பழமை, புதுமை இணைந்த பாடத்திட்டம்:உருவாக்க ஆசிரியர், கல்வியாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழமை, புதுமை இணைந்த பாடத்திட்டம்:உருவாக்க ஆசிரியர், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை:'நம்முடைய மரபையும், பழமையையும், புதுமையையும் இணைத்து மொழிப்பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்' என, கோவையில் நடந்த புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்த கருத்தறியும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்து, மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. காளப்பட்டி டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட, எட்டு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் என, 200 பேர் பங்கேற்றனர்.
என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி செயலர்தவமணி தேவி பழனிசாமி பேசுகையில், ''இங்குள்ள கல்வி முறைக்கும், மேல்நாட்டு கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தையும் பள்ளிகளால் செய்ய முடியாது. பெற்றோரும் மாணவர் படிப்பில் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த துறையில் வேலைசெய்தால், இந்தியா தலைசிறந்த நாடாக உருவாகும்,'' என்றார்.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், பாடத்திட்டக் குழு தலைவருமான அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:தனித்துவம் வாய்ந்த பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதே, எங்கள் குழுவின் நோக்கம். அதற்கு சில முக்கியமான குறிக்கோள்கள் வேண்டும். குறிக்கோள் அமைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை எப்படி செயல்படுத்துவதென சிந்திக்க வேண்டும். தற்போதுள்ள பாடத்திட்டம் மாற வேண்டும் என ஆசிரியர்கள் நினைக்கின்றனர். அது, அடிப்படையில் முழுவதுமாக மாற வேண்டும்.எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு மாற்றங்களுக்கு ஈடுதரும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். மாற்றங்கள் என்பது பாடத்திட்ட மாற்றம் மட்டும் அல்ல; ஆசிரியர்களுடைய ஈடுபாடு, பங்கேற்பு எந்த அளவுக்கு இருக்க வேண்டும்; கட்டமைப்பு வசதிகள் எந்தளவு இருக்க வேண்டும்; முதலீடு என்னவாக இருக்கும் என்பன, போன்ற பல்வேறு கருத்துக்களை இணைத்து, அறிக்கை தயாரிக்க வேண்டும். நாங்கள் கூடுமானவரை வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இவ்வாறு, அனந்தகிருஷ்ணன் பேசினார்.
கணித பேராசிரியர் ராமானுஜம் பேசுகையில், ''அடுத்த, 10, 20 ஆண்டுகளில் உலகமே மாறப் போகிறது. அதை எதிர்கொள்ள அறிவியல் கல்வி தேவைப்படுகிறது. கணிதம், அறிவியல் குறித்த கருத்துக்களில் ஆழம் தேவைப்படுகிறது. அறிவியல்தான் தொழில்நுட்பத்தின் அடிப்படை,'' என்றார்.
தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி பேசுகையில்,''முழுமையான மனிதனை உருவாக்குவதுதான் கல்வி. புலமை சார்ந்த விழுமியங்களும், வாழ்வியல் நெறிகளும் கொண்ட பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். இனிமேல் மாணவர்கள் கையாளப்போகும் அறிவுக் கருவிகளுக்கு துணையாக நம்முடைய மரபையும், பழமையையும், இனிமேல் வரும் புதுமையையும் இணைத்து மொழிப்பாடங்கள் உருவாக்க வேண்டும்,'' என்றார்.தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, எஸ்.எஸ்.என்., கல்வி நிறுவனங்களின் இயக்குனர் கலா விஜயகுமார், பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர்கள் பொன்குமார் மற்றும் குமார், கோவை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை