வாழ்வெனும் வானில் பறப்போம்!| Dinamalar

வாழ்வெனும் வானில் பறப்போம்!

Added : ஆக 23, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மனிதன், Man, ஆன்மிகம், Spirituality,சிறப்புரிமை , Privatization, பிறப்புரிமை, Birthright, ஆற்றல்,Energy, சூழ்நிலை,Situation, சுவாமி சின்மயானந்தர், Swami Chinmayananda, புத்துணர்வு , refresh , மகாபாரதம், Mahabharata , துரோணர், Dhroner,சிந்தனை,Thought, செயல் , Action, மாமனிதர்கள் ,Humanities, வரலாறு,History, வாழ்வு , Life,

மனிதனுக்கென்று ஓர் சிறப்பு உண்டு. எந்த சிகரத்தையும் எட்டும் ஆற்றலே அச்சிறப்பு. அது மனிதனின் சிறப்புரிமை மட்டுமல்ல; பிறப்புரிமையும் கூட. மனதின் வசப்படுவதால் 'மனிதன்' என்று பொருளல்ல. மனதை தன்வயப்படுத்தி, தன்செயல்களை தானே தீர்மானிக்கும் மகத்தான ஆற்றலின் உறைவிடம் என்பதால் மனிதன். ஆன்மிகம் முதல் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவை வரை இதுபொருந்தும்.
நம்முடைய ஆற்றல்களை அறிவதும், அதைத் திறமையாகக் கையாள்வதும் அதிநுட்பமான ஓர் கலை. மறைநுால் நெறிகளும், மாமனிதர்கள் வரலாறும் நல்ல புரிதலை நமக்குக் கொடுக்கும். இதை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது கடமை.
ஏணிப்படிகள்:

சூழ்நிலைகளின் அழுத்தத்தால் சோர்வதும், தன்னிலை இழந்து தடுமாறித் தாழ்வதும் தவிர்க்க முடியாத அனுபவப் பாடங்கள். ஏற நினைப்பவனுக்கு அவை ஏணிப்படிகள். நிலைகுலையாத நிதானம் நிச்சயம் அவசியம். வீழ்ந்த பின்னும் எழ மறுப்பதே பலவீனம். எழுந்துநில்! விழித்துப் பார்! நல்லோர் காட்டிய பாதையில் நட! என்று நம் உணர்வுகளுக்கு உரமிடுகின்றது மறையீறுகள்.
'நாமனைவரும் ஒன்றையே சாதிக்கப் பிறந்தவர்கள் அல்ல, நாமனைவரும் ஏதேனும் ஒன்றைச் சாதிக்கப் பிறந்தவர்கள்' என்பார் சுவாமி சின்மயானந்தர். ஆகவே, பிறரோடு நாம் செய்யும் ஒப்பீடுகளை ஓர் ஓரம் வைத்து விடுவோம். நம்முள் புகுந்து, நம்திறனை நன்கு ஆராய்வோம். புத்துணர்வோடு, நம் நம்பிக்கைகளுக்கு நல்வலிமை சேர்த்து களமிறங்குவோம். அகலமாக அல்ல, ஆழமாகக் கால்பதிப்போம். ஓரடி நடப்பதற்க்கு ஈரடி வெளிச்சம் போதுமல்லவா? ஒரே நாளில் ஏற்படும் புரட்சி அல்ல இது; வெகுநாளாக செய்ய வேண்டிய பயிற்சி. பயிற்சியில் அயர்ச்சியும், அலுத்தலும் கூடாது. உற்சாகமே உன்னத மந்திரம்.
'எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முக்தர்மனமிருக்கும் மோனத் தே-வித்தகமாய்க்
காதிவிளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தேதான்'
-என்னும் பட்டினத்தார் பாடல் எல்லாவிதப் பயிற்சிக்கும் பொருந்தும்.
தலைமேல் நீர்குடமேந்திய பெண் தன்தோழிகளுடன் கைகளை வீசி விளையாடி வந்தாலும், கவனமென்னவோ நீர்குடத்தின் மீதுதான் இருக்கும். மனதை ஒருங்குபடுத்தி லட்சியத்தில் மட்டுமே நிலைபெறச் செய்யும் அற்புதத் திறன் இது. இதைத்தான் சமஸ்கிருதத்தில் 'அப்யாஸம்' என்கின்றோம். 'அபி ஆஸம்' என்று பிரித்தல் வேண்டும். அதன்பொருள் 'அதிலேயே நிலைத்திருத்தல்' என்பதாகும்.
சிந்தனை, செயல் :

முதலில் நம் இலக்குகள் தற்காலிகமானவையா, நீடித்ததா அல்லது நிலையானதா என ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். அதற்குத் தக்கவாறு சிந்தனைகளை தரம்பிரித்து தக்க வைப்பதென்பது நிகரற்ற ஒழுக்கம். பின்பு அச்சிந்தனைகளை அறிவோடு பிணைத்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுதல் என்பது தனித் திறன்; இரண்டும் அவசியம். முன்சிந்தித்து, பின் செயல்படுதலையே 'எண்ணித் துணிக கருமம்' என்கிறார் வள்ளுவர். இடையீடற்ற முயற்சியே சிந்தனைக்கும், செயலுக்கும் நடுவே உள்ள இடைவெளியைக் குறைக்கும். இலக்கோடு நமக்கிருக்கும் தொலைவைத் தகர்க்கும். முயற்சி இல்லாத வெற்றுச் சிந்தனைகள் முதிர்ச்சி அடையாது சிலகாலம் கனவுகளாகத் தங்கும். பின் கனவைப் போலவே கலைந்தும் போய்விடும்.
பதஞ்சலி வழி :

முயற்சியானது பக்குவமடைந்து, பலனைக் கொடுக்க மூன்று விஷயங்களை முன்னிறுத்துகின்றார் பதஞ்சலி முனிவர். முதலாவதாக 'நீடித்த செயல்'. எப்பழமும் குறுகிய காலத்தில் பழுக்காது. பழுத்தாலும் சுவைக்காது. நிலைக்காது. எனவே முயற்சியானது நீண்டகாலம் செய்யப்பட வேண்டும்.இரண்டாவது 'நிரந்தரச் செயல்'. இடைவெளி இல்லாது, ஒவ்வொருநாளும் தொடர்ந்து முயல வேண்டும். சிலசமயம் செயலைத் துவங்கும் போது இருந்த கவர்ச்சி யும், ஈர்ப்பும் தொடராமல் போவதற்குக் காரணம் நிரந்தர முயற்சியின்மையே. மனமானது சோம்பலில் சுகம் காணும். அதைஅறிந்தும் அறியாது போலிருக்கும்.
மூன்றாவதாக 'அர்ப்பணித்த செயல்'. செயலை துாய்மையான உணர்வுடன் செய்தல். இயந்திரத்தனமாக, உடல் ஒன்றி மட்டும் ஒன்றைச் செய்தல் கூடாது. உள்ளம் ஒன்றி இதயப்பூர்வமாக செய்தல் வேண்டும். முன்னது வெறும் செயல். பின்னது உன்னத சேவை. அவ்வாறு செய்தால், செயலில் களைப்பேது? களிப்பல்லவா மிஞ்சும். உற்பத்தியிலும், உறவுகளிலும் திறன் மட்டும் போதாது. தரமும் வேண்டும். உள்ளம் ஒட்டாது செய்யப்படும் எச் செயலும் கோலமில்லாத வாசல். ஆண்டவன் இல்லாத ஆலயம்.
'பலன் கருதிச் செய்யாது, பக்தியுடன் செய். நீ எண்ணியதைக் காட்டிலும் வியக்கத்தகு பலனை அடைவாய்' என்கிறது கீதை. 'பலன்கருதிச் செயல் முனைவோர் கஞ்சர். பிறர் நலன் கருதிச் செயல் புரிவோர் தீரர்' வாழ்வின் வெற்றிக்கு மட்டுமல்ல, இறைநிலை முக்திக்கும் இதுவே திறவு கோல்.
பயிற்சியும், பழக்கமும் :

எதை அடைய விரும்புகின்றோமோ அதை முதலில் பயில வேண்டும். பயின்றதை பயிற்சிக்க வேண்டும். தொடந்து பயிற்சிக்க அதுவே பழக்கமாக மாறிவிடும். பழக்கம் நம் இயல்பாக ஒட்டி கொள்ளும். நல்லது மட்டுமல்ல, தீயதும். வெற்றியும் தோல்வியும் கூட இவ்வாறே நம்மை தொற்றிக் கொள்கிறது. நம்முயற்சியில் நமக்கு நட்பும், பகையும் நம் மனமே.
தனித்துவம் :

மகாபாரத்தில் துரோணர் எல்லோருக்கும் ஆசான். அனைவரும் அவரிடம் பயின்றனர். ஆனால் அர்ஜுனனுக்கு நிகராக எவரும் உயரவில்லை. பண்பிலும் கூட. அர்ஜுனன் பலரோடு சேர்ந்து பாடம் கற்றான். ஆனால் எல்லோரைப் போலவும் பயிற்சி செய்யவில்லை. அவன் பயிற்சி வேறுவிதமாக இருந்தது. பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பயிற்சி செய்யவில்லை. தனக்கென ஓர் தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டான். தன்னில் தான் சார்ந்து வில்லுக்கு விஜயன் ஆனான்.
துரோணர் ஒரு முறை தம் பணியாட்களை அழைத்து 'அர்ஜுனனுக்கு இருளில் உணவிடாதீர்கள்' எனக் கட்டளையிட்டார். ஆனால் அர்ஜுனன் உணவருந்திக் கொண்டிருந்த சமயம், காற்றில் தீப்பந்தங்கள் அணைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. அவ்விருளிலும் கையில் இருந்த உணவு கண்ணருகிலோ, காதருகிலோ செல்லாது, நேராக வாயருகில் செல்வது கண்டான். சிறுவிஷயம். அனைவருக்கும் பலமுறை நிகழ்ந்த விஷயம். ஆனால் அச்சம்பவம் அர்ஜுனனை வேறுவிதமாக சிந்திக்கத் துாண்டியது. எந்த ஒன்றை நாம் இடைவிடாது பயிற்சிக்கின்றோமோ அதுவே பழக்கமாகவும், இயல்பாகவும் மாறுவதாக அறிந்தான். அன்று முதல் இருளில் மட்டுமே பயிற்சி செய்தான். எவரும் எண்ணாதது. அதன்விளைவாக நின்ற இடத்தில் நின்றபடி எத்திசையிலும் அம்பெய்தும் ஆற்றல் பெற்றான். எப்புறத்தினின்று பகைவர் வந்தாலும் அறியும் ஆற்றலும், வீழ்த்தும் திறனும் பெற்றான். அர்ஜுனன் போல் ஒவ்வோர் துறையிலும், வெவ்வேறு பயிற்சிகளினால் சாதனை கண்டோர் பலருண்டு.
நீதி தவறாத முயற்சியுடன் கூடிய வெற்றியே நிலையானது; புகழுடையது. அவ்வெற்றியின் பாதை பயணித்தால் மட்டுமே விரியும். நீண்ட, நிரந்தர, அர்ப்பணித்த செயலால் முயற்சி முழு வடிவம் பெறும். இருளும்கூட ஒளிரும். பதற்றம் தணியும். பார்வை தெளிவடையும். அச்சம் நீங்கும். ஆண்மை பெருகும். துாய நிலை கைவசமாகும். இனி எந்த இருளிலும் இடரில்லை! துயரில்லை! வாழ்வெனும் அகன்ற வானில் மனம் விரிந்து பறப்போம்!
-சுவாமி சிவயோகானந்தா
சின்மயா மிஷன், மதுரை
94431 94012

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
23-ஆக-201712:26:27 IST Report Abuse
ganapati sb முயற்சி திருவினையாக்கும் அப்பியாசம் என்ற தொடர்ந்த பயிற்சி பலிதமாகும் என விளக்கும் சிறப்பான கட்டுரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை