"நீட்" தேர்வு அவசியம் தேவை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

"நீட்" தேர்வு அவசியம் தேவை

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (1)
Advertisement
"நீட்" தேர்வு அவசியம் தேவை

நாடு முழுவதும், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து, அதன் அடிப்படையில் நுழைவுத் தேர்வை நடத்தி, முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில், முட்டை போடும் கோழிகளை உருவாக்குவது போல, அதிக மதிப்பெண் மட்டுமே எடுக்க தயார்படுத்தும், 'கோழிப்பண்ணை' பள்ளிகளை நடத்தி, கொழுத்த லாபம் பார்க்கும் கல்வி வியாபாரிகள், இதற்கு கொதித்தெழுந்துள்ளனர்.
'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும்' என, பலரை துாண்டி விட்டு, பல வழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்வியை விற்று, கொழுத்த லாபம் பார்த்து வரும், அந்த கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே குரல் கொடுக்கின்றன. நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படுவது தொடருமேயானால், தங்கள் வியாபாரம் பாதிக்கும் என, கல்வி வியாபாரிகள் குரல் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகளும் போராடுவதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும், போராடும் அனைவரும் சொல்லி வரும் ஒரு, 'கதை' - 'தமிழர் பாதிக்கப்படுவர்; தமிழர் உரிமை போய் விடும்; கிராமப்புற மாணவர்கள் பாதிப்பிற்கு ஆளாவர்' என்பது தான். ஆனால், இந்த கருத்தை, புள்ளி விபரங்களுடன் எந்த கட்சியினரும் கூறவில்லை; யாரும் கேட்கவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ, சில மாணவர்களும், இவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

தவறாக பிரசாரம் : உண்மை என்னவெனில், நீட் தேர்வு முறையில், மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுமேயானால், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் படிக்கும் நிலை ஏற்படும்.
மேலும், இந்த விவகாரத்தில் கட்சியினர், 'சி.பி.எஸ்.இ.,யில் படித்தவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் மருத்துவ இடங்களை பிடித்து விடுவர்; தமிழக மாணவர்கள் பாதித்து விடுவர்' என, தொடர்ந்து தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ., மாணவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தானே... அவர்கள் வேறு தேசத்தை சேர்ந்தவர்கள் இல்லையே?
தமிழகத்தின் இப்போதைய, சமச்சீர் பாடத்திட்ட கல்வி முறையை குறை சொல்லும் இவர்கள் தான், இந்த கல்வி முறை வேண்டும் என, 2011ல் போராடியவர்கள். சுப்ரீம் கோர்ட் வரை சென்று இந்த கல்வி முறையை அமல்படுத்தியவர்கள். சமச்சீர் கல்வி முறையை, தி.மு.க, அரசு அமல்படுத்தியது. அதன்பின், 2011ல் முதல்வராக பதவியேற்ற ஜெ., 'இந்த பாடத் திட்டம், தமிழக மாணவர்களை எந்த விதத்திலும் முன்னேற்றாது; எந்த போட்டித் தேர்விலும் தமிழக மாணவர்கள், வெற்றி பெரும் நிலை அமையாது' என கருதி, சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச கல்வி முறைகளுக்கு ஒப்பாக, தமிழக பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்யலாம் என கருதி, அதற்கான பணிகளை துவக்கினார். அதை அறிந்து தான், இப்போது, நீட் தேர்வுக்கு எதிராக குதிக்கும் அத்தனை கட்சிகளும், அமைப்புகளும், 'சமச்சீர் கல்வி முறையை மாற்றக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் வரை சென்று, அந்த கல்வி முறையை தொடரச் செய்தனர்.
இவர்களின் செயல், சிரிப்பை தான் வரவழைக்கிறது. இவர்கள் எப்பவாவது கூறும் புள்ளி விபரங்களிலும் உண்மையில்லை.கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் நிரப்பப்பட்ட, 25 ஆயிரம் இடங்களில், அரசு பள்ளியில் படித்து, மருத்துவம் படிக்க இடம் பெற்றவர்கள், 25 பேர் மட்டும் தான்.மீண்டும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி இடம் என்ற நிலை வருமேயானால், ஒரு ஏழை கூட மருத்துவம் படிக்க முடியாது. பல லட்சங்கள் செலவு செய்து, 'கோழிப்பண்ணை' பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்தவர்கள் மட்டுமே, மருத்துவம் படிக்கும் நிலை ஏற்படும்.
எந்த ஒரு ஏழையும், எந்த ஒரு அரசுப் பள்ளி மாணவனும், இதனால், எந்த பலனும் அடையப் போவது இல்லை.எனவே, நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்படி நடைபெற்றால் மட்டுமே, ஏழை மாணவர்களும், அரசுப் பள்ளியில் படிப்பவர்களும், மருத்துவர்கள் ஆக முடியும்.

50 சதவீத இடங்கள் : இந்த ஆண்டு வேண்டுமானால், குறைந்த எண்ணிக்கையில், மருத்துவ இடத்திற்கு, அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம். ஆனால், நீட் தேர்வு முறை தொடர்ந்தால், ஏழைகள், அரசு பள்ளியில் படிப்பவர்கள், மருத்துவர் ஆவது ஆண்டுக்காண்டு அதிகரிப்பது நிச்சயம். ஒரு வேளை, வேறு வழியின்றி, தமிழகத்திற்கு, நீட் தேர்வு முறையிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிக்குமானால், அரசு பள்ளி மாணவர்களும், ஏழைகளும், மருத்துவம் படிக்க ஆவன செய்ய வேண்டும்.

எப்படி எனில் -
 தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களில், 50 சதவீத இடங்களை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு இருக்கட்டும்
 அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 50 சதவீதம் இடம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சி.பி.எஸ்.இ., மற்றும் இதர கல்வி முறை பள்ளிகளுக்கு, விகிதாச்சார முறையில் இடங்கள் ஒதுக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்வி இடம் என வந்தால், எந்த ஒரு ஏழைக்கும், அரசு பள்ளி மாணவருக்கும் பிரயோஜனம் இல்லை.
'கோழிப்பண்ணை' பள்ளிகளை நடத்தும் கல்வி வியாபாரிகளுக்கும், கல்வி முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும்!
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுடன், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியாது என்றால், தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் எப்படி போட்டி போட்டு, வெற்றி பெற முடியும்?
அரசுப் பள்ளியில் படிப்பவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற வேண்டுமென்றால், நீட் தேர்வு அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவத்தில் தனி ஒதுக்கீடு வழங்குவது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும்.

பா.சு. மணிவண்ணன்
வழக்கறிஞர்
இ - மெயில்: basuadvocate@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
13-ஆக-201717:57:21 IST Report Abuse
Rajarajan அரசியல்வாதிகள் என்றால், போராட்டத்திற்கு எதாவது ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது விதி. இது இந்த நீட் தேர்விற்கும் பொருந்தும். ஆனால் அடிப்படையில், மத்திய அரசின் பொதுவான பாடத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு உண்மையில் தெரியவில்லை (தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், மருத்துவம் போன்றவற்றில் நமது அறையல்வாதிகளில் 99 % பேர் பூஜ்யம் தான்). பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டபின்பு, அதை செயல்படுத்த, தற்போதைய அரசு ஆசிரியருக்கு குறுகிய காலத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். (தனியார் ஆசிரியர்கள் விரைவில் கற்றுகொள்ளுவர், ஏனெனில் அவர்கள் நிலை அப்படி) ஆனால் அரசு ஆசிரியர்கள், தங்களது சொந்த தொழிலை பார்த்துக்கொண்டே, கற்பித்தலை பகுதி நேர தொழிலாகவும், பள்ளியை ஓய்வெடுக்கும் இடமாகவும், தங்களது எதிர்காலத்திற்கு ஓய்வூதியம் பெரும் வாய்ப்பாகவும் பயன்படுத்திவிட்டனர். எனவே, புதிய பாடத்திட்டம் வந்தபின், இவர்களின் வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிடும் (விதிவிலக்குகள் மன்னிக்கவும்). என்னதான் மதிப்பெண்களை வாரி கொடுத்தாலும், செயல்முறை திட்டமின்றி, நுழைவு தேர்வுகளில் மாணவர்கள் தோல்வியை தழுவவேண்டி இருக்கும். இது சமுதாயத்தில் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே மற்றும் பொதுமக்களிடம் மிகப்பெரிய தாக்குதலை கொடுக்கும். மக்களிடையே புரட்சி ஏற்படகூட வாய்ப்புண்டு. அரசு ஆசிரியர் மற்றும் இவர்களுக்கு பரிந்துபேசிய அரசியல்வாதிகளின் முகமூடி கிழியும். மிகப்பெரிய அளவில், அரசு ஆசிரியரின் தகுதி கடைமட்டத்தில் இருப்பதை வெட்டவெளிச்சம் போட்டு காண்பிக்கும். இது அப்போதைய தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும். அரசு ஊழியரின் தகுதியை வளர்க்கச்சொல்லி கண்டித்தால், அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொள்வர். மாணவரை கண்டித்தால், ஆசிரியர் கற்பித்தலில் தரம் இல்லை, அதனால் தானே அவர்களது வாரிசுகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில்லை என்ற கண்டனம் எழும். இந்த கண்டனத்தில் மற்ற அரசு ஊழியரும் / MLA / MP / அனைத்து அமைச்சர்களும் மாட்டிக்கொள்வர். தகுதி குறைந்த மற்றும் சோம்பேறி ஆசிரியரை வேலைநீக்கம் செய்யவும் முடியாது, அவர்களை தட்டிக்கேட்கவும் முடியாது. இதை எல்லாம் முன்பே நினைத்துதான், தமிழக அரசியல்வாதிகள், மிகவும் நல்லவர்கள் போல், நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோருகின்றனர். அப்படியே விலக்கு அளித்தாலும், அது தற்காலிகம் தான். மீண்டும், மேலேசொன்ன பூதம் தனது வேலையே காட்டவே செய்யும். காலத்திற்கேற்ற கல்வியில் மாற்றம் / தரம் / கற்பிக்கும் முறை ஆகியவற்றை மாற்றி தருவது அரசின் பொறுப்பு. அதேபோல், அரசு ஆசிரியரும், தங்களது தரத்தை / கற்பிக்கும் முறையை காலத்திற்கேற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்வதும் அவர்களின் பொறுப்பு. அரசியல்வாதிகளும் / அரசு ஊழியரும் இருக்கும்வரை, தமிழகம் (ஒட்டுமொத்த இந்தியாவும்) உருப்பட போவதில்லை. (விதிவிலக்குகள் மீண்டும் மன்னிக்கவும்). இதற்க்கு ஒரே தீர்வு, MLA / MP / அமைச்சர் / அரசு ஊழியர் அனைவரும் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளியில் சேர்க்க செய்வதே. அப்போது இவர்கள் தப்பிப்பது என்பது இயலாத காரியம். அப்போது அனைத்தும் தானாகவே நல்லபடி நடக்கும். அரசியல்வாதிகள் எத்தனை நாள் தான் நீலிக்கண்ணீர் வடிக்க முடியும் ?? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான் இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X