அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று| Dinamalar

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தத்துவம். சமுதாய வாழ்க்கையில், அமைதியை தருவதற்கும் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது. அறநெறிகளில் மனித குலம் ஒன்றி வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றியது.அரசியல் தத்துவங்கள், மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளில் இருந்து தோற்றம் பெறுகிறது. தனி மனிதன் அல்லது சமுதாயம் சார்ந்த தேவைகளின் அடிப்படையில் எழுகின்ற அக்கறையும், அதனை பூர்த்தி செய்ய முனைகின்றபோது, ஒருவர் பலருக்காக பணிபுரிதலில் காணப்படும் அணுகுமுறையுமே அரசியல் ஆகும்.


அரசியல் கடமை


ஒரு சிந்தனை தளத்திலிருந்து எழும் சிந்தனை சமுதாயத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று மனித குலத்தை வாழ்வியல் நெறி வழி வழிப்படுத்துவது தான் அரசியலின் முக்கிய கடமை. ''அரசியல் என்பது ஒரு வேள்வி. அது தொழிலாகி விடக்கூடாது'' என்றார் காந்தி. ஒரு அரசின் விதியை எழுதுவது அரசியல்வாதிகள். அவர்களிடம் நேர்மை, நாணயம், நல்லொழுக்கம், தன்னலமற்ற மக்கள் நல செயல்பாடு வேண்டும். சமூக வாழ்வில்
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கடமைகள் இருக்கிறது. ஒன்று தனி மனித கடமை. மற்றொன்று சமூக கடமை. அந்த சமூக கடமையை நல்வழியில் ஆற்றுவதற்கு அரசியல் என்ற தளம் தேவைப்படுகிறது.''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' என்று பாடினார் அவ்வையார். ஆனால், இன்றைய உலகில் மானிடராய் பிறத்தல் அரிதல்ல. அது மிக எளிது. எளிது, எளிது மானிடராய் பிறத்தல் எளிது. ஆனால், அரிது, அரிது, மனிதனாய் வாழ்வது தான் அரிது. இன்றைய உலகில், மனிதன் அரசியல்வாதியாக பரிணமிக்கின்றபோது, அவன் மனிதனாக இருப்பதில்லை.தங்கள் சொந்த நலத்திற்காக பிறர் நலத்தை அழித்தொழிக்க தயங்காதவர்களாகவும், தங்களுக்கு ஆதாயம் இல்லாது போனாலும், பிறரை அழித்து ஒழிப்பதிலேயே பேரின்பம் கொள்வபவர்களை கொண்டதாகவும், இன்றைய
அரசியல் உலகம் இருக்கிறது.


மனிதக்கொடுமை
எங்கே வளையவேண்டுமோ அங்கே வளைந்து, எவருக்கு முதுகு சொறிய வேண்டுமோ, அவருக்கு முதுகு சொறிந்து கை கூப்பி வாய்பொத்தி தொண்டனாக நின்று குறைந்தபட்சம் கள்ளச்சாராயம் காய்ச்சியாவது கணிசமான பணத்தை சேர்த்து வைத்து, கட்டப்பஞ்சாயத்தில் கற்று தேர்ந்து, ஜாதி கட்டுமானம் பின்புலமாக இருந்து, உள்ளுக்குள் வஞ்சம் வளர்த்து, உதடுகளில் புன்முறுவல் பூத்து, பொய் முகங்களோடு போலியாக பழகி, இல்லாத திறமைகளையும், பெருமைகளையும் இருப்பதாக சொல்லி, விதவிதமாய் பல்லிளித்து, பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பணிந்து நடந்து, வாழ்க்கையின் சகல விதமான இன்பங்களையும் ஒன்று விடாமல் அனுபவிக்க துடிக்கும், மனிதர்கள் இன்றைய அரசியலில் இருப்பது கொடுமை.


ஒதுங்கும் சமூகம்


நேர்மை, எளிமை, தன்னலமறுப்பு, சமூக நலனுக்கான சேவை ஆகியவை தான் பொதுவாழ்வில் அரசியலின் அடிப்படை பண்புகள். படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என அத்தனை பேரும் அரசியல் என்றாலே, மூக்கை பிடித்து கொண்டு ''சாக்கடை நாறுகிறதே'' என ஒதுங்கி சென்றால் ஒரு பயனும் இல்லை.
அந்த சாக்கடைக்குள் கால் வைத்து இறங்கி, அதில் படிந்து கிடக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தினால் ஒழிய நாற்றம் தீரப்போவது இல்லை. அரசியல் அரங்கம் என்பது அழுக்கேறி கிடக்கின்ற சாக்கடை. அங்கே அசிங்கமான மனிதர்கள்தான் போய் நிற்க முடியும் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.அதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த மனிதர்கள் நிறைந்த இடமாக, சட்டமன்றமும், நாடாளுமன்றமும் மாற வேண்டும். மக்கள் நலனுக்காக ஏங்குகின்றவர்கள் ஆட்சி,
அதிகாரத்தில் அமர வேண்டும்.அப்படி அமர்ந்தால் வறுமை அழியுமா? அழியும். வேலை யின்மை ஒழியுமா? ஒழியும். சமூகத்தின் சகல தளங்களிலும் சமத்துவம் மலருமா? மலரும்.எப்போது மனித நேயமும், நிறம் மாறாத நல்ல பண்புகளும் சமூக பிரச்னைகளில் தெளிவான பார்வையும், உடமைகளை பெருக்கும் நோக்கம் இல்லாத எளிமையும் கொண்ட நேர்மை
யாளர்களை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக நிறுத்துகிறதோ அன்றுதான் மக்கள் வாழ்வு வளம்பெறும்.ஆட்சி நிர்வாகத்தில் மட்டும் இருந்த அரசியல், இன்று சமூகத்தின் சகல தளங்களிலும் இரண்டற கலந்து, ஒவ்வொரு துறையின் ஆரோக்கியத்தையும் அழிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து சமூகம் விடுபட வேண்டும்.


அரசியல் வேடம்


சமூக நலன் சார்ந்து சேவை செய்வது தான் ஓர் அரசியல்வாதிக்குரிய நல்ல அடையாளம். தன்னிடம் உள்ள அறிவை, ஆற்றலை, உழைப்பை, செல்வத்தை, மக்களின் மேன்மைக்கு பயன்படுத்தவே ஒருவன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டும். காந்திய யுகத்தில் அப்படிப்பட்ட மேலான மனிதர்கள் தான் அரசியல் களத்தை நோக்கி ஆர்வத்துடன் வந்தார்கள். ஆனால், இன்று சமுதாய பிரச்னை குறித்து, சரியான புரிதலோ, மக்களுக்கு தொண்டாற்றும் உண்மையான துடிப்போ இல்லாது, அதிகாரத்தை
சுவைக்கவும், பொதுப்பணத்தை சுரண்டவுமே பலர் அரசியல் வேடம் புனைகின்றனர்.அரிஸ்டாட்டில் ஆட்சி கலையை 'தலைமை அறிவியல்' என்றார். ஆனால், தாதாக்களும், கள்ளச்சாராய பேர்வழிகளும், கிரிமினல் குற்றவாளிகளும், வர்த்தக சூதாடிகளும் வலம் வரும் களமாக இன்றைய அரசியல் கட்சிகள் சீரழிந்து வருகின்றன. காசுக்கு ஓட்டு போட்டு, கயவர்களின் ஆசைக்கு இரையாகும் மக்கள் இருக்கும் வரை மக்களாட்சி சிறக்காது.உலகத்தில் எந்த மாற்றத்தையும், புரட்சியையும் மேல்தட்டு மக்கள் முன்னின்று நடத்தியது இல்லை. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை காசு கொடுத்து வாங்கி தங்கள் வசதிகளை தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, 'ராமன்
ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' அவர்களுக்கு கவலை இல்லை. கீழ்தட்டு மக்களுக்கோ ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது.வயிற்று பசிக்கு சோறு தேடுவதிலேயே அவனின் நேரமும், பொழுதும் போய் விடுகிறது. சமூக பிரச்னைகளுக்காக போராட அவனால் வர இயலாது. எனவே, இரண்டுக்கும் இடையேயான நடுத்தர மக்களுக்குத்தான் சமூக பிரச்னைகள் தெரிகிறது. அவர்களால்தான் போராட முடியும்.ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் தேர்வு செய்த உறுப்பினர்களே நாடாள முடியும். தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லாதபோது, அவர்களை மாற்றி அமைக்கும் மாண்பு மக்களாட்சி யில் மட்டுமே உண்டு.


பண்பாடு ஓங்கும்


சிறந்த அரசியல் நிலவும் நாட்டில், ஒழுங்குகள் நிலவும். அறிவுத்துறை மேம்படும். பகை ஒடுங்கி பண்பாடு ஓங்கும். அரசியலின் பயன், அரசியல் நடத்துவோருக்கு அல்ல. அது மக்களுக்கே.''எப்போதெல்லாம் அறம் அழிந்து, மறம் மேலெழும்புகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்து கொள்கிறேன், நல்லாரை காப்பதற்கும், தீேயாரை ஒடுக்குவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகம்தோறும், யுகம்தோறும் நான் அவதரிக்கிறேன்'' என்று கீதையில் பகவான் கண்ணன் கூறுவார்.
அரசியல் அறத்தை பிழைத்து வாழும் அரசியல்வாதிகளுக்கு, அந்த அறமே கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தின் கூற்றுப்படி அந்த நாள் என்று வருமோ? என்று ஒவ்வொரு மனிதனும் ஏங்கி துடிக்கின்ற காலம் உள்ளது. நல்ல அரசியல் அறம் வளர, நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்.-மகா. பாலசுப்பிரமணியன்
சமூக ஆர்வலர்காரைக்குடி94866 71830------

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.