வருமான வரி பற்றி சில வரிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வருமான வரி பற்றி சில வரிகள்!

Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (9)
Advertisement
வருமான வரி பற்றி சில வரிகள்!

காதல் மன்னன்' என்ற சினிமாவில் ஒரு காட்சி... எம்.எஸ்.விஸ்வநாதன் நடத்தும் உணவகத்திற்கு அரசு அதிகாரிகளைப் போல் இருக்கும் சிலர் செல்வர். 'இவர்கள் இன்கம் டாக்ஸ் அதிகாரிகள்' என, எம்.எஸ்.வி.,யை விவேக் பயமுறுத்துவார். எம்.எஸ்.வி., வெள்ளந்தியாக, 'இன்கம் டாக்ஸ்னா என்ன...' எனக் கேட்பார். அந்த நிலையிலிருந்து நாம், வெகுதுாரம் வந்து விட்டோம்.
நேர்முக, மறைமுக வரிகள்

நேர்முக வரிகளில் பிரதானமானது, வருமான வரி; ஜி.எஸ்.டி., போன்றவை, மறைமுக வரிகள். ஜி.எஸ்.டி., கட்டும் வணிகர், அந்த வரிச்சுமையைத் தன் வாடிக்கையாளர் மீது சாடி விடுவார்; ஆனால் வருமான வரியை நாம் தான் கட்ட வேண்டும். பெரிய புள்ளிகள் வீட்டில், வருமான வரி சோதனை பற்றிய செய்திகளை சுவாரசியத்துடன் படிக்கிறோம். பல சமயங்களில், நம்மை அறியாமல், நாமே வரி ஏய்ப்பு செய்கிறோம் என்பதை அறிவதில்லை. 'போய்யா... உனக்கு வேற வேலை இல்லை... மாசா மாசம் சம்பளத்துல பத்தாயிரம் ரூபாய் பிடிச்சுடாறங்க. அதுக்கு மேல நான் என்ன செய்யணும்?' எனக் கேட்கத் தோன்றுகிறதா! உங்கள் சம்பளத்தில் வரி பிடிக்கப்படுகிறது; வங்கியில் நீங்கள் பெறும் வட்டியில் வரி பிடிக்கப்படுகிறது. அத்துடன் உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அதற்கு மேல் செய்ய வேண்டியது நிறையவுள்ளது.

கணக்கிடுவது எப்படி? : நிதியாண்டு முடிந்த பின், நம் மொத்த வருமானத்தை கணக்கிட வேண்டும். மாத சம்பளம் போக, வங்கிக் கணக்கில் வரும் வட்டி, வீட்டை வாடகைக்கு விட்டதால் கிடைத்த வருமானம் என்று வருமானங்களைக் கணக்கிட்டு, அதற்காக வரியை நிர்ணயிக்க வேண்டும். சில வருமானங்களுக்கு வரி விலக்கு உண்டு. உதாரணமாக, கம்பெனி பங்குகளில் வரும் ஈவுத் தொகையான டிவிடெண்டுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. நீங்கள் வீடு கட்ட கடன் வாங்கியிருந்தால், அதற்காக நீங்கள் கட்டும் வட்டியையும், அசலையும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம்.
சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்பீட்டு பிரீமியம், மருத்துவச் செலவு காப்பீட்டிற்கான செலவு, உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றை, உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். கழிவுகளுக்கு பிறகு இருக்கும் தொகை, உங்கள் நிகர வருமானம்.

முதியோருக்கான சலுகைகள் : உங்கள் வயது, 60க்குள் இருந்தால், ஆண்டுக்கு நிகர வருமானம், 2.5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. 2.5 - ஐந்து லட்சம் வரை, 10; ஐந்து - 10 லட்சம் வரை 20; அதற்கு மேல், 30 சதவிகிதம் வரியுடன், மூன்று சதவிகிதம் செஸ் சேர்த்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு, 60 வயதிற்கு மேல் ஆகியிருந்தால், மூன்று லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. அதன் பின் அதே விகிதங்களில் வரி உண்டு. 80 வயதைத் தாண்டி விட்டால், ஐந்து லட்சம் வரை வரி கிடையாது. கழிவுகள் போக நிகர வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்குள்
இருந்தால், கட்ட வேண்டிய வரியில், 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

ரிட்டர்ன் இறுதிநாள் : நாமாக வரியைக் கணக்கிட்டால் மட்டும் போதாது. உரிய காலத்தில் வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவும் ஜூலை, 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் வருமானத்திற்கு சரியாக வரியை கட்டி காலாகாலத்தில், 'ரிட்டர்னும்' தாக்கல் செய்தால் தான் நீங்கள் வரி ஏய்ப்பு குற்றத்திலிருந்து முழுமையாகத் தப்பிக்கலாம். நீங்கள் வருமானத்தை மறைத்தாலோ, வருமானத்திற்கு உரிய வரியைக் கட்டவில்லை என்றாலோ, காலாகாலத்தில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றாலோ, உங்களுக்கு வட்டி, அபராதம், சிறைத்தண்டனை போன்றவை உண்டு; குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வேறுபடும். உங்களுக்கு கணினியை பயன்படுத்துவதில் குறைந்தபட்ச வல்லமை இருந்தால், ஓரளவு வருமான வரி பற்றித் தெரிந்திருந்தால், நீங்களே வலைதளங்கள் மூலமாக, ரிட்டர்ன் தாக்கல் செய்து விடலாம். கணக்கில் சிக்கல் இருந்தாலோ, இந்த சட்டத்திட்டங்கள் உங்களுக்குப் புரியவில்லையென்றாலோ, ஒரு ஆடிட்டரின் உதவியை நாடுவது நல்லது.

வரித்துறைக்கு தகவல் : யாருக்கும் தெரியாமல், நான் வங்கியில் போட்டு வைத்திருக்கும் தொகை, எப்படி வருமான வரிக்காரர்களுக்கு தெரியப் போகிறது என அலட்சியமாக இருக்காதீர்கள். வங்கிகளிடமிருந்து தகவல்கள், நேரடியாக வருமான வரித்துறைக்குச் சென்று விடுகிறது.
அதுபோல, அவர்கள் வட்டியில் வரி பிடிக்கின்றனரோ இல்லையோ, இன்னாருக்கு இவ்வளவு வட்டி கொடுத்திருக்கிறோம் என்ற தகவல்களை தாக்கல் செய்து விடுகின்றனர். ஆகையால், வருமானத்தை மறைப்பது முடியாத காரியம். பின்னால், அது பெரும் பிரச்னையில் முடிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வணிகராகவோ, சிறு தொழிலதிபராகவோ இருந்தால், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். அதனால், உங்களுக்கு நன்மையே விளைகிறது.
நாளை நீங்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்காக, கடன் வேண்டும் என்று வங்கிகளை அணுகினால், 'கடந்த மூன்று ஆண்டு வருமான வரி ரிட்டர்ன்களின் நகல்களைக் கொடுங்கள்' என்று கேட்பர். அவை இல்லையென்றால், நீங்கள் சொல்லும் எதையும் நம்பமாட்டார்கள்; கடனை மறந்து விட வேண்டியது தான். சிறு தொழிலில் இருப்பவர்கள் விலாவரியாக கணக்கு புத்தகங்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர விற்பனை, இரண்டு கோடி ரூபாய்க்குள் இருந்தால், அவர்கள் விற்பனையில் எட்டு சதவீதம் மட்டுமே, அவர்களது வருமானமாக கணக்கிடப்படும். அதற்கான வரியை கட்டினால் போதுமானது.
உதாரணமாக, ஒரு பலசரக்கு கடை வைத்திருப்பவர் வருடத்திற்கு, 40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்தால், அவருடைய வருமானம், 3.20 லட்சம் ரூபாயாக கணக்கிடப்படும். அதற்கு, தள்ளுபடியெல்லாம் போக, அவர் 2,060 ரூபாய் வரி கட்டினால் போதுமானது; 35 லிட்டர் பெட்ரோலின் விலை அது. அதற்கு பதில் உங்களுக்கு கிடைப்பது, ஆண்டு முழுவதும் நிம்மதி; பயமற்ற வாழ்க்கை.

வரி செலுத்தாத பட்சத்தில்... : வருமான வரி செலுத்தாவிட்டால், உரிய காலத்தில் வரமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால், சட்டத்தின் தண்டனை போக, வேறு சில சிக்கல்களும் வரும். பிற்காலத்தில், வீடு வாங்கும் போது, சொகுசுக் கார் வாங்கும் போது, 'எப்படி உனக்கு இவ்வளவு பணம் வந்தது?' என, வருமானவரித் துறையினர் கேள்வி எழுப்புவர். அப்போது, 'திருதிரு'வென்று முழிக்க வேண்டும். ஏற்கனவே, செலுத்தாமல் விட்ட வரியை விட, பல மடங்கு வட்டியும், அபராதமுமாக செலுத்த வேண்டி இருக்கும். இந்தாண்டு முதல், உங்கள் பான் அட்டையும், ஆதார் அட்டையும் இணைக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதை எளிதாக செய்யலாம். அப்படி செய்தால், நீங்கள் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்தவுடன், ஒன் டைம் பாஸ்வேர்டு உங்கள் அலைபேசிக்கு வரும். அதை பதிவிட்டால், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் வேலை முடிந்து விடும். பிறகு அடுத்தாண்டு வரை, கவலைப்பட வேண்டாம்.

சொத்தை விற்க போகிறீர்களா? : பெரிய சொத்தை விற்கப் போகிறீர்களா, வாங்கப் போகிறீர்களா; சொகுசுக் கார் வாங்கப் போகிறீர்களா... அவசியம் ஒரு ஆடிட்டரை கலந்தாலோசியுங்கள். அவர் வழிகாட்டுதல் படி நடந்தால், பின்னால் பிரச்னை இருக்காது. முதலில் பார்க்கும் போது, வருமான வரி, பிடித்தம், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல், ஆதாரை இணைப்பது பிரமிப்பாக இருக்கும்; ஆனால் எளிதாக செய்யலாம். உலக நாடுகளில், நம் நாட்டில் தான் வருமான வரி மிக குறைவாக இருக்கிறது. அதிகபட்ச வரி, 30 சதவீதம் தான். அதுவும் உங்கள் ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாயைக் கடந்த பிறகு தான்! 1 ரூபாய்க்கு 30 காசை, நீங்கள் அரசிற்கு வரியாக செலுத்தி விட்டால், மீதமிருக்கும் 70 காசிற்கு நீங்கள் தான் ஏகபோக சக்கரவர்த்தி. அந்த 30 காசிலும் வரி ஏய்ப்பு செய்ய நினைத்தால், உங்கள் மன நிம்மதி போய் விடும்.

ஆடிட்டர் ஸ்ரீதர்
மதுரை.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஆக-201718:00:48 IST Report Abuse
Natarajan Ramanathan அதெல்லாம் சரிதான். ஆனால் பெரும்பாலான ஆடிட்டர்கள் தாங்கள் வாங்கும் பீஸுக்கு முழுமையாக வரி கட்டுவதில்லை. கேஷாக வாங்குவதால் அவர்களே வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sriprasan - Madurai,இந்தியா
02-ஆக-201716:42:49 IST Report Abuse
sriprasan Great Sir. But i think it is only 5% tax is charged if the income is upto Rs.5 lakhs. We also feel happy when there is a contribution from our side also for the growth of the Nation.
Rate this:
Share this comment
Cancel
Rsramani Ramani - chennai,இந்தியா
02-ஆக-201708:00:13 IST Report Abuse
Rsramani Ramani மிக தெளிவான பயனுள்ள கட்டுரை. நன்றி திரு ஸ்ரீதர் அவர்களே. தொடர்ந்து இது போன்ற மக்களுக்கு பயனுள்ள கட்டுரைகளை எழுதவும். வாழ்க உமது பணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X