திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மணல் லாரிகளின் ஆவண சரிபார்ப்பு முகாமில், ஆறு நாட்களில், 2,600 லாரிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவதால், முன்பதிவுக்கு வசதியாக, அரசு மணல் இணையம் <அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, லாரி உரிமையாளர்கள், முன்பதிவு செய்து மணல் எடுத்து வந்தனர். இதற்கிடையே, கார், டூ வீலர் பதிவு எண்ணை பயன்படுத்தி, முறைகேடாக முன்பதிவு செய்து மணல் எடுப்பது தெரிந்தது. இதை தடுக்கும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த வாகன விவரங்களை சரிபார்க்க திட்டமிடப்பட்டது.அதன்படி, மணல் லாரிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் முகாம் திருப்பூரில், கடந்த, 7ல் துவங்கியது. தினமும், நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்கள் வந்து, ஆவணங்களை காண்பித்து பதிவு செய்தனர். வாகன பதிவு எண், வாகன உரிமையாளர் விவரம் உள்பட, 14 வகையான விவரங்களுடன், ஆவண சரிபார்ப்பு நடந்தது.கடந்த ஆறு நாட்களாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இம்முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது. முகாமில், மாவட்டத்தை சேர்ந்த, 2,600 லாரிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. லாரிகளின் விவரம் அனைத்தும், பொதுப்பணித்துறையில் மணல் இணையத்தில் இணைக்கப்பட உள்ளது. மணல் எடுக்க முன்பதிவு செய்யும் போது, லாரியின் பதிவு எண்ணை "டைப்' செய்ததும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் தெரியவரும். இதன்மூலம், முறைகேடுகளும் தடுக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், "வாகனத்தின் பதிவு எண்ணுடன், உரிமையாளர் உள்ளிட்ட அனைத்து விவரமும் பதியப்பட்டுள்ளது. கடந்த, ஆறு நாட்களில், 2,600 லாரிகளின் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் "சேஸ்' எண், "இன்ஜின்' எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. ஆவண சரிபார்ப்பில் பங்கேற்ற லாரிகள், மணல் எடுக்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும்,' என்றனர்.
********
278 பயனாளிகளுக்குரூ.38.44 லட்சத்தில் நலஉதவிதிருப்பூர் · ஆக. 13-தமிழக அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, செங்கப்பள்ளி வஞ்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி வரவேற்றார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்ளிட்டோர், பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறை சார்பில், 278 பயனாளிகளுக்கு, 38.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊத்துக்குளி தாலுகா பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும், பொதுமக்கள் மனு கொடுத்தனர். சப் கலெக்டர் ஷ்ரவன் குமார், தாசில்தார் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போலி ஊழியர் "உலா' மின் வாரியம் எச்சரிக்கைதிருப்பூர் · ஆக. 13-திருப்பூரில், மின் வாரிய ஊழியர்கள் என்று கூறும் போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செடியழகன் கூறியதாவது: திருப்பூரில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணி புரியாத சிலர், தங்களுடைய வாகனங்களில் "டி.என்.இ.பி.,' என எழுதியுள்ளதோடு, பொதுமக்களை அணுகி, தாங்கள் மின் பகிர்மான வட்ட பகுதிகளில் பணிகள் செய்து வருவதாக, பொதுமக்களிடம் கூறி ஏமாற்றி வருகின்றனர்.மின் வாரிய அலுவலகங்களை தவிர, வேறு யாரிடமும், மின் வாரியம் தொடர்பான பணிகளுக்கு, எந்தவிதமான தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். அதனால், ஏற்படும் விபத்து உள்ளிட்ட விளைவுகளுக்கு, மின் வாரியம் பொறுப்பு ஏற்காது. இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.