பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

பேச்சு, பேட்டி, அறிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
   பேச்சு, பேட்டி, அறிக்கை

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான தமீமுன் அன்சாரி பேட்டி: அ.தி.மு.க.,வின் தோழமைக் கட்சியின் பொதுச் செயலராக நான் இருக்கிறேன். எனவே, அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையில் தலையிட விரும்பவில்லை. எனினும், அ.தி.மு.க.,வின் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து, வலிமையான கட்சியாகத் திகழ வேண்டும் என்பதே, என் விருப்பம். திராவிடக் கட்சிகள் தான், தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும்; அதற்கு, அக்கட்சிகள் பலமாக இருக்க வேண்டும்.


'ஏதோ ஆய்வு நடத்தி இருக்கீங்க போல தெரியுது... வெளிப்படையா சொன்னா தான் புரியும்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பேச்சாளர்களில் ஒருவரான, பழ.கருப்பையா பேட்டி: இன்றைய அரசியலில் உள்ள இளைஞர்கள், புதியவர்கள் எல்லாம், கட்சியில் சேர்ந்த மறுநாளே, பொதுச் செயலராக வேண்டும் என, நினைக்கின்றனர். அதனால், வரிசையில் நின்று மேலே போக வேண்டியிருக்கும் கட்சிகளைத் தவிர்க்கின்றனர். எந்தக் கட்சி பலவீனமான தலைமையைப் பெற்றிருக்கிறதோ, அங்கே போவோம் என, நினைக்கின்றனர்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேட்டி: நான் மேயராக இருந்தபோது, என் அறக்கட்டளையின் கல்விப் பணியில் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது, என் முழு கவனமும், அறக்கட்டளை பணியில் தான் இருக்கிறது. என்னை, ஓர் அரசியல்வாதியாக அல்லாமல், சமூக அக்கறையாளராக, சமூக மாற்றத்திற்கான ஒரு சிந்தனையாளராகப் பாருங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், என் பயணம் தொடரும்.


'அடிக்க அடிக்க, அம்மியும் இடம் நகரும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அ.தி.மு.க., லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி: அ.தி.மு.க.,வுக்கும், தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் எப்போதும், பூஜ்ஜியம் தான். அவரை கட்சியில் நீக்கியது, சரியான முடிவு தான். அ.தி.மு.க., என்றைக்கும், ஒரே அணி தான். இதில், மாற்றுக் கருத்து கிடையாது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, துணை பொதுச்செயலர் மற்றும் பொதுச்செயலர் பதவி, இதுவரை காலியாகவே உள்ளது.



'இந்த, 'வளைந்து கொடுத்தல்' பண்பு, நீங்கள் மனதில் எண்ணியுள்ள ஒருவரோ, இருவரோ அல்லாமல், எல்லாருக்கும் பொருந்துமா... உதாரணமாக, உங்க கட்சியில, புதுசா சேர்ந்திருக்குற அடிமட்ட தொண்டன், ஒரு கட்சி துவக்குறார்ன்னு வச்சிக்கிங்க... உங்களுக்கு சம்மதமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:'ஒருவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அவர் அறப்பணிகள் செய்திருக்க வேண்டும்; போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்; சிறை சென்றிருக்க வேண்டும்' என்ற எந்த வரையறையும் கிடையாது. யாரும், எந்த வயதிலும் பொது வாழ்க்கையில் ஈடுபடலாம். இது, அனைவருக்குமான உரிமை. 'இவர்கள் இவ்வளவு காலம் எங்கே போயினர்' என, கேள்வி எழுப்புவதோ, 'இவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது' என, மறுதலிப்பதோ கூடாது. இது, ஜனநாயக மரபு அல்ல.

அ.தி.மு.க., அம்மா அணி, எம்.எல்.ஏ., இன்பதுரை பேட்டி: திருநாவுக்கரசருக்கு, அ.தி.மு.க.,வைப் பற்றிப் பேச, எந்த உரிமையும் இல்லை. எம்.ஜி.ஆர்., காலத்தில், நெடிய கோபுரமாக இருந்து, இன்று குறுகிப் போய்விட்டவர் திருநாவுக்கரசர். முதலில், அ.தி.மு.க., பின், சொந்தக் கட்சி, அப்புறம், பா.ஜ., இப்போது, காங்., என அவர், ஒரு அரசியல் சுற்றுலாப் பயணியாக மாறிவிட்டார். எனவே, அவரது அழைப்பை, எந்த அ.தி.மு.க., தொண்டனும் ஏற்க மாட்டான்.


த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரம், பெரிதாக நீடிக்கிறது. அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, மக்களுக்கான பணிகள் முடங்கி போயுள்ளது. இதை, மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். இத்தகைய சூழலில், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், உட்கட்சியின் கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆளும் ஆட்சியும், கட்சியும் முன்வர வேண்டும்.


'சட்ட ஓட்டைகளைச் சரி செய்தால் தான், விதிமீறுவோரை தண்டிக்க முடியும்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில், ௯௪ குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒன்பது பேரை விடுதலை செய்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தக் கொடுமைக்கு காரணமானோர் மீது, எந்த வகையிலும் இரக்கம் காட்ட தேவையில்லை. இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது, தமிழக அரசின் கடமை.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேச்சு: ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., அணிகள் ஓட்டளித்துள்ளன. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவர் மீது பல வழக்குகள் கத்தி போல் தொங்கினாலும், ஆதரவு அளித்திருக்க மாட்டார்.


தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: எங்கள் அரசு, ஸ்திரத்தன்மையோடு தான் செயல்படுகிறது. எங்கள் அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவர். அந்தப் பரிதாப நிலை, ஸ்டாலினுக்கும் ஏற்படும்.



'நீங்களோ, கட்சியின் மொத்த அதிகாரமும் உங்களுக்கு தான் என்பது போல் பேசிட்டிருக்கீங்க... உங்க கட்சிக்காரங்களோ, உங்களை கட்சியை விட்டே நீக்க திட்டம் போட்டுட்டு இருக்காங்க... கொஞ்சம் முதுகு பக்கம் திரும்பிப் பாருங்க மேடம்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிக்கை:ஒடுக்கப்பட்ட சமூகத்தினரான தலித்துகளுக்கும், ஏழைகளுக்கும் எதிராக, பா.ஜ., மற்றும் நரேந்திர மோடி அரசு, பாரபட்சம் காட்டுகிறது. அவர்களின் துன்பத்தைப் போக்க, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பின்தங்கியவர்கள், முஸ்லிம்கள் மீதான ஆட்சியாளர்களின் அணுகுமுறை, சர்வாதிகாரம் மற்றும் ஒடுக்குமுறை சார்ந்ததாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்த நாடே கவலைஅடைந்துள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.