'பினாமி' சொத்து பரிவர்த்தனைகள் தகவல் சொன்னால் 10 சதவீதம் பரிசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பினாமி' சொத்து பரிவர்த்தனைகள் தகவல் சொன்னால் 10 சதவீதம் பரிசு

Added : செப் 08, 2017

'பினாமி' சொத்து பரிவர்த்தனை குறித்து, ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு, அந்த சொத்து மதிப்பில், 10 சதவீதத்தை பரிசாக வழங்க, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு முடிவெடுத்து உள்ளது.

கணக்கில் காட்டாத சொத்து, நிலம், தங்கம், ரொக்கம் ஆகியவற்றை, வெளியே கொண்டு வருவதற்காக, 2016 நவம்பரில், பினாமி பரிவர்த்தனை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
அதன்படி, பினாமி பெயர்களில் சொத்து வைத்திருப்போருக்கு, கடுமையான அபராதம் மற்றும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்க, வழி செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, பினாமி சொத்து பரிவர்த்தனையை தடுக்க, தமிழகம் உட்பட, 24 மாநிலங்களில், தனி பிரிவுகளை, வருமான வரித்துறை துவங்கியது. இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக, ஒரு புதிய திட்டத்தை, தமிழக வருமான வரி புலனாய்வுத் துறை அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தான், குறுகிய காலத்தில், 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், இன்னும் ஏராளமான பினாமி சொத்துகள் இருக்கலாம் என, கருதுகிறோம்.
அதனால், அவற்றை கண்டுபிடிக்க, புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, பினாமி சொத்து குறித்து, எங்களுக்கு தகவல் தந்தால், அதை பறிமுதல் செய்த பின், துப்பு கொடுத்த நபருக்கு, அந்த சொத்து மதிப்பில், 10 சதவீதம் பரிசாக வழங்கப்படும். இந்த பரிசு திட்டம், புதுச்சேரிக்கும் பொருந்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

துப்பு கொடுப்பது எப்படி? : தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எவரும், பினாமி சொத்து குறித்து, தகவல் தெரிவிக்கலாம். அதற்கு, சென்னை, நுங்கம்பாக்கம், வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, பினாமி சொத்து தடுப்பு பிரிவில், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பரிசுத் தொகையை, ஒன்றுக்கு மேற்பட்டோர் கேட்பதை தடுத்து, உரிய நபருக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தவே, இந்த ஏற்பாடு. துப்பு தருபவர் குறித்து, ரகசியம் காக்கப்படும். இவ்வாறு வருமான வரித்துறை கூறுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X