புதுக்கவிதையில் நகைச்சுவை| Dinamalar

புதுக்கவிதையில் நகைச்சுவை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
புதுக்கவிதையில் நகைச்சுவை

வெளிப்படையான மொழியில் நேரடியாக அமைந்து, கேட்ட அல்லது வாசித்த உடனேயே அவையோரை, ஆர்வலர்களைச் சிரிக்க வைப்பது எளிய நகைச்சுவை (Humour); மாறாக, குறிப்புமொழியில் செறிவாக அமைந்து, புரிந்துகொள்ளும் திறம் வாய்ந்தவர்களே உணர்ந்து சிரிக்கத்தக்கதாக விளங்குவது அறிவார்ந்த நகைச்சுவை (Wit).ஒருமுறைக்கு இருமுறை நின்று நிதானமாகப் பொருள் உணர்ந்து படித்த பிறகே மெல்லிய புன்னகையை வரவழைப்பது அறிவார்ந்த நகைச்சுவையின் பண்பு. இவ்வகைக்கு ஆத்மாநாமின் 'தரிசனம்' என்ற கவிதை நல்லதோர் எடுத்துக்காட்டு.

“கடவுளைக் கண்டேன் எதையும் கேட்கவே தோன்றவில்லைஅவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி”
சற்றும்எதிர்பாராத வேளையில் - சூழலில்- கடவுளைக் காண நேர்ந்ததாம்! கடவுளைக்கண்ட பரபரப்பில் - பரவசத்தில்- அவரிடத்தில் வரமாக எதையும் கேட்கவே தோன்றவில்லையாம் கவிஞருக்கு! ஒருவேளை,'வேண்டத்தக்கது அறிவோய் நீ - வேண்ட முழுதும் தருவோய் நீ!' என்று நினைத்தும் அவர்கடவுளிடம் எதையும் கேட்காமல் இருந்திருக்கலாம். கடவுளோ
புன்னகைத்துப் போய்விட்டாராம்! நல்ல வாய்ப்பு தானாகத் தேடி வந்தும் அதை முறையாகக் கவிஞர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதை நினைக்கும் போது கடவுளுக்கு மட்டுமன்று, வாசகர்கள்ஆகிய நமக்கும் சிரிப்பு வருகின்றது!என்றாலும், கடவுளை தரிசனம் செய்ய முடிந்ததே, அதில் மனதினிலே கவிஞருக்கு ஒரு நிம்மதி கிடைத்ததாம்!

சொல் விளையாட்டு : 'நேயர் விருப்பம்' தொகுப்பில்' சித்திர மின்னல்கள்' என்னும் உட்பகுப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான்படைத்துள்ள புதுக்கவிதைகள் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் வாய்ந்தவை; அழகிய சொல் விளையாட்டாலும் அறிவார்ந்த நகைச்சுவைத் திறத்தாலும் படிப்பவர் இதழ்களில் சிரிப்பைத்தோற்றுவிக்க வல்லவை.'அரசுமாற்றம்' என்னும் தலைப்பில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் தாக்கம் குறித்து அப்துல் ரகுமான் தீட்டியுள்ள குறுங்கவிதை இது:
“பிள்ளைவேண்டும் என்று
பெண்கள்அரசு சுற்றியது
அக்காலம்
பிள்ளை வேண்டாம் என்று
அவர்களை 'அரசு' சுற்றுவது
இக்காலம்”
இங்கே 'அரசு' என்ற சொல்லை இருபொருள்படும்படி திறம்படக் கையாண்டுள்ளார் கவிக்கோ.
முதலில் வரும் 'அரசு', மரத்தைக் குறிப்பது; பெண்கள் அக் காலத்தில் பிள்ளை வரம்வேண்டி அரச மரத்தைச் சுற்றிவந்தனர். அடுத்து வரும் 'அரசு', அரசாங்கத்தை சுட்டுவது; அளவுக்குமேல்
பிள்ளைகளைப் பெற்று மக்கள் தொகையைப் பெருக்க வேண்டாம் என்று பெண்களை அரசாங்கம் சுற்றுவது இக்காலம்!

'ஒருநாமச் சண்டை!' : மனிதனை நெறிப்படுத்தவேண்டிய மதம், இன்று வெறி ஊட்டி, சமுதாயத்தில் போரும் பூசலும் விளைய காரணமாக விளங்குவது கண்கூடு. இதுகருதியே
வள்ளலாரும், 'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' எனப் பாடினார். 'ஒருநாமச் சண்டை' என்னும் கவிதையில் கவிஞர் வாலி, கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, வடகலை நாமமா, தென்கலை நாமமா? என்பதில் மனிதர்க்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு நீதி
மன்றம் வரைக்கும் சென்று வழக்காட பெற்றதைத் தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் நுண்ணிய முறையில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“வடகலையா? தென்கலையா? வாதியும் பிரதிவாதியும்வாய்தா மேலே வாய்தா வாங்க
வழக்கு வருஷக் கணக்காக…நெடுநாட்களாய்நெற்றியில் நாமமே இல்லாமல்
நின்றுகொண்டிருந்த கோயில்யானை… ஒருநாள்சங்கிலியை அறுத்துக்கொண்டு
சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடியே போயிற்று! ஊர்பேசியது:
மதம் பிடித்ததால்ஓடியது என்று. உண்மையில்மதம் பிடிக்காததால் தான் - ஓடியது யானை!”
அழகிய முரணும் தேர்ந்த சொல் விளையாட்டும் அறிவார்ந்த நகைச்சுவைத் திறமும் களிநடம் புரிந்துநிற்கும் கவிதை இது!.

நுண்ணிய நகைச்சுவைத் திறம் : நாட்டில் பிறருக்கு உபதேசம் செய்வதற்கு ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால், உப தேசத்தைக்கேட்டு, அதன்படி நடப்பதற்கோ பத்துப் பேர்கூடத் தேற மாட்டார்கள். 'ஊருக்கு தான் உபதேசம், எனக்கு அல்ல' என்பது தமிழ்நாட்டில் மக்கள் நாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி ஆகும்.

எஸ்.வைதீஸ்வரன் 'உபதேசம்' என்னும் தலைப்பில் படைத்து உள்ள புதுக்கவிதை:
“நீ புகை பிடிக்காதே என்று
என்தாத்தா தந்தைக்குச் சொன்னதை
என் மூலம் மகனும் தெரிந்து கொண்டான்.
இது நிஜம்.
(ஆனால்) நாங்கள் யாவரும்
விரும்பிக் குடிப்பது
மிக உயர்ந்த ரகம்.
என் பேரனே சாட்சி!”
'புகை உயிருக்குப் பகை; எனவே, புகைபிடிக்காதீர்கள்' என்ற உபதேசம் காலங்காலமாகப் பலராலும் செய்யப்பட்டு வருகின்றது; ஆனால் இந்த உபதேசத்தைக் கேட்டு யாரும் புகை பிடிக்கும் இந்த கொடியபழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. இந்த கசப்பான உண்மையினை அறிவார்ந்த நகைச்சுவைத் திறத்தோடு கவிதைப்பொருள் ஆக்கியுள்ளார் வைதீஸ்வரன். வயதான தாத்தா தொடங்கிப் பேரன்வரையிலான ஐந்து தலைமுறையினராலும் புகை பிடிக்கும் பழக்கம் கைவிடப்படாமல் பின்பற்றப்பட்டு வருவதைநுண்ணிய இக்கவிதை, நகைச்சுவை உணர்வுடன் புலப்படுத்தி இருக்கும் திறம் போற்றத்தக்கது.

அரசியல் சாடல் : இன்றைய அரசியல்வாதிகள் தெளிவானவர்கள்; விவரமானவர்கள்.
அவர்களது கவனம் எல்லாம் நாட்டை முன்னேற்றுவதில் இல்லை; கட்சியைவளர்ப்பதில் இல்லை; ஏழைகளைக் காப்பதிலும்இல்லை; வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரையில், ஏழைகள் எந்நாளும் ஏழைகளாகவே இருக்கவேண்டும்; தொண்டர்கள் காலமெல்லாம் தொண்டர்களாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்க்கை அமோகமாக இருக்கும்! ஆனால் வாயைத் திறந்தால் அவர்களிடம் இருந்து பிறக்கும் வார்த்தைகள் எல்லாம் - வாக்குறுதிகள் எல்லாம் - 'எங்கள் கட்சி உங்களுக்காகவே!' என்பது போன்ற தேனான வாக்குறுதிகள்தான்! இன்றைய அரசியல் வாதிகளின் இந்த இரட்டைவேடப் போக்கினைக் கவிஞர் தமிழன்பன் 'உங்களுக்காகவே' என்னும் கவிதையில் அறிவார்ந்த நகைச்சுவைத்திறம் விளங்கத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

அக்கவிதை:

“ஏழைகளே!
எங்கள் கட்சி
உங்களுக்காகவே
நீங்கள்
எமாற்றிவிடாதீர்கள்!
(இப்படியே இருங்கள்)”
அரசியல்வாதிகள் ஏழைகளைப் பார்த்து 'ஏழைகளே! நீங்கள் இப்படியே இருங்கள்' என்றால் என்ன பொருள்? 'நீங்கள் இப்படியே இருந்தால்தான் -எளிதில் ஏமாறுகிறவர்களாக இருந்தால் தான் - நாங்கள் எந்நாளும் இப்படி வசதியாக இருக்க முடியும்?”என்பதுதானே?

சமூக அவலங்கள் : இன்று பெரும்பாலான 'ரேஷன்' கடைகளில் வழங்கப் பெறும் உணவுப் பொருள்களில் அளவு சரியாக இருப்பதில்லை. தரமும் நன்றாக இருப்பதில்லை. 'எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்' என்ற அவல நிலையே இன்று நடைமுறை ஆகிவிட்டது.
கவிஞர் கந்தர்வன் 'ரேஷன்' என்னும் தலைப்பில் ஒரு புதுக்கவிதை படைத்துள்ளார். அதில் அறிவார்ந்த நகைச்சுவைத் திறத்தோடு கலப்படத்தின் கொடுமையைச் சித்தரித்துள்ளார்.

“ரேஷன்கடையில்அரிசி வாங்கிக்கல்லையும் நெல்லையும்பொறுக்க நினைத்து
அரிசியைப்பொறுக்கி முடித்தோம்”இங்ஙனம் இன்றைய புதுக்கவிஞர்கள் அறிவார்ந்த நகைச்சுவையின் வாயிலாக நாட்டு நடப்புகளையும் சமூக அவலங்களையும் இந்நுாற்றாண்டு மனிதனின் நடத்தையினையும் கலைநயத்துடனும் கூர்மையுடனும் சித்திரித்துக் காட்டியுள்ளனர்.

-முனைவர் இரா.மோகன்
எழுத்தாளர், மதுரை
94434 58286

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.