3 மாதங்களில் 80, 'லே அவுட்' வரன்முறை : அரசின் திட்டம் பயன் அளிக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதங்களில் 80, 'லே அவுட்' வரன்முறை : அரசின் திட்டம் பயன் அளிக்குமா?

Added : ஆக 14, 2017
Advertisement

அங்கீகாரம் செய்யப்படாமல் உள்ள மனைப் பிரிவுகளையும், மனைகளையும் வரன்முறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான திட்டம், மே, 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், வரன்முறைக்கு விண்ணப்பிக்க, ஆறு மாதம் கெடு விதிக்கப்பட்டது. இதன்படி, நவ., 3 வரையே இத்திட்டத்தில், விண்ணப்பிக்க முடியும்.

4,500 மனுக்கள் : அங்கீகரிக்கப்படாமல் மொத்தம், 27 ஆயிரம் மனைப் பிரிவுகள், 13 லட்சம் மனைகள் உள்ளன. இவற்றில், மூன்று மாதங்களில், 80 மனைப்பிரிவுகள், 1,000க்கும் குறைவான மனைகள் மட்டுமே வரன்முறை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று மாதங்களில், 13 லட்சம் மனைகள், 27 ஆயிரம் மனைப்பிரிவுகள் வரன்முறை சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அங்கீகரிக்கப்படுவதற்காக இதுவரை, 4,500 மனுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. தேனி, அரியலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தர்மபுரி, நீலகிரி, பெரம்பலுார் மாவட்டங்களில் பதிவான விண்ணப்பங்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் உள்ளன.
இதே நிலை தொடர்ந்தால், அரசு விதித்த ஆறு மாதங்களுக்குள் வரன்முறை திட்டம் முழுமை பெறாது; முயற்சி தோல்வி அடையும் நிலை உருவாகி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
கட்டண குளறுபடி

நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:பொதுமக்கள் நேரடியாக, தங்கள் மனை குறித்த விபரங்களை அளித்து, வரன்முறைப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரும், வரன்முறை, வளர்ச்சி, அடிப்படை வசதி மற்றும் திறந்தவெளி ஒதுக்கீடு என, நான்கு வகைகளில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.இதற்கான வழிமுறைகளும் குழப்பமாக உள்ளன. மனைப்பிரிவு மேம்பாட்டாளர்களின் கருத்தை பெற்று, இத்திட்டத்தை எளிமைப்படுத்தினால் மட்டுமே, வரன்முறை திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்காரணங்களைத் தாண்டி, மக்களிடம் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே முதல் காரணம் என, பதிவாளர்கள் கூறுகின்றனர். 'தாங்கள் வாங்கிய நிலமோ, மனையோ,
எந்த வில்லங்கமும் இல்லாமல் உள்ளதா; ஆக்கிரமிப்போ, மூன்றாம் நபர் விற்பனைக்கு உள்ளாகாமலோ இருக்கிறதா என்பதைக் கூட அறிந்து கொள்ள, மக்களால் இயலவில்லை.
'எனவே, மக்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்கவும், இலக்கை எட்டவும், விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகள் எடுத்தால் தான், இத்திட்டத்தை சிறப்பான முறையில், அரசால் நிறைவேற்ற முடியும்' என்று அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை