்கப்பட்டுள்ள பைப் உடைக்கப்பட்டுள்ளது. தொட்டியை சீரமைத்து, தண்ணீர் விட வேண்டும்.
பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பிடம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே, பல ஆண்டுகளாக பொதுக் கழிப்பிடம் பூட்டிக் கிடக்கிறது. அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்போர், பஸ் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், சிரமப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருசிலர், வேறுவழியின்றி திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பூட்டிக் கிடக்கும் கழிப்பிடத்தை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தேரை சுற்றிலும் விளம்பர போஸ்டர்: நாமக்கல், ரங்கநாதர் கோவில் அருகே, தேர்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரங்கநாதர் சுவாமி தேரைச்சுற்றிலும், பாதுகாப்புக்காக இரும்பு தகடு அடிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது மட்டுமே அகற்றப்படும். இந்நிலையில் அந்த பாதுகாப்பு தகரம் முழுவதும், சினிமா மற்றும் அரசியல் போஸ்டர்கள், வர்த்தக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்படுகின்றன. இதனால், பக்தர்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர்.
சாலை சந்திப்பில் விபத்து அபாயம்: பள்ளிபாளையம், பாலம் சாலையில், வி.ஏ.ஓ., அலுவலக பின்புறத்தில் இருந்து வரும் சாலை சந்திக்கிறது. இரண்டு சாலைகளிலும் வாகனங்கள் அதிகளவு செல்லும். சாலை சந்திக்கும் இடத்தில், வேகத்தடை இல்லை. வாகனத்தில் வருவோர், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், தடுமாறி விழுகின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த இடத்தில், வேகத்தடை மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை எரிப்பு; மக்களுக்கு இடையூறு: குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை பைபாஸ் சாலை உள்ளது. இங்கு, சாலையோரம் உள்ள குப்பை மற்றும் காய்ந்துபோன செடி கொடிகளை மர்ம நபர்கள் சிலர் எரிப்பதால், புகை மூட்டம் அதிக அளவில் பரவுகிறது. கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோருக்கு பெரிதும் இடையூறாக இருப்பதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. குப்பை எரிப்பவர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும்.