தோற்று விட்டோம்; ஜெயிப்போமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தோற்று விட்டோம்; ஜெயிப்போமா?

Added : ஆக 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தோற்று விட்டோம்; ஜெயிப்போமா?

இ ன்று சுதந்திர தினவிழாவை கொண்டாடப் போகிறோம். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கும். தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவர். எல்லாருக்கும் இனிப்புகள் வழங்கப்படும்.
தேசியக் கொடியை பெருமையோடு, நம் சட்டையில் குத்திக் கொள்வோம். 'டுவிட்டர், பேஸ்புக்' சமூக வலைதளங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்வோம். அந்த பகிர்வுகளின் கடைசி வரி மட்டும், ஒரே மாதிரியே முடியும். அது என்னவென்றால், 'இந்த தலைவர்களைப் போல இன்றைய அரசியல்வாதிகள் இல்லையே... நம் அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து, பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்களா...' என்பதாக தான் இருக்கும்.

காகித பொருட்கள் : சரி, அரசியல் தலைவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கும் நாம், நாட்டிற்காக என்ன செய்தோம்... இந்த முறையும், பேஸ்புக்கில் வாழ்த்துகளை பகிர்வதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறோமா? நாட்டிற்கு பயன் தரும் வகையில் என்ன செய்யலாம் என, யோசித்த போது, 'உள்நாட்டு தயாரிப்பான, காதி பொருட்களை பயன்படுத்துங்கள்' என, பிரதமர் மோடி, கூறியது நினைவுக்கு வந்தது. நம் வீட்டில் உள்ள, வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை துாக்கி எறிந்து, நம் நாட்டு தயாரிப்புகளுக்கு மாற வேண்டும் என்ற உறுதி பிறந்தது.
எந்தெந்த பொருட்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் என, ஆராய்வதற்காக, வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தேன்; தலை சுற்றியது. பல் துலக்க பயன்படுத்தும் துாரிகை, பற்பசை, சோப், ஷாம்ப், சலவை சோப், பாத்திரம் துலக்கும் சோப், ஜெல், கொசுவர்த்திச்சுருள், கைப்பை, அழகு சாதனப் பொருட்கள் என, பட்டியல் நீண்டு கொண்டே போனது.
கழிவறையை சுத்தம் செய்வதற்கு கூட, வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளை தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்ற உண்மை உரைத்தது. இந்திய நிறுவன தயாரிப்புகள் எவை என, இணையதளத்தில் தேடி, கிடைத்த பதிலை, பேப்பரில் குறித்துக் கொண்டேன். 'இனி, ஒவ்வொரு பொருளும் தீரும் போது, நம் இந்திய தயாரிப்பையே வாங்க வேண்டும்' என, உறுதி செய்து கொண்டேன்.வழக்கமாக, தேடல்களின் முடிவில் தான் விடைகள் கிடைக்கும். ஆனால், இந்த தேடல், மனதில் நிறைய கேள்விகளை தான் எழுப்பியது. ஏனென்றால், நம் நாட்டில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்றால், அங்கே முக்கால்வாசி பொருட்கள், பிற நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளாகவே இருக்கின்றன. ஒரு புறம், விலை உயர்ந்த, வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்தினால் தான் கவுரவம் என்ற மாயையை உருவாக்கியுள்ள பிராண்ட் பொருட்களின் ஆதிக்கம். மற்றொரு புறம், மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற, கேடு விளைவிக்கக் கூடிய சீனப் பொருட்களின் ஆதிக்கம். இவற்றின் நடுவே, நம் இந்திய தயாரிப்புகளுக்கான சந்தை சிக்கிக் கொண்டுள்ளது. அதனால், நம் நாட்டு தயாரிப்புகளின் எண்ணிக்கையை பல்பொருள் அங்காடியில் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்திய ரூபாய் மதிப்பு : சென்னை மெரினா கடற்கரையில் நடந்த, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இரண்டு நாட்கள், பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை நாம் புறக்கணித்ததால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சற்று உயர்ந்தது.
அப்படி என்றால், பிறவற்றிலும் நம் நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை உபயோகித்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்னும் உயர வாய்ப்புஇருக்கிறது அல்லவா!
பெட்ரோல், டீசல் இங்கே போதுமான அளவு கிடைக்கவில்லை; வெளியில் வாங்குகிறோம். ஆனால், கழிப்பறையை சுத்தம் செய்யும் கிளீனரை கூட அன்னிய நாட்டு நிறுவனத்திடம் இருந்து தான் வாங்க வேண்டுமா... பல ஆயிரம் பணம் போட்டு, துணி துவைக்கும் இயந்திரத்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறோம். அதில் பயன்படுத்தும் சோப் பொடியையாவது, நம் நாட்டு தயாரிப்பாக பயன்படுத்தக் கூடாதா?
நம் நாட்டில் அதிகமாக, பெண்களால் பயன்படுத்தப்படும், 'பேர்னஸ் கிரீம்' ஒன்று உள்ளது. அதை தயாரிக்கும் அன்னிய நாட்டு நிறுவனம், 'பன்றி கொழுப்பை உபயோகப்படுத்தி தான் அதை தயாரிக்கிறோம்' என, ஒப்புக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், நம் நாட்டின் பாரம்பரிய, ஆயுர்வேத முறைப்படி, ஒரு அன்னிய நாட்டு நிறுவனம், அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கிறது. அதை பயன்படுத்தினால், அழகு மெருகேறும்; இழந்த பொலிவை திரும்பப் பெறுவீர்கள் என, விளம்பரம் செய்கிறது. அந்த பொருளுக்கு, அவ்வளவு வரவேற்பு இல்லை. நம் பெருமையை, பாரம்பரியத்தை நாம் உணராமல் உள்ளோம் என்பதை தானே, இது காட்டுகிறது!வல்லரசு நாடான அமெரிக்கா, அங்கே பிழைக்கச் செல்லும் இந்தியர்களை, 'எங்கள் மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறீர்கள்' என கூறி, இந்தியர்களை வெளியேற்ற சட்டம் கொண்டு வருகிறது; இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால், அமெரிக்க நிறுவன தயாரிப்புகளை வெளியேற்றாமல், நம் வீட்டில் அவற்றிற்கு முக்கிய இடம், மரியாதை கொடுத்து வைத்திருக்கிறோமே! ஆங்கில மருத்துவத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், நம் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு கொடுக்கப்படுவதில்லையே!

பத்து ரூபாய் கட்டணம் : அரசு நடத்தும் சித்த மருத்துவமனைகளுக்கு சென்று பாருங்கள்; காற்றாடும். அந்த அளவுக்கு தான், நம் பாரம்பரிய மருத்துவத்திற்கு, நம்மிடம் மதிப்பிருக்கிறது.
சென்னையில் உள்ள, தலைமை சித்தா மருத்துவமனையில், பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துகளையும் இலவசமாக கொடுக்கின்றனர்.
இந்த வசதியை, நம் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏற்படுத்தி தரலாமே. ஊருக்கு பத்து, 'டாஸ்மாக்' மதுபான கடைகளை நடத்தும் அரசு, சித்த மருத்துவமனைகளை நடத்தலாமே!
ஆங்காங்கே சித்த மருத்துவமனைகள் இருக்கிறதே என, சப்பைக்கட்டு கட்டலாம். அங்கே போய் பாருங்கள்... நிலைமை எப்படி இருக்கிறது என்று!

சித்தர்கள் : போதிய மருத்துவர்கள் இல்லாமல், மருந்துகள் இல்லாமல், பெயருக்கு, சில மணி நேரங்கள் இயங்குகின்றன. நாம் தெய்வமாக வணங்கும் சித்தர்கள் நமக்கு அளித்த மருத்துவத்தை, நம் மாநிலத்திலாவது பின்பற்றுகிறோமா... தமிழர்கள் என்றும், இந்தியர்கள் என்றும் பெருமை கொள்கிறோம். எங்களின் பாரம்பரியம் சிறப்பானது என்கிறோம். அவற்றை பின்பற்றுகிறோமா... ஒதுக்கி வைத்து விட்டோமே! வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்குவது எப்படி என்பதை கூட, அமெரிக்கர் உருவாக்கிய, 'யூ டியூப்' இணையதளத்தை பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம். கழிப்பறை என, ஒதுக்கி விட முடியாது; அதற்கும் மேற்கத்திய பழக்கத்தை தான் பின்பற்றுகிறோம். இப்போதைய வீடுகள் பலவற்றில், பீடம் போன்ற அந்த கழிப்பறை தான் உள்ளது.
அதனால் பல நோய்கள் ஏற்படும் என்பதை அறிந்தும், வெளிநாட்டுக்காரன் பயன்படுத்துகிறான் என கருதி, வீட்டுக்கு, இரண்டு, மூன்று என, வைத்து அழகு பார்க்கிறோம்.
எப்போது ஆங்கில மொழி, அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளில் ஒலிக்க ஆரம்பித்ததோ, அப்போதே, தமிழனாக தோற்க ஆரம்பித்து விட்டோம். எப்போது, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்க்கையை மறந்து, வெளிநாட்டு தயாரிப்புகள் தான் உயர்ந்தவை என, முடிவெடுத்தோமோ அப்போதே, இந்தியனாக தோற்க ஆரம்பித்து விட்டோம்.
இனியாவது ஜெயிக்க வழியை பார்ப்போம்!

பா. சரண்யா பிரபா
சமூக ஆர்வலர்
இமெயில்: tamizhachilb@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை