உனக்கும் முதுமை வரும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

உனக்கும் முதுமை வரும்!

Updated : ஆக 26, 2017 | Added : ஆக 26, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 உனக்கும் முதுமை வரும்!

பெற்ற பிள்ளைகளே, தங்கள் பெற்றோரை துன்பப்படுத்துவது, புறக்கணிப்பது, முதியோர் இல்லங்களில் தள்ளி விடுவது போன்ற கொடுஞ்செயலை புரிகின்றனர்.மெழுகுவர்த்திகளாக உருகி, வாழ்நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளுக்காக, வாழ்க்கையை தியாகம் செய்த தீபங்களில் பலர், இன்று அனாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்கும் போது, இதயம் கனக்கிறது; நெஞ்சு வலிக்கிறது; கண்கள் கலங்குகின்றன;
'சொர்க்கம் வேறெங்குமில்லை; உன் தாயின் காலடியில் தான் இருக்கிறது' என்பது, நபிகள் நாயகத்தின் கூற்று.நாம் அழுதால் அழுது, சிரித்தால் சிரித்து, நாளெல்லாம் நம் கரங்களை பற்றி, நம்மோடு பயணிப்போர் பெற்றோர். நாம் உயர, உதிரம் சிந்துபவர்கள் அவர்கள். நாம் சிறகடிக்க, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் அவர்கள்.
ஆயிரம் கோவில்களை வலம் வருவதாலும், 1,000 முறை கங்கையில் குளிப்பதாலும் கிடைக்கும் புண்ணியம், ஒரு முறை பக்திப்பூர்வமாக பெற்றோரை வணங்குவதால் கிடைக்கும்.
மனிதர்கள் செய்ய வேண்டிய, 'பஞ்சம' வேள்விகளில் ஒன்று, 'பித்ருயக்ஞம்-' எனப்படும், முதுமையில் பெற்றோருக்கு பணிவிடை செய்து, பேணுதல். இதை, 'ஆன்ம ஒழுக்கம்' என, வள்ளலார் குறிப்பிடுகிறார்.நம் முன்னோர், கூட்டுக் குடும்பங்களாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தனர். பெற்றோரையும், பெரியோரையும், மதிப்புடனும், மரியாதையுடனும், தெய்வங்களாகவே வணங்கினர்.
அமைதியும், மன நிறைவும், மன நெகிழ்வும் நிலைத்து நீடித்திருக்க, ஒருவரையொருவர் அரவணைத்து அன்போடு வாழ்ந்தனர்; அது ஒரு இனிய பொற்காலம்.
இன்று காலம் மாறிவிட்டது. நகரங்களில் வசிக்கும் பல இளைய தலைமுறையினர் பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் தேடுவதிலேயே குறிக்கோளாக அலைந்து கொண்டிருக்கின்றனர். பணத்தின் மீது செலுத்தும் அக்கறையில், கொஞ்சம் கூட சொந்த பந்தங்கள் மீது செலுத்துவதில்லை.
கருவிலிருந்தே உருவாகும் உறவின் ஆழத்தையும், அருமையையும், இன்றைய இளைஞர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. தங்களை பேணி பாதுகாத்து, வளர்த்து ஆளாக்கி, வாழ் நாளெல்லாம் நாம் சந்தோஷமாக வாழ உழைத்த பெற்றோரை, வயோதிகம் வரும் போது ஒதுக்கி தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்...
பிள்ளைகளைப் பெற்றால் அவர்களை வளர்ப்பது பெற்றோரின் கடமை தான் எனக் கூறுபவர்கள், பெற்றோரை பாதுகாப்பதும் பிள்ளைகளின் கடமை தான் என்பதை உணர்வதில்லை. மூளை முடுக்கெல்லாம் முளைத்து கொண்டிருக்கும் முதியோர் இல்லங்களே இதற்கு சான்று.
பல பெற்றோரின் நிலைமை, இன்று கவலை தருவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களாலேயே அவர்கள் அவமரியாதைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. வயதான காலத்தில் பெற்றோரை பராமரித்து, அவர்களை அன்புடன் அரவணைக்கும் பிள்ளைகள் குறைந்து வருவது, அநாகரிகத்தின் உச்சகட்டம்.
பிற்காலத்தில் முதுமை அடையும் போது, இந்த நிலைமை, தங்களுக்கும் ஏற்படும் என்பதை, அத்தகையோர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பெற்றோரை பேணுதல் பேரறம். நம்மை மனதிலும், மார்பிலும், தோளிலும் சுமந்து, சுகம் கண்டவர்களை சுமையாக நினைப்பதும், பணத்தை பெரிதாக கருதி, லாப, நஷ்ட கணக்கு பார்த்து ஒதுக்குவதும் மஹா பாவம்.
ஒரு தாயின் அன்புக்கும், ஒரு தந்தையின் அரவணைப்புக்கும்,

ஈடு இணை உலகத்தில் ஏதுமில்லை.வயதான, மிகவும் முடியாத நிலையில் இருந்த தன் தாயை, சுமையாக நினைத்த மகன், வனப்பகுதியில், மலை உச்சியில் போட்டு வர, தன் தோளில் சுமந்து சென்றான். அது நீண்ட, நெடிய ஒத்தையடிப் பாதை பயணம்.
மலையின் உச்சியில் தன்னை போட்டு வரத்தான், தன் மகன் துாக்கி செல்கிறான் என்பது தாய்க்குத் தெரியும். பயணம் துவங்கியது முதல், அந்த தாய், பாதையின் இரு புறங்களிலும் இருந்த செடிகளின் இலைகளை பறித்து போட்ட படியே வந்தாள்.
பயணத்தில், தாயும், மகனும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.மலை உச்சி நெருங்கியதும், செடிகளின் இலையை பறித்து போட்டதற்கான காரணத்தை மகன் கேட்கிறான். 'அது ஒன்றுமில்லை மகனே, என்னை நீ மலை உச்சியில் போட்டு திரும்பும் போது, பாதை தெரியாமல் கஷ்டப்பட்டு விடக் கூடாதல்லவா... அதற்காக தான்' என்கிறாள், தாய்.
அந்த பதிலை கேட்டு, தன் மீதான அவளது அன்பை நினைத்து, கதறி அழுது, தாயுடன் வீடு திரும்புகிறான், மகன். தன் உயிர் போனாலும், தன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவாள் தாய்.முதியவர்கள் தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள, 2007ம் ஆண்டின், பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலச்சட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்
பட்டுள்ளது.அந்த சட்டத்தின் படி, பெற்றோரையும், மூத்த குடிமக்களையும் பராமரிக்காமல் கை விடும் குழந்தை களுக்கு, மூன்று மாதம் சிறை
தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் வழங்க முடியும்.
சமுதாய அவலங்களையும், அநீதிகளையும், சட்டங்களால் மட்டுமே தடுத்து விட முடியாது. அத்தகைய சட்டங்களால், முதியோர் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமே அன்றி, அவர்களுக்கு நன்மை பயக்காது.
அந்த சட்டத்தால் பயன் அடைந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களே அதிகம் என்பது தான், நிதர்சனமான உண்மை.சமீபத்தில், உச்ச நீதிமன்றம், வேடிக்கையான, விசித்திரமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, எஸ்.நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
இந்து மதத்தில் பிறந்த மகன், தன் பெற்றோரை இறுதி வரை காப்பாற்ற வேண்டும். பெற்றோரை
பாதுகாப்பது, அவனுக்கு பக்தியுள்ள கடமை.பெற்றோருக்கு மகன் பணம் செலவழிப்பதை தடுத்து, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என, மனைவி நிர்ப்பந்தித்தால், மனைவியை விவாகரத்து செய்ய,
கணவனுக்கு உரிமை உண்டு.இவ்வாறு அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்து மதத்தில் உள்ள, பக்தியுள்ள கடமையை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், மற்ற மதத்தினருக்கு உள்ள கடமையை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு வேளை, இது மாதிரியான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும் போது, அவர்களுக்கும், இந்த உரிமை வழங்கப்படலாம். ஏனென்றால், தன் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும், மகனுக்கு உள்ளது போல, மகளுக்கும் இருக்கும்; இருக்க வேண்டும்.
மகன் இல்லாத பெற்றோரை யார் தான் கவனிப்பர்... அதனால் தான் இந்த தீர்ப்பு, ஒரு வேடிக்கையான விசித்திரமான தீர்ப்பு என, எண்ணத் தோன்றுகிறது.சமீபத்திய பண்பாட்டு சீரழிவுகளும், சமுதாய கொடுமைகளும், நம் பாரம்பரிய செறிவான, பண்பாட்டு பிணைப்பை வலுவிழக்கச் செய்கிறது. நம் தேசத்தின் சிறப்பே, நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாப்பதில் தான் உள்ளது.
வயதான தாய், தந்தையரை தொட்டிலில் அமர்த்தி, இரு தோள்களிலும் சுமந்து, புனித யாத்திரை மேற்கொண்ட, சிரவணன் பிறந்த நாடு, நம் நாடு.
நமக்கு ஒளியூட்டி, வழிகாட்டியவர்களை உதாசீனப்படுத்துவது, நம் தேசத்திற்கு பெருமை சேர்க்காது.இது போன்ற சமுதாய சீர்கேடுகளை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமில்லையென்றாலும், அதை குறைக்க அரசும், சமுதாய அக்கறை கொண்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்களும், ஊடகங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் போதே, நம் கலாசாரத்தின் பெருமைகளையும், உறவுகளின் அருமைகளையும், முதியோரை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக் கூடத்திலிருந்தே, சமுதாய ஒழுக்கக் கல்வியை மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். தொடர்ச்சியான பழக்கம் தானே, ஒழுக்கமாக மாறுகிறது. ஒழுக்கமற்ற கல்வியை, பாவம் என்கிறார், மஹாத்மா காந்தி.அன்பே உருவான பெற்றோரை சுமையாக நினைத்து, அவர்களை புறக்கணிக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், 'ஒரு கால கட்டத்தில், நமக்கும் முதுமை வரும்; அப்போது நமக்கும், இந்த நிலை வரும்' என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
முதுமையில் உள்ள பெற்றோரும், தங்கள் குழந்தைகளின் சூழ்நிலைகளை புரிந்து, அவர்களோடு விட்டுக்கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். முதுமை, சாய்வு நாற்காலியை தேடுவதற்கல்ல; சாதனைகள் படைப்பதற்கு என முயற்சித்தால், முதுமையை இளமை என்றும் வணங்கும் தானே!இ - மெயில்: gomal_44@yahoo.com நா.பெருமாள்சமூக ஆர்வலர்,மாவட்ட வருவாய் அலுவலர், (ஓய்வு)

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panni Moonji Vaayan - chennai,இந்தியா
08-செப்-201706:43:10 IST Report Abuse
Panni Moonji Vaayan ஒரு கத சொல்லட்டா சார், சார் மூணு புள்ள பெத்துட்டு, மூத்த பய குடிகாரனா மாறி 5 வருஷமா வேலைக்கும் போகாம, விவாகரத்தும் வாங்கிட்டு, ரெண்டாவது பையன் சம்பாத்தியத்துல குடிச்சுட்டு பெத்தவங்கள திட்டி,மிரட்டி, பணம் புடுங்கி, வேதனை படுத்தி, அவர்களை ரெண்டாவது பையனோடும் போக முடியாத ஒரு தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி, அந்த ரெண்டாவது பையன் தனிக்குடுத்தனம் போயி, கேட்ட பெரு வாங்கித்தான் சார்...மாசம் 12000 ரூபா, சொந்த அபார்ட்மெண்ட் பெத்தவங்களுக்கு கொடுத்துட்டான்...அவ்ளோ தான் முடியும்...
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
26-ஆக-201710:06:36 IST Report Abuse
A.Gomathinayagam பெற்றோர்கள் தான் இந்த நிலைக்கு காரணம் .பணம் சார்ந்த படிப்பு , வேலை தான் உயர்வு என்று அவர்களை மூளை சலவை செய்து பணம் சம்பாதிக்கும் ரோபோ வாக மாற்றியது அவர்கள் செய்த மாபெரும் தவறு . அவர்களுக்கு அறம் சார்ந்த திருக்குறள் ,ஆத்திசூடி ,கொன்றைவேந்தன் நன்னூல் இளமையில் சொல்லிக்கொடுக்காமல் ஆங்கில கல்வி தான் சரி என நினைத்தது . இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர்களும் தங்கள் முதுமை காலத்திற்கு வாரிசுகளை சாராமல் வாழ திட்டமிடவேண்டும்.,நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X